03. குட்டி போட்ட பானை

முல்லா ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு பானை இரவல் வாங்கினாராம். பல நாட்கள் வரை முல்லா பானையைத் திருப்பித் தராததால், பக்கத்து வீட்டுக்காரர் வந்து பானையைத் திருப்பி கேட்டார்.

அதற்கு முல்லா “அடடே…, உங்களிடம் வாங்கிய பானையைத் திருப்பிக் கொடுக்காமல் இருந்ததிலும் ஒரு லாபம் இருக்கின்றது.

அந்தப் பானை ஒரு குட்டி போட்டு இருக்கின்றது”, என்று சொல்லி அதனுடன் ஒரு சிறிய பானையும் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் மகிழ்ச்சியில் இரண்டு பானையும் வாங்கிச் சென்றார்.


அதேபோல் சில நாட்களுக்குப் பிறகு முல்லா அந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் “முன்பு கொடுத்ததை விட பெரிய பானை இன்று இரவல் கொடுக்க முடியுமா?” என்று கேட்டார். பக்கத்துவீட்டுகாரர் ஒன்றுக்கு இரண்டாகக் கிடைக்கும் என்று மகிழ்ச்சியில் பெரிய பானை ஒன்றைக் கொடுத்தார்.
பல நாட்கள் ஆகியும் முல்லா பானையைத் திருப்பித் தரவில்லை. பின் தயங்கித் தயங்கி பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து பானையைத் திருப்பிக் கேட்டார்.

 “அத ஏன் கேட்கறீங்க அந்தப் பானை நேற்றுதான் செத்துப் போச்சு” என்றார் முல்லா.

கோபம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்  “என்னது என்னை என்ன இழிச்சாவாயன் என்று நினைத்தாயா? பானை எப்படிச் செத்து போகும்” என்று கோபமுற்றார்.

அதற்கு முல்லா “பானை குட்டி போட்டதை நம்பும் பொழுது ஏன் செத்துப் போனதை நம்பமுடியாது?” என்று கேட்டதும் பக்கத்து வீட்டுக்காரர் தலைகுனிந்து சென்றுவிட்டார்.

திருக்குறள்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.                               (
குறள்:129)

ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.

The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.

21. குரங்கும் முதலையும்

ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அந்த மரத்தில் ஒரு குரங்கு வசித்து  வந்தது. ஒருநாள் ஒரு பெரிய முதலை ஒன்று அந்த நாவல் மரத்தின் அருகில் வந்தது. குரங்கு  அதைப் பார்த்து, ‘‘நீ என் விருந்தாளி. அமுதம் போன்ற நாவற்பழங்களைத் தருகிறேன். சாப்பிடு!’’ என்று கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது. பழங்களை முதலை சாப்பிட்டது. பிறகு தன் மனைவிக்கும் சில பழங்களை எடுத்துச் சென்றது.

‘‘அன்பே, ஒரு குரங்கு என்னுடைய நெருங்கிய நண்பன். அதுதான் இந்தப் பழங்களை எனக்கு அன்போடு தந்தது’’ என்றது முதலை.

அதனைச் சாப்பிட்டபின் முதலையின் மனைவி, ‘‘அமிர்தம்போல் இருக்கும் இந்தப் பழங்களை எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுடைய நெஞ்சும் கட்டாயம் அமிர்தம் போலத்தான் இருக்கும். நீ எனக்கு அந்தக் குரங்கின் நெஞ்சைக் கொண்டுவந்து கொடு. அதை நான் சாப்பிட்டு நோயும் முதுமையும் இல்லாமல் என்றும் உன்னோடு விளையாடிக் கொண்டிருப்பேன்’’ என்றது.

மனைவி சொல்லைத்தட்ட முடியாத முதலை குரங்கிடம் சென்று என் மனைவி உன்னை விருந்துக்கு அழைத்து வரும்மாறு கூறினாள் என்று பொய் சொன்னது.

‘‘நண்பனே, நல்லது ஆனால் உங்களுடைய வீடு நீருக்கடியில் அல்லவா இருக்கிறது! அங்கே நான் எப்படி வரமுடியும்?’’ என்றது குரங்கு.

நண்பனே, கடலுக்கு நடுவில் ஒரு அழகிய மணல்திட்டில் என்வீடு இருக்கிறது. எனவே என் முதுகில் ஏறிக்கொண்டு பயமில்லாமல் வா!’’ என்றது முதலை. அப்படியே குரங்கு முதலையின் முதுகின்மேல் ஏறிக்கொண்டது.

நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும் போது குரங்கைப் பார்த்து, ‘‘நண்பனே, நீ கொடுத்த பழங்கள் அவளுக்கு அமிர்தம் போல் ருசியாயிருந்தன. ஆகவே உன் நெஞ்தைத் தின்ன வேண்டும் என்று அவள் ஆவலாயிருக்கிறாள். இனி உன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்துக்கொள்’’ என்றது முதலை.

உடனே குரங்கு, ‘‘அடடா அப்படியா சங்கதி? அதை நீ ஏன் அங்கேயே என்னிடம் சொல்லவில்லை? நண்பனே, இன்று காலையில் தான் என் இதயத்தைக் கழற்றி நாவல்மரத்தின் பொந்தில் மறைத்து வைத்திருக்கிறேன். முன்பே சொல்லியிருந்தால் அண்ணிக்காக அதை எடுத்துக்கொண்டு வந்திருப்பேனே!’’ என்றது குரங்கு. என்னைத் திரும்ப எடுத்துச் சென்றால் அதை எடுத்துக் கொண்டு வருவேன் என்றது. முதலை அதனை நம்பி நாவல்மரத்தடியை நோக்கித் திரும்பிச் சென்றது. எப்படியோ ஒருவிதமாக கரைக்கு வந்ததும், உயர உயரத் தாவிக் குதித்துச் சென்று அந்த நாவல் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது.


பிறகு குரங்கு முதலையிடம்  சொல்லிற்று. ‘‘சீ, மூடா! நம்பிக்கைத் துரோகி! உன்னுடைய உண்மையான குணம் எனக்கு தெரிந்துவிட்டது. இனிமேல் இந்த நாவல்மரத்தடிக்கு வராதே!” என்றது குரங்கு. முதலை ஏமாற்றத்துடன் திரும்பியது.

நீதி: ஒருவன் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தால், கண்டிப்பாக ஒருநாள் எல்லாவற்றையும் இழந்து ஏமாறுவான்.

19. தீயோரைக் கண்டால் விலகு

ஒரு காட்டில் ஒரு ஓநாய் இருந்தது. அது மிகவும் கெட்ட குணம் கொண்டது. தினமும் பலம் குறைந்த ஏதேனும் விலங்குகளையே, பறவைகளையோ கொன்று தன் பசியை தீர்த்துக்கொள்ளும்.

ஒரு நாள் அது இறந்த ஒரு மிருகத்தின் உடலை தின்றபோது அறியாமல் ஒரு எலும்புத் துண்டையும் சாப்பிட்டது. அந்த எலும்புத்துண்டு அதனுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது.

அதனால் …அவதிப்பட்ட ஓநாயால் எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை..

ஒரு நாரையை அது அணுகி, அதன் அலகால் எலும்புத்துண்டை அகற்றுமாறும் அப்படி அகற்றினால் அந்த நாரைக்கு பரிசு தருவதாகவும் கூறியது.

சரியென்று நாரையும் தன் நீளமான அலகை ஓநாயின் தொண்டைக்குள் விட்டு அங்கே சிக்கிக்கொண்டிருந்த எலும்பை வெளியே எடுத்துவிட்டது.

பின் நாரை ஓநாயிடம் பரிசு கொடுக்குமாறு கேட்டது.

உடனே, ஓநாய் “உனக்குத்தான் ஏற்கனவே வெகுமதி கொடுத்துவிட்டேன்,என்னைப்போன்ற ஓநாயின் வாயில் உன் தலையை விட்டுவிட்டு அதை பத்திரமாக வெளியே எடுக்க  அனுமதித்தேனே, அதுவே உனக்கு சிறந்த பரிசு தான்” என்று கூறிவிட்டது.

நாரை ஏமந்தது. கொடியவர்களுக்கு உதவி செய்தால் பின் அவற்றிடமிருந்து உயிர் தப்புவது பெரிய காரியமாகிவிடும். ஆகவே தீயவரைக் கண்டால் ஒதுங்குவதே சிறந்தது.

18. எல்லாம் நன்மைக்கே

மகத நாட்டு மன்னன் ஒருவன் தனது அமைச்சருடன் வேட்டைக்குச் சென்றான். வில்லை எடுத்து, அம்பைப் பொருத்தி நாணை இழுக்கையில், அவன் கட்டை விரல் துண்டாகிக் கீழே வீழ்ந்தது.

இதைக் கண்ட அமைச்சர், “மன்னா, கவலை வேண்டாம். எல்லாம் நன்மைக்கே” என்றார்.

தன் விரல் போனதை, அமைச்சர் “நன்மைக்கே” என்றதால் கோபமுற்ற மன்னன், அந்த அமைச்சரை சிறையில் அடைத்தான். சில நாட்கள் சென்றன. இம்முறை மன்னன், தனியாக வேட்டைக்குச் சென்றான். அப்போது அங்கு இருந்த காட்டுவாசிகளிடம் சிக்கினான். அவர்கள் தங்களது எல்லைச் சாமிக்கு நரபலி கொடுக்க ஒரு மனிதனைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். மன்னனைக் கண்டதும், அவரை, நரபலி கொடுக்க சிறை பிடித்தனர்.

மன்னனை, குளிப்பாட்டி, சந்தனம் பூசி, பலி பீடத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, அக் காட்டுவாசிகளின் தலைவன், மன்னனுக்கு, கட்டை விரல் இல்லாததைப் பார்த்து, “ஊனமுள்ளவரை பலி கொடுப்பது வீண்” என்று கூறி மன்னனை விடுவித்தான்.

அப்போது மன்னனுக்கு அமைச்சர் சொன்னது நினைவிற்கு வந்தது. ”எல்லாம் நன்மைக்கே”.

அன்று விரல் போனது, நல்லதற்கே. இல்லையேல், இன்று உயிர் போயிருக்குமே. என எண்ணியவன் ஊருக்கு வந்ததும், அமைச்சரை விடுவித்தான்.

அப்போது, அமைச்சர் என்னைச் சிறையில் அடைத்த போது, நான் “அதுவும் நன்மைக்கே” என்று நினத்தேன். அதுவும் பலித்துவிட்டது என்றார்.

மன்னன் “எப்படி” என்று கேட்டான்.

நீங்கள் என்னைச் சிறையில் அடைக்காவிட்டால் நானும் உங்களுடன் வேட்டைக்கு வந்திருப்பேன். உடல் ஊனமில்லாத என்னைக் காட்டுவாசிகள் பலியிட்டிருப்பார்கள்.

நாமும், நமக்கு ஏதேனும் துன்பம் வந்தால், உடனே, வாடிவிடாது.”எல்லாம் நன்மைக்கே” என்று எண்ண வேண்டும். அப்போதுதான், நாளடைவில் துன்பம் அகலும். துன்பத்தின் வலி அதிகம் தெரியாது.

17. கடலைப் போல வாழ்

ஒருநாள் நதி ஒன்று, கிணறு ஒன்றிடம், “நீயும் என்னைப் போல கடலில் கலந்துவிடு வா” என்றது.

அதற்கு கிணறு, “நீ கடலில் கலப்பதற்கு முன், ஆயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீராகவும், உணவு விளைய பாசனத்திற்கும் பயன்படுகிறாய். ஆனால் கடலில் கலந்தபின்னர் உனது தனித்துவத்தை இழந்து விடுகிறாய். பயனில்லா உப்பு நீராகி விடுகிறாய். அதுபோல ஆக நான் விரும்பவில்லை. என் காலம் முழுதும் மக்களுக்கு பயன்படவே விரும்புகிறேன்” என்றது.

இதைக் கேட்ட நதி, “கிணறே, நீ தவறாகப் பேசுகிறாய். நாம் தனித்துவத்துடன் இருப்பதற்குக் காரணமே கடல் தான். அது பார்க்க ஆரவாரமாய் இருந்தாலும், ஆரவாரம் இல்லாமல் தன் பணியைச் செய்து வருகிறது. கடலில் உள்ள நீர்தான் ஆவியாகி, மழைமேகமாக மாறி மழைத் தருகிறது. மக்கள் வாழ்வில் வறட்சியைப் போக்க பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டின் வெப்பதட்ப நிலையை நிர்ணயிக்கிறது. மழையில்லையேல், ஒருநாள் நீ, நான் எல்லாம் வறண்டுவிடுவோம்.” என்றது.

அப்போதுதான் கிணற்றிற்கு கடலின் முக்கியத்துவம் புரிந்தது. ஒருசிலருக்கு பயன் படும், தான் செருக்குடன் இருக்கும் போது உலகிற்கே பயன்படும் கடலின் விளம்பரமின்மைக் கண்டு வியந்தது.

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடல் தன் பணியை ஆற்றிக் கொண்டிருந்தது. நாமும், நம்மால் முடிந்த நல்ல காரியங்களைச் செய்யும்போது, அதற்கான விளம்பரத்தை எதிர்ப்பார்க்காது, நம் மனநிறைவை மட்டுமே எண்ணி செயல்பட வேண்டும்.

15. பேராசை பெருநஷ்டம்

கந்தன் என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் குடிசையில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதாலும் வேலைக்கும் செல்ல முடியாததாலும் அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் ஒரு நாள் அவன் ஆண்டவனை நோக்கி “இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய். இது இப்படியே நீடித்தால், வறுமை தாங்காது, நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை” என வேண்டினான். உடன் இறைவன் நேரில் தோன்றி, அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து ஒவ்வொரு நாளும் ஒரு பொன் முட்டை இடும் என்றும், அதை அன்றன்று விற்று உன் வாழ்நாளைக் கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒரு முட்டையிட அவர்கள் வாழ்வு தினமும் இனிதாகக் கழிந்தது.

ஒரு நாள் கந்தனின் மனைவி அவனிடம் “தினம் தினம் இது பொன் முட்டையிட்டு அதை விற்று நாம் பிழைக்கிறோம். அதற்கு பதில் இதை அறுத்து அதன் வயிற்றில் உள்ள மொத்த பொன் முட்டைகளையும் எடுத்து விற்று நாம் பெரிய பணக்காரராக ஆகிவிடலாமே” என்றாள்.

கந்தனும் அவளது பேச்சைக் கேட்டு, அந்த வாத்தை பிடித்து அதன் வயிற்றைக் கிழித்தான். ஆனால் அதன் வயிற்றில் ஏதும் இல்லை. மற்ற வாத்துக்களைப் போலவே இருந்தது.

முட்டாள் கந்தனும்,மனைவியும் தினமும் அடையும் லாபத்தை விட்டு ஒரே நாளில் பணக்காரராகும் பேராசையுடன் செயல்பட்டதால் இருந்ததையும் இழந்தனர்.

கீழே கொடுத்துள்ள உயிர்மெய்(வ…வௌ) எழுத்துக்களை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

கீழே கொடுத்துள்ள வார்த்தைகளை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

13. வலிமை வேண்டி வரம்

ஒரு காட்டில் சிற்றெறும்பு ஒன்று தன் கூட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தது. அது காட்டில் விலங்குகள் தன்னைவிட வலிமை மிக்க விலங்குகளால் உணவிற்காக கொல்லப்படுவதைப் பார்த்ததும், அந்த விலங்குகளைப் போல தங்கள் இனமும் வலிமை அடையவேண்டும் என விரும்பியது.

ஆகவே அது இறைவனை வேண்டி தவம் இருந்தது. ஒரு நாள் இறைவன் அந்த எறும்பின் முன் தோன்றி “எறும்பே உனக்கு என்ன வேண்டும்” என்றார்.

இறைவன் தன்முன்னே வந்ததுமே, மிகவும் மகிழ்ந்த எறும்பு “நாங்கள் கடித்தால் சாக வேண்டும்”. அந்த வரம் தான் வேண்டும் என்றது.

எறும்பு கேட்டதைக் கண்டு சிரித்த இறைவன் “நன்கு யோசித்துத்தான், கேட்கிறாயா?” என்றார்.

எறும்பும் “ஆம்” யோசித்துத்தான் கேட்கிறேன். என்றது.

“அப்படியே ஆகட்டும்” என்று கூறி மறைந்தார் இறைவன்.

தங்கள் இனத்திற்கு வலிமை சேர்த்துவிட்டதால் மகிழ்ந்த சிற்றெறும்பு தனக்கு கிடைத்த வரத்தை சோதிக்க எண்ணி, காட்டில் வேட்டையாட வந்த வேடனின் காலைக் கடித்தது.

உடனே வேடன்…காலைக் கடித்த எறும்பை ‘பட்’ என அடிக்க அது இறந்தது.

பாவம் எறும்பு, அது இறைவனிடம் கேட்ட வரம், ”நாங்கள் கடித்தால் சாக வேண்டும்” என்பதே. யார் சாக வேண்டும் என கேட்கவில்லை.

தான் கேட்ட வரமே தங்கள் இனத்துக்கு எமனாக வந்துவிட்டதை அது உணரவில்லை.

எறும்பு தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டதே அதன் மரணத்திற்கு காரணமாய் இருந்துவிட்டது.

கீழே கொடுத்துள்ள உயிர்மெய்(ர…ரௌ) எழுத்துக்களை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

கீழே கொடுத்துள்ள வார்த்தைகளை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

11. நாமே முடிவு செய்ய வேண்டும்

ராமன் தனது மனைவியுடனும், அவன் வளர்க்கும் குதிரையுடனும் பக்கத்து ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.

வழியில் அவனது நண்பன் முருகன், நீயாவது, மனைவியாவது குதிரையில் அமர்ந்து செல்லலாமே என்றான். உடனே ராமன் தன் மனைவியை குதிரையின் மீதேற்றி அழைத்து சென்றான்.

அப்போது ராமனின் மற்றொரு நண்பன் கணேசன் வந்தான். ராமா, உன் மனைவியை விட நீ வயதானவன். ஆகவே நீ குதிரையின் மீதேறிச் செல்லலாமே என்றான். உடன் மனைவியை குதிரையிலிருந்து இறக்கிவிட்டு விட்டு ராமன் குதிரை மீதேறி அமர்ந்தான்.

சிறிது தூரம் சென்றதும், கந்தன் வந்தான். அவன் ராமனைப் பார்த்து “குதிரை இரண்டு பேரையுமே சுமக்குமே, இருவரும் குதிரையில் ஏறிச் செல்லலாமே” என்று சொல்ல ராமன் தன் மனைவியையும் குதிரையில் ஏற்றிக் கொண்டு சென்றான்.

அப்போது அவன் மற்றொரு நண்பன் சரவணன் வந்தான்.’ராமா, உனக்கு மூளை இருக்கா? குதிரை வாயில்லா மிருகம். அதில் இருவர் ஏறி அதன் சுமையை ஏற்றலாமோ? என்றான்.

எப்படிச் செய்தாலும் யாரேனும் ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆகவே நாம் அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் மதிப்பளித்தால் முட்டாள் பட்டம் தான் கிடைக்கும்.

ஆகவே மற்றவர்கள் சொல்வதைக்கேட்டு நம் மூளையை உபயோகித்து நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யவேண்டும் என ராமன் உணர்ந்தான்.

படித்துப் பழகுக:

ம…மெள வரிசையில் வார்த்தைகள்:

09. ஒற்றுமையே பலமாம்

நாலு மாடுகள் மிகவும் நண்பர்களாய் இருந்தன. அவை தினமும் காட்டுப்பகுதிக்குச் சென்று புல் மேய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன.

நன்கு கொழுத்துக் காணப்பட்ட அவற்றை அடித்து உண்ண சிங்கம் ஒன்று விரும்பியது. அதற்காக அது ஒரு முறை முயன்றபோது நாலு மாடுகளும் சேர்ந்து சிங்கத்தைத் தாக்கி அதற்கு காயத்தை ஏற்படுத்த தப்பினால் போதும் என அவைகளிடமிருந்து சிங்கம் ஓடியது.

பின் ஒரு நாள், தனக்கு ஆலோசனைகள் கூறும் நரியைப் பார்த்து சிங்கம் அந்த மாடுகளைப் பற்றிக் கூறியது.

அதற்கு நரி, “சிங்க ராஜாவே, அவைகள் ஒற்றுமையாய் இருப்பதாலேயே பலமுள்ளதாய் தெரிகிறது. அவற்றை பிரித்தால், தனித்தனியாக அவற்றை அடித்து உண்ணலாம்” என்று தெரிவித்ததோடு அவற்றை பிரிக்கும் பணியையும் ஏற்றது.

ஒரு நாள் நான்கு மாடுகளில் ஒன்று சற்று தனியாக இருந்தபோது நரி அதைப் பார்த்து “உங்கள் நால்வரில் நீயே பலசாலி. ஆகவே நீ தனித்து புல் மேயப்போனால் உனக்கு அதிக புற்கள் கிடைக்கும். மேலும் உன்னுடைய பலமும் அப்போதுதான் மூன்று பேருக்கும் புரியும்’ என்றது.

அப்படியே மற்ற மூன்று மாடுகளிடமும் சொன்னது. நரி சொல்வதை உண்மை என்று நம்பிய மாடுகள், அடுத்த நாள் தனித்தனியாக புல் மேய தனி இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தன. தினமும் ஒன்றாக அவற்றை சிங்கம் அடித்து உண்டது.

மாடுகள் ஒற்றுமையாய் பிரியாமல் இருந்தால் பலமுள்ளதாக இருந்திருக்கும். பிரிந்ததால் பலமற்றுப் போய் மடிந்தன. ஒற்றுமையாய் இருந்தால் நம்மால் பல சாதனைகளை சாதிக்கமுடியும். ஒற்றுமையின்மையால் நாம் செயலற்று போவோம்.

எழுதிப் பழகுக:

கீழே கொடுத்துள்ள வார்த்தைகளை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

07. நம்பியவரைக் கைவிடாதே

கந்தனின் தந்தையிடம் நூறு ஆடுகள் இருந்தன. தினமும் காலையில் அவர் அவற்றை மேய்க்க ஓட்டிக்கொண்டு காட்டிற்கு செல்வார். மாலை ஆறு மணிக்கு பிறகு அவற்றை திரும்ப வீட்டிற்கு ஓட்டி வந்துவிடுவார்.

அப்படி செல்கையில் ஒரு நாள் மாலை மேய்ந்துவிட்டு வந்ததும் அவற்றை பட்டியலில் அடைக்கு முன் எண்ணிப் பார்த்தார். 99 ஆடுகளே இருந்தன. ஒரு ஆடு குறைந்தது.

எல்லா ஆடுகளையும் அடைத்துவிட்டு காணாமல் போன அந்த ஒரு ஆட்டைத் தேடி மீண்டும் காட்டுப்பகுதிக்குள் சென்றார். கந்தனின் தாயோ  “இரவு நேரத்தில் காட்டிற்குள் செல்லவேண்டாம். ஒரு ஆடு தானே, பரவாயில்லை மீதி 99 ஆடுகள் இருக்கிறதே” என்றாள். ஆனாலும் கந்தனின் தந்தை அந்த ஒரு ஆட்டைத் தேடிச் சென்றார்.

காட்டிலும் மேட்டிலும் அந்த ஆட்டைத் தேடினார். நீண்ட நேரத்திற்கு பின் ஒரு பாறையின் உச்சியில் கீழே இறங்க வழி தெரியாது அந்த ஆடு திணறிக்கொண்டிருப்பதை பார்த்தார். மெல்ல அந்த ஆட்டை பிடித்துக்கொண்டு திரும்பினார்.

அந்த ஆடு நன்றியுடன் அவரைப் பார்த்தது. அதன் கண்களில் நன்றிப் பெருக்கில் கண்ணீர். பின் அவர் கந்தனின் தாயிடம், “நீ ஒரு ஆடு தானே, தேடப் போகவேண்டாம் என்றாய். நான் அப்படிச் செல்லாதிருந்தால் இந்த ஒரு ஆட்டை இழந்திருப்போம்” என்றார். கந்தனும் “ஆமாம் அம்மா” என்றான்.

மேலும் அவனது தந்தைக் கூறினார். “எண்ணிக்கை முக்கியமில்லை. காணாமல் போன அந்த ஆடும் என்னை நம்பியே மேய வந்தது. என்னை நம்பி வந்தது வழிதவறி தடுமாறி திரும்பமுடியவில்லை. ஆயினும் நம்பிய அதை காக்க வேண்டியது என் கடமை. இது ஆட்டிற்கு மட்டுமல்ல அனைவருக்குமே பொருந்தும். நம்மை நம்பியவரை நாம் என்றும் கைவிடக்கூடாது.”

எழுதிப் பழகுக: