05. உனக்கு தெரிந்தைச் செய்

ஒரு அழகிய கிராமம். அந்தக் கிராமத்திற்கு வெளியே பெரிய ஏரி ஒன்று இருந்தது. ஏரியின் கரைகளில் ஒரு மீனவன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். அவர்கள் பெயர் செல்வி, செல்வம். செல்விக்கு பத்து வயது. செல்வத்துக்கு ஐந்து வயது.

அங்கிருக்கும் எல்லாக் குழந்தைகளை விடச் செல்வத்திற்கு சேட்டை அதிகமாக இருந்தது. ஒருநாள் மீனவன் அந்த ஏரிக்கு வந்து மீன் பிடிக்க வலையை வீசினான். நிறைய மீன்கள் வலையில் சிக்கின. அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு, வலை ஈரமாய் இருந்ததால், கரையில் அதைக் காயப் போட்டு விட்டுச் சென்றான்.

அப்போது அங்கே செல்வம் ஓடிவந்து “அப்பா நில்லுங்கள் நில்லுங்கள் நான் வலையை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்றான். அதற்கு மீனவன் “செல்வம், அது வேண்டாம். நீ சின்னவன் உனக்கு அதைத் தூக்க முடியாது. அது நிறைய கனமாக இருக்கும்.” என்று கூறினான்.

“இல்லை அப்பா நான் கொண்டே வருவேன் கொண்டே வருவேன்” என்று செல்வம் அடம் பிடித்தான். ஆனால், செல்வம் அவன் அப்பாவின் பேச்சைக் கேட்கவில்லை.  செல்வம் அந்த வலையத் தூக்கப் பார்த்தான். அப்போது அந்த வலையில் அவன் கைகள் எல்லாம் சிக்கிக் கொண்டன. பயத்தால் அலற ஆரம்பித்தான். “அப்பா, அப்பா என்னைக் காப்பாற்றுங்கள். என் கைகள் எல்லாம் சிக்கிக் கொண்டன” என்று அலற ஆரம்பித்தான். 

அப்போது மீனவன் திரும்பிச் செல்வத்தைப் பார்த்து கிட்டே வந்தான். மீனவன் செல்வத்தின் கைளை வலையிலிருந்து விடுவித்தான். பிறகு மீனவன் செல்வத்தைப் பார்த்து “செல்வம். தெரியாத காரியங்களில் ஈடுபட்டால் இப்படித்தான் அவதிப்பட நேரிடும். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், அதைப் பற்றி தெரிந்துக் கொண்டு ஈடுபட வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்” என்று அறிவுரைச் சொன்னான்.

படித்துப் பழகவும்:

எழுதிப் பழகவும்:

03. உன் திறமையை உணர்

பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து ரமேஷ் அழுது கொண்டிருந்தான். அலுவலகத்திலிருந்து வந்த அப்பா ரமேஷிடம் அவன் அழுகைக்கான காரணத்தைக் கேட்டார்.

ரமேஷ், ‘அப்பா, நான் தொடர்ந்து காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கணக்கில் குறைவான மதிப்பெண்களே வாங்குகிறேன். எனக்கு கணக்கு வராது. என்னால் அப்பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியாது’ என்றான்.

அதற்கு அப்பா, ‘ரமேஷ், உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்’ எனச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒருவனிடம் குட்டியானை ஒன்று இருந்தது. அது ஓடிவிடக்கூடாது என்பதற்காக, ஒரு கயிற்றைக் கொண்டு அதன் காலில் கட்டி பக்கத்திலிருந்த தூணில் இணைத்துவிட்டான்.

யானை வளர்ந்து. பெரிய யானையானது. அது இப்போது நினைத்தால், அந்த தூணுடன் சேர்ந்து கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடியிருக்க முடியும். ஆனாலும் தான் குட்டியாயிருந்தபோது இருந்த பலமே இப்போதும் இருக்கிறது என யானை எண்ணியது. தன்னால் இப்போதும் தப்ப முடியாது என எண்ணியது. அது போல, உனக்கு கணக்கு வராமல் இருந்திருக்கலாம். ஆனால் நீ முயன்றால் கணக்கில் புலி ஆகலாம்.

நீ செய்யவேண்டியதெல்லாம், ‘உன்னிடம் உள்ள திறமையை புரிந்து கொண்டு படிக்கவேண்டும். நம்மால் முடியாது என நினைத்து சும்மா இருந்தால், யானையின் நிலை தான் உனக்கும். முயற்சி திருவினையாக்கும் என்பதை நினைவில் கொள்.

பின்னர், ரமேஷ் தன் திறமையை உணர்ந்து படித்து, கணிதத்தில் வகுப்பில் முதலிடத்தில் வந்தான்.

எழுதிப் பழகவும்.

22. நாயும் எலும்புத்துண்டும்

டாமி என்ற நாய்க்கு ஒரு நாள் எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது.
எலும்பைக் கடித்து அதிக நாட்கள் ஆகிவிட்டபடியால், அது மிகவும் சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டு ஓடியது.

வழியில் ஒரு ஆற்றின் பாலத்தை அது கடக்க நேரிட்டது. அப்போது ஆற்றின் நிழலில், இதன் நிழல் தெரிந்தது. ஆனால் டாமியோ ‘வேறு ஒரு நாய் ஒன்று, தன்னை விட பெரிய எலும்புத் துண்டோடு நிற்கிறது என எண்ணியது.

தன்னிடமிருப்பதைவிட அந்த எலும்புத் துண்டு சற்று பெரிதாக இருப்பதாக எண்ணியது. தண்ணீரில் தெரிந்த தன் நிழலுடன் சண்டைபோட்டு அதை பறிக்க திட்டமிட்டு தன் நிழலைப் பார்த்து குரைத்தது.

அப்போது அதன் வாயிலிருந்த எலும்புத்துண்டு தண்ணீரில் விழுந்தது. டாமி ஏமாந்தது. அதற்கு எதுவுமே இல்லாமல் போயிற்று.

இதனால் நாம் அறிவது என்னவென்றால் நம் கையில் உள்ள பொருளை விட்டு மற்றவர் கையில் உள்ள பொருளுக்கு ஆசைப்படக்கூடாது.

19. கிணற்றுத் தவளை

ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது. அது அங்கேதான் பிறந்து வளர்ந்ததால் கிணற்றைத் தவிர அதற்கு எதுவும் தெரியாது.

ஒரு நாள் வேறு தவளையொன்று அக்கிணற்றுக்கு வந்தது. இரு தவளைகளும் பின்பு நட்புடன் பழக ஆரம்பித்தன.

ஒரு நாள் புது தவளை ‘இந்தக் கிணறு சிறியதாக இருக்கிறது. நான் வாழும் இடம் பெரிது’ என்றது.

‘நீ எங்கே வாழ்கிறாய்?’ என்று கிணற்றுத்தவளை கேட்டது.

புதிய தவளை சிரித்தவாறே  “நான் கடலிலிருந்து வந்தேன். கடல் மிகப்பெரியதாக இருக்கும்” என்றது. “உன் கடல், என் கிணறு போல இருக்குமா?” என்றது கிணற்றுத்தவளை.

அதற்கு புதிய தவளை, ”உன் கிணற்றை அளந்து விடலாம். சமுத்திரத்தை யாராலும் அளக்கமுடியாது” என்றது.

“நீ சொல்வதை என்னால் நம்ப முடியாது. நீ பொய்யன். உன்னுடன் சேர்ந்தால் எனக்கு ஆபத்து” என்றது கிணற்றுத்தவளை.

மேலும், ”பொய்யர்களுக்கு இங்கு இடமில்லை.நீ போகலாம் “என கடல் தவளையை விரட்டியடித்தது. ஆனால் உண்மையில் இழப்பு கிணற்றுத் தவளைக்குத் தான். நாமும் நமக்கு எல்லாம் தெரியும். நாம் இருக்கும் இடமே உலகம், நம் கருத்து எதுவாயினும் அதுவே சிறந்தது என எண்ணி, நம் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் கிணற்றுத் தவளையாய் இருந்து விடக்கூடாது.

15. புறாவும் எறும்பும் – எண்கள்

ஒரு எறும்பிற்கு தாங்க முடியாத தாகம். தண்ணீர் குடிக்க ஒரு நதிக்கு சென்றது. அது தண்ணீர் குடிக்கும் சமயத்தில் வெள்ளம் வந்து அதை அடித்துக்கொண்டு போயிற்று.

தண்ணீரில் மூழ்கும் தறுவாயில் இருந்த எறும்பை அருகாமையில் மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது. உடனே அது மரத்திலிருந்த ஒரு இலையை பறித்து எறும்புக்கு அருகே தண்ணீரில் போட்டது.

இலையின் மேல் எறும்பு மெதுவாக ஏறி கரையைச் சேர்ந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, வேடன் ஒருவன் வந்து,  மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறாவைப் பிடிக்க எண்ணி, அதை நோக்கி வில்லில் அம்பைப் பொருத்தி
குறி பார்த்தான்.

அதை கவனித்துக் கொண்டிருந்த எறும்பு வேடனின் காலில் கடித்தது. அதனால் ஏற்பட்ட வலியில் வேடனின் குறி தப்பியது. புறாவும் அங்கிருந்து “சட்” என பறந்தோடி தப்பியது.

ஒருவர் நமக்கு செய்த உதவிக்காக அவரிடம் நன்றியுள்ளவனாக இருப்பதோடு, சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவருக்கு உதவவும் வேண்டும்.

11. முட்டாள் ஆடுகள்-வடிவங்கள்

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தைக் கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன.

அந்த பாலத்தை ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன.

முதலாவது ஆடு “எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்” என்றது. உடனே, இரண்டாவது ஆடு “நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்” என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமானம் இன்றி ஆற்றில் விழுந்தன.

ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.

நீதி: விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.

வடிவங்கள்

07. முயலும் ஆமையும் -ஆத்திசூடி-1

ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன. அங்கு வசித்து வந்த முயலுக்கு கர்வம் அதிகம். அது தானே இக்காட்டில் வேகமாக ஓடுவேன் என்ற கர்வம் வந்தது.

அப்போது முயல்மெதுவாக நகரக்கூடிய ஆமையிடம் ஏளனமாக தன்னுடன் ஓட்டப் பந்தயத்திற்கு வருமாறு கேட்டது. முதலில் இல்லை என்று கூறிய ஆமை முயலின் கர்வத்தை அடக்க வேண்டுமென நினைத்து போட்டிக்குச் சம்மதம் தெரிவித்தது.

தூரத்தை தீர்மானித்த பின் ஓட்டப் பந்தயம் தொடங்கியது. முயல் ஆமையை விட பன்மடங்கு வேகத்தில் ஓடியது. ஆமையோ மனம் தளராமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது.

முக்கால்வாசி தூரம் வேகமாக ஓடிய முயல் வழியில் ஒரு அற்புதமான சோலையைக் கண்டதும் நிதானித்தது. சிறிது நேரம் ஓய்வெடுத்து பின்பு ஓடலாம் என நினைத்து ஒருமரத்தின் கீழ் உறங்கியது.

வெகு நேரம் கழித்து நம்பிக்கையின்றி அந்த வழியே வந்து கொண்டிருந்த ஆமை, முயல் தூங்கும் காட்சியைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்தது.

ஆமையோ மெது மெதுவாக முயல் தூங்கிய தூரத்தைக்கடந்து முடிவுக்கோட்டை நெருங்கியது. அந்த நேரம் தூக்கம் கலைந்த முயல், ஆமை எல்லையை நெருங்கியதை கண்டு ஓட்டம் பிடித்தது. எனினும் ஆமை வெற்றி இலக்கை அடைந்தது.

ஆமையை கண்டு முயல் வெட்கத்தில் தலைகுனிந்தது.

நீதி: நிதானம் அலட்சியத்தை வெல்லும்.

ஆத்திசூடி