21. வழுக்கைக்கு மருந்து

அந்த அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் “மன்னா! இதற்கு மருந்தே கிடையாது” என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான். ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். “வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா” என்று கூறினர்.

அப்போது இளைய மருத்துவன் “என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்” என்று கூறினான். வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான். அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள். அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். “மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்” என்றான்.

மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்” என்று கிளம்பினான். அப்போது மருத்துவன் “மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!” என்றான்.

முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள்.

அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. “குரங்கை நினைக்கக் கூடாது” என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.

மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான். ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது. பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.

திருக்குறள்

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.                             (குறள்:302)

பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.                     (குறள்:621)

நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை. If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.

17. தென்னை மரம்

அரசர் கிருஷ்ணதேவராயரின் அவைக்கு ஒரு நபர் வந்தார்.அவர் அரசரிடம், “அரசே! என்னுடைய வயலும் பக்கத்து வீட்டுக்காரர் வயலும் அருகருகில் உள்ளன. இரண்டுக்கும் இடையில் உள்ள வரப்பில், ஒரு தென்னை மரம் உள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் அதை எனக்கு விற்று விட்டார். நான்தான் அதை நன்றாகப் பராமரித்து வருகிறேன். இன்று அவர் என்னைத் தேங்காய் பறிக்கக் கூடாது என்றார். இப்போது அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு விட்டாராம். மரம் திரும்ப அவருக்கு வேண்டுமாம்.” என்று முறையிட்டார்.

அதைக் கேட்டு அவையினர் அனைவரும் திடுக்கிட்டனர். அமைச்சர் சொன்னார். “அந்த மனிதாபிமானம் அற்ற மனிதரைக் கைது செய்து வந்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றார். அதற்குள் சேனாதிபதி, அந்த நபரைக் கைது செய்து வரத் தயாராகி விட்டார்.

அப்போது அரசர் “என்ன செய்யலாம்?” என்று கேட்பதைப் போல் தெனாலிராமனைப் பார்த்தார். தெனாலிராமன் புரிந்து கொண்டு, “தாங்கள் அனுமதி தந்தால், இதற்கான தீர்வை நாளைக்குத் தள்ளி வைத்துக் கொள்ளலாம்.” என்றார்.

அரசர், “சரி” எனவே, தெனாலி அந்த நபரிடம், “நாளைக்கு உன் பக்கத்து வீட்டுக்-காரனையும் அழைத்து வா ” என்று அவனை அனுப்பி விட்டார். மறுநாள் அந்த நபரும், பக்கத்து வீட்டுக்காரனும் சபைக்கு வந்தனர். இருவரிடமும் நன்கு விசாரித்த பிறகு தெனாலிராமன் சொன்னார்.

“அப்படியானால் நீ உன் மரத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள விரும்புகிறாய் இல்லையா?” என்றார். அதற்கு அவன், “ஆம் ஐயா!” என்றான்.

“சரி, நீ அவனுடைய பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடு.” என்றார் தெனாலிராமன். அவனும் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டான். சபையினருக்கு ஒன்றும் புரியவில்லை. “தெனாலி ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்?” என்று திகைத்தார்.  பிறகு தெனாலி, மரத்தை வாங்கியவரிடம், “சரி. இன்றிலிருந்து அந்த மரம் உன்னுடையது இல்லை.” என்றார். அந்த மனிதரிடம் ஏமாற்றம்.

அப்போது தெனாலிராமன் தொடர்ந்து, “இன்னொரு விஷயம், அந்த மரம் நீ வாங்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே அதை நீ திரும்பக் கொடுத்து விட வேண்டும்.” என்று கூறி விளக்கினார். அதாவது நீ மரத்தை அவரிடம் வாங்கும்போது அம்மரம் காய்க்கத் தொடங்கவில்லை. ஆகவே, அதைத் திரும்ப ஒப்படைப்பதற்கு முன்பு எல்லாக் காய்களையும் பறித்துக் கொண்டுவிடு.” என்றார் வாங்கியவரிடம்.

திரும்பப் பெற்றவரிடம், “காய் இல்லாத மரத்தைத்தானே நீ விற்றாய்.? ஆகவே, என்றைக்கும் காயில்லாத மரம்தான் உன்னுடையது. அதில் இனிமேல் காய்க்கும் காய்கள் எல்லாம் மரத்தைத் திரும்பக் கொடுத்தவரையே சேரும். அதை அவர் பறித்துக்கொள்ள அவ்வப் போது நீ அனுமதிக்க வேண்டும் தடுக்கக் கூடாது; நீயும் பறித்துக் கொள்ளக் கூடாது.” என்றார்.

தெனாலியின் இத்தீர்ப்பை அரசர் ஆமோதித்தார். திரும்பப் பெற்றவன் முகத்தில் ஏமாற்றம்.  புகார் கொடுத்த நபர் மகிழ்ச்சியுடன் எல்லாரையும் குறிப்பாக, தெனாலிராமனை வணங்கி விட்டு விடைபெற்று சென்றார்.

திருக்குறள்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.                        (குறள்:517)

இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

After having considered, “this man can accomplish this, by these means”, let (the king) leave with him the discharge of that duty.

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.                         (குறள்:478)

வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை. Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.

11. ஒரு குடம் அதிசயம்

பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும்,  தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின்அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது.

அதனால் ஒரு கடிதத்தில், “மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு,  ஆண்டவன் தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக.  தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன்மூலமா அக்பருக்கு அனுப்பினார் காபூல் அரசர்.

கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைத்து, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையேன்னு குழம்பி, அரண்மனையை சுற்றி வலம் வந்தார். அக்பர் முகம் குழப்பத்தில் இருப்பதை பீர்பால் கண்டார். பீர்பால் அக்பரிடம் சென்று இதுபற்றிக் கேட்டார்.

அக்பர் கடிதத்தை பீர்பாலிடம் கொடுத்தார். அந்த கடிதத்தைப் படித்தார் பீர்பால்.  பீர்பால் நீண்ட சிந்தனைக்குப் பிறகு, அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாகப் பதில் எழுதுமாறு சொன்னார்.

அப்புறம் அக்பர், பீர்பாலிடம், “ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்?” என்று விசாரித்தார். அதற்கு பீர்பால், “மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்” என்று சொல்லி விட்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.

பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காய்ச்சிருந்த பூசணிப்பிஞ்சு ஒன்றை கொடியோட மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினார்.

நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால்.

இப்போ அந்தக்குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரியபூசணிக்காயை எப்படி நுழைத்தாய்?

பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அனுப்பச் சொன்னார். அக்பர் தூதன் மூலமாக ஒரு கடிதத்தையும் அந்த குடத்தையும் அனுப்பினார்.

கடிதத்தை காபூல் அரசன் பிரித்து படித்தார். அதில் “நீங்கள் கேட்டது போலவே ஒரு குடம் அதிசயத்தை அனுப்பியிருக்கேன்.” என எழுதியிருந்தார்.

குடத்தின் மேல் இருந்த உறையை பிரித்தார் காபூல் அரசன்! அவரால் அதை நம்ப முடியவில்லை. காரணம் குடத்தின் வாயோ சிறியது. அதற்குள் எப்படி பெரிய பூசணிக்காய் வைத்தார் என்று அவருக்கு புரியவில்லை. அன்று இரவு முழுவதும் இதையே நினைத்துக்கொண்டு இருந்தார். அடுத்த நாள் காபூல் அரசன் அக்பரைக் காணப் புறப்பட்டார். அக்பரின் தலைநகரத்தை அடைந்தார். அவர் அக்பரிடம் சென்று விசாரித்தார். அதற்கு அக்பர் “இதை நான் சொல்வதை விட பீர்பால் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று சொன்னார். பிறகு இருவரும் பயிற்சி கூடத்திற்குச் சென்று பீர்பாலை சந்தித்தனர். பீர்பாலும் அதை எவ்வாறு செய்தார் என்று விளக்கினார். அதைக் கேட்ட காபூல் அரசன் பீர்பாலோட புத்திக்கூர்மையை எண்ணிப் பாராட்டினார்.

திருக்குறள்

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.                       (குறள்:397)

கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?

How anyone can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town)?

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.                           (குறள்:108)

ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.

It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).

03. என் அடிமைகளுக்கு நீ அடிமை

பேரரசன் அலெக்ஸாண்டர் அல்லது மகா அலெக்ஸாண்டர்  என்பவன் கிரேக்கத்தின் ஒரு பகுதியான மெஸடோனின் மன்னன் மெஸடோனின் மூன்றாம் அலெக்ஸாண்டர் எனவும் இவன் அழைக்கப்படுகிறான். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவனாக இவன் போற்றப்படுகிறான். இவன் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவனது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டான்.

அலெக்ஸாண்டர் அவனது தந்தை இரண்டாம் பிலிப் இறந்த பின்னர் மெஸடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டான். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மெஸடோனியாவின் கீழ் ஒன்றிணைத்தான். அலெக்ஸாண்டர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மெஸடோனியாவின் கீழ் இணைத்தான். பின்னர் கிழக்குப் பகுதியில் அக்கீமனிட் (Achaemenid) பாரசிகப் பேரரசைக் கைப்பற்றினான். இவன் அனத்தோலியா (Anatolia), சிரியா (Syria), பினீசியா (Phoenicia), காசா(Gaza), எகிப்து(Egypt), பாக்ட்ரியா (Bactria), மெஸோப்பொத்தேமியா (Mesopotamia) ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தான்.

மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும் படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள். அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பும் முன்னர் மனைவி விரும்பிய பரிசு அவன் நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும் படி ஆணையிட்டான்.

முனிவர் மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அலெக்ஸாண்டரை இது வரை யாரும் இப்படி அலட்சியப் படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.

முனிவரோ அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து “கொல்ல வரும் ஆளைப் பார்த்து சிரிக்கிறீரே! உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டான்.

அதற்கு முனிவர் “மன்னா, நீ இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உன்னால் என் உடம்பை வேண்டுமானால் வெட்டிப் போட முடியுமே தவிர, என்னை அழிக்க உன்னால் இயலாது. இரண்டாவது, என்னுடைய இரண்டு அடிமைகளுக்கு நீ அடிமையாக இருக்கிறாய் என்று பார்க்கும் போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது!” என்றார்.

அலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. “நான் உலகத்திற்கே அரசன். மாவீரன். நான் எப்படி அடிமையாக முடியும்?” என்று முனிவரிடம் கேட்டான். அவர் “அப்பா! கோபமும் ஆசையும் எனக்கு அடிமைகள். நீ அவை இரண்டிற்கும் அடிமையாகக் கிடக்கிறாய். அதைத்தான் நான் சொன்னேன்” என்றார்.

மன்னருக்கு இப்போது விளங்கி விட்டது! முனிவரை வணங்கி விட்டுத் தன் வழியே போய் விட்டான்.

திருக்குறள்

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.                              (குறள்:78)

மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.                     (குறள்:100)

மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.

23. காளியிடம் வரம் பெற்ற கதை

ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை தெனாலி ராமனுக்கு ஏற்பட்டது. அதனால் என்ன செய்வது என்ற கவலை அவனை வாட்டியது.

ஒருநாள் தெனாலிக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிலையைக்கண்டு அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். அந்த மந்திரத்தை பக்தியுடன் சொன்னால் காளி தோன்றுவாள் என்றும் சொல்லிச் சென்றார்.

அதன்படியே இராமனும் ஊருக்கு வெளியே இருந்த காளி கோயிலுக்குச் சென்று முனிவர் கற்றுக் கொடுத்த மந்திரத்தை நூற்றியெட்டு முறை சொன்னான். காளி தோன்றவில்லை. இராமன் யோசித்தான். சட்டென்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. முனிவர் சொன்னது ஆயிரத்துஎட்டு முறை என்பது. உடனே மீண்டும் கண்களை மூடிக் கொண்டு காளி மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினான்.

இரவும் வந்து விட்டது. ஆனாலும் இராமன் காளி கோயிலை விட்டு அகலவில்லை. திடீரென்று காளி அவன் எதிரே தோன்றினாள். “என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கோபமாகக் கேட்டாள் காளி. அவளை வணங்கி எழுந்த இராமன் கைகளைக் கூப்பித் தொழுதவாறே கேட்டான். “தாயே நானோ வறுமையில் வாடுகிறேன். என் வறுமை அகலும் வழியும் எனக்கு நல்லறிவும் தரவேண்டுகிறேன்.” காளி பெரிதாகச் சிரித்தாள்.

“உனக்குப் பேராசைதான். கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டுமா?”

“ஆம் தாயே. புகழடையக் கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும். இரண்டையும் தந்து அருள் செய்ய வேண்டும்.” என்றான் இராமன்.

காளி புன்னகையுடன் தன் இரண்டு கரங்களை நீட்டினாள். அதில் இரண்டு கிண்ணங்கள் பாலுடன் வந்தன. அந்தக் கிண்ணங்களை இராமனிடம் தந்தாள் காளி.

“இராமா! இந்த இரண்டு கிண்ணங்களிலும் உள்ள பால் மிகவும் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை மட்டுமே குடிக்க வேண்டும். உனக்கு எது மிகவும் தேவையோ அந்தக் கிண்ணத்தின் பாலை மட்டும் குடி” என்றாள் புன்னகையுடன்.

இராமன் ” என்ன தாயே! நான் இரண்டையும் தானே கேட்டேன். ஒரு கிண்ணத்தை மட்டும் அருந்தச் சொல்கிறாயே. நான் எதை அருந்துவது தெரியவில்லையே” என்று சற்று நேரம் சிந்திப்பது போல நின்றான். பிறகு சட்டென்று இடது கரத்திலிருந்த பாலை வலது கரத்திலிருந்த கிண்ணத்தில் கொட்டிவிட்டு அந்தக் கிண்ணத்துப் பாலை மடமடவெனக் குடித்து விட்டுச் சிரித்தான். காளி திகைத்து நின்றாள்.

“நான் உன்னை ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்!”
“ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன்.” என்றான்.

“ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?”
“கலக்கக் கூடாது என்று நீ சொல்லவில்லையே தாயே!”

காளி புன்னகை புரிந்தாள். “இராமா! என்னையே ஏமாற்றி விட்டாய். நீ பெரும் புலவன் என்று பெயர் பெறாமல் விகடகவி என்றே பெயர் பெறுவாய்.” என்று வரம் தந்து விட்டு மறைந்தாள். இராமன் விகடகவி என்று சொல்லிப் பார்த்துச் சிரித்துக் கொண்டான். திருப்பிப் படித்தாலும் விகடகவி என்றே வருகிறதே என்று மகிழ்ந்தான்.

திருக்குறள்

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.                                  (குறள்:291)

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.                            (குறள்:71)

அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் த்ன்பத்தைக் காணும் போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்

Is there any fastening that can shut in love? Tears of the affectionate will publish the love that is within.

21. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு

அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்தச் சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடியது.

மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடும். ஆனால் இந்தச் சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன.

ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனைக் கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன. சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தன.

சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்கு நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினமும் ஒவ்வொரு மிருகமாகப் போவது என்று தீர்மானித்தன.

எல்லா மிருகங்களும்  சேர்ந்து குரங்கைத் தூதுவனாக அனுப்பின. சிங்கம் குரங்கை பார்த்து, “உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்திருப்பாய்?” என்றது.

அதற்குக் குரங்கு, “எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருவது என்று முடிவெடுத்துள்ளன. அதனால் சிங்கராசா நீங்கள் இரை தேடி அலையத் தேவையில்லை. இதைச் சொல்லவே நான் குகைக்குள் வந்தேன்.” என்றது.

“ஏன் இந்த முடிவு?” என்றது சிங்கம்.

“தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேட்டையடப்படும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம்” என்றது.

“அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரே நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கும் உணவு கிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள்” என்றது.

இதனைக் கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் “தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும். இல்லையென்றல் அனைவரையும் வேட்டையாடி விடுவேன்” என்றது.

அன்றிலிருந்து தினமும் ஒவ்வொரு மிருகமாகச் சிங்கத்திற்கு இரையாகச் சென்றன. ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது. சிங்கம் முயலைப் பார்த்து “நீ ஏன் தாமதமாக வந்தாய்?” என கர்ச்சித்தது.

அதனைக் கேட்ட முயல் நடுக்கத்துடன் “சிங்கராசா,  நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு பிறகு வருகிறேன்” என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று ஆத்திரத்துடன்  கேட்டது.

அதற்கு “சிங்கராசா வாருங்கள் காட்டுகின்றேன்” என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருக்கிறது என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பார்த்தது. அப்போது சிங்கத்தின் பிம்பம் வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.

பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்கு ஆத்திரம் பொங்கியது. “இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன்” என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது. முயல் துள்ளிக் குதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூறியது. காட்டில் கொண்டாட்டம் தொடங்கியது. முயலின் சமயோசித முயற்சியால் மற்ற மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதி: முயற்சியும் திறமையும் இருந்தால் எதையும் வென்றிடலாம். மேலும் ஆத்திரப்படுபவர்கள் யோசிக்கும் திறன் இழந்து முட்டாளாக ஆகிவிடுகிறார்கள்.

திருக்குறள்

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.                                 (குறள்:400)

கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.

Learning is the true imperishable riches; all other things are not riches.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.                                   
(குறள்: 416)

சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.

Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.

17. ஏமாற்றாதே, ஏமாறாதே

கபாலிபுரம் என்ற மாநகரில் கபிலன் என்ற ஓவியன் இருந்தான். ஓவியம் வரைவதில் மிகுந்த திறமை உடையவன். பணக்காரர்களை ஓவியமாக வரைந்து கொடுப்பான். அவர்களும் அந்த ஓவியத்தை நல்ல விலை கொடுத்து வாங்குவர். அதைத் தங்கள் வீட்டில் அழகாக மாட்டி வைப்பர்.

அந்த ஊரில் ராஜன் என்ற செல்வன் இருந்தான். யாருக்கும் எதையும் தராத கருமி அவன். அவனுடைய பிறந்த நாள் விழா வந்தது. நிறைய உறவினர்கள் விழாவிற்கு வந்திருந்தனர். ராஜனின் இயல்பை அறியாத கபிலன் அந்த விழாவிற்குச் சென்றான். ராஜனை வணங்கிய அவன், “ஐயா! நான் சிறந்த ஓவியன். உங்களை அப்படியே ஓவியமாக வரைந்து தருகிறேன். அதை வரவேற்பு அறையில் அழகாக மாட்டி வைக்கலாம். அந்த ஓவியத்திற்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு கருமி ராஜன், “நீ வரையும் ஓவியம் என்னைப் போலவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஆயிரம் பணம் தருகிறேன். இல்லாவிட்டால் பணம் எதுவும் தரமாட்டேன்,” என்றான். “உங்களைப் போலவே ஓவியம் வரைந்து ஒரு வாரத்தில் தருகிறேன்.  குறை ஏதும் இருந்தால் பணம் தர வேண்டாம்,” என்றான் ஓவியன்.

ராஜனைப் போலவே ஓவியம் வரைந்து எடுத்து வந்தான். அந்த ஓவியத்தை மேலும் கீழும் பார்த்தான் ராஜன். “இந்த ஓவியம் என்னைப் போலவா இருக்கிறது? நீயே பார். இவ்வளவு நரையா என் தலையில் உள்ளது? என்னைக் கிழவனாக்கிவிட்டாயே,  நான் இருப்பது போல இளமையாக ஓவியத்தை வரைந்து கொண்டு வா,” என்றான்.

ஓவியத்தில் வேண்டிய மாற்றங்கள் செய்து, மீண்டும் ராஜனிடம் கொண்டு வந்தான். “என்னைத் தானே ஓவியம் வரையச் சொன்னேன். நீ எவனோ ஓர் இளைஞனை வரைந்து உள்ளாயே, இளமையும் முதுமையும் கலந்தது போல உன்னால் வரைய முடியாதா?” என்று கேட்டான். இப்படியே ஒவ்வொரு முறையும் ஏதெனும் குற்றம் கூறி ஓவியனை அலைக்கழித்தான்.

ஓவியன் பீர்பாலிடம் வந்து நடந்ததை சொன்னான், “அந்தச் செல்வன் ஓவியம் வாங்காமல் என்னை ஏமாற்றுகிறான். என் உழைப்பிற்கு நீங்கள்தான் ஊதியம் வாங்கித் தர வேண்டும்,” என்று வேண்டினான்.

ராஜனை வரவழைத்தார் பீர்பால்.“ஏன் இந்த ஓவியனை ஏமாற்ற நினைக்கிறீர். பலமுறை திருத்தம் செய்தும் ஓவியத்தை வாங்க மறுக்கிறீராமே?” என்று கேட்டார்.“அமைச்சரே! நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னைப் போல ஓவியம் வரைந்து தா. ஆயிரம் பணம் தருகிறேன் என்று இவனிடம் சொன்னேன். இவன் வரைந்த ஓவியம் என்னைப் போல இல்லை. அதனால்தான் பணம் தரவில்லை. என்னைப் போலவே ஓவியம் வரைந்து தரச் சொல்லுங்கள். ஆயிரம் பணத்திற்குப் பதில் இரண்டாயிரமே தருகிறேன்,” என்றான் ராஜன்.“

அதற்கு பீர்பால் “அப்படியா? ஒரு வாரம் சென்று வாருங்கள். உங்களைப் போலவே ஓவியம் இங்கு இருக்கும். அதில் குறை இருந்தால் பணம் தரவேண்டாம்,” என்றார் பீர்பால்.

ஒரு வாரம் சென்றது. பீர்பாலின் மாளிகைக்கு ஓவியன் முதலில் வந்தான். பிறகு ராஜன் வந்தான்.“உங்களைப் போலவே வரையப்பட்ட ஓவியம் இது. திரைச் சீலையால் மூடப்பட்டுள்ளது. சீலையை விலக்கிப் பாருங்கள். சிறு குறையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது,” என்றார்.

“எப்படியும் வரைந்து இருக்கட்டும். குறை கண்டுபிடித்து விடலாம்’ என்று திரையை விலக்கினான் அவன்.அங்கே அவனைப் போலவே ஓவியம் இருந்தது. ஆனால், அந்த ஓவியம் அசைந்தது; கண்களை இமைத்தது. “அது ஓவியம் அல்ல. எதிரே உள்ளவர் வடிவத்தை அப்படியே காட்டும் நிலைக்கண்ணாடி. அதில் தன் வடிவம் தெரிகிறது’ என்பது அவனுக்குப் புரிந்தது.

“அமைச்சரே! இது ஓவியம் அல்ல. முகம் பார்க்கும் கண்ணாடி,” என்றான் அவன்.“கண்ணாடியில்தான் நம் வடிவம் அப்படியே தெரியும். குறை எதுவும் காணமுடியாது. ஓவியம் என்றால் குறைகள் இருக்கத்தான் செய்யும். இந்தக் கண்ணாடியை எடுத்துச் செல்லுங்கள். ஓவியனுக்கு இரண்டாயிரம் பணம் தாருங்கள்,” என்றார் பீர்பால்.“அமைச்சரே! இது நியாயம் அல்ல!” என்றான் அவன்.   “நியாயத்தைப் பற்றி நீங்கள் பேசாதீர்கள்” என்றார் பீர்பால். இரண்டாயிரம் பணம் தந்து இதை வாங்கிச் செல்லுங்கள். இல்லையேல் ஏமாற்ற முயன்றதற்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்,” என்றார் பீர்பால். வேறு வழியில்லாமல் ஓவியனிடம் இரண்டாயிரம் பணம் கொடுத்து அந்தக் கண்ணாடியை எடுத்துக் கொண்டு வருத்தத்துடன் சென்றான் பணக்காரன்.

திருக்குறள்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.                       (குறள்:293)

பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.

Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.                       (குறள்:596)

நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.

In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.

11. வியாபாரியும் கழுதையும்

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

அப்படி ஒரு நாள் வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்து செல்லும் போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கி விட்டான். ஆனால்,  நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை. கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினான்.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போலச் செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது. கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்து வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான்.

அடுத்த நாளும் கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று வியாபாரி கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல, தடுமாறி ஆற்றில் விழுந்தது.

மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டதை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நாமும், நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.

திருக்குறள்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.                            (குறள்:69)

தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

The mother who hears her son called “a wise man” will rejoice more than she did at his birth.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.                             (குறள்:90)

தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.

21. தங்கமீனின் கர்வம்

ஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வசித்தன. அவற்றில் ஒரு தங்க நிற மீனும், ஒரு கெளுத்தி மீனும் நண்பர்களாக இருந்தன. தங்க நிற மீனுக்கு, தான் அழகாய் தங்கம் போல் மினுமினுப்பாய் இருப்பதால் கர்வம் அதிகம். கெளுத்தி மீனிடம் நட்பாக இருந்தாலும் அடிக்கடி அதன் தோற்றத்தைக் கண்டு கேலி செய்யும்.

ஒருநாள், தங்க மீன் மிக ஆனந்தமாய் நீரில் குதித்துக் குதித்து கும்மாளமடித்தது. அப்போது அந்தப் பக்கம் கெளுத்தி மீன் வந்தது. அதைப் பார்த்ததும் தங்க மீனுக்கு குஷி அதிகமாகிவிட்டது.

“ஹாய்… இன்றும் என் அழகைப் பார். என் மினுமினுப்பைப் பார்; வசீகரத்தைப் பார். நாளுக்கு நாள் என் மெருகு எப்படிக் கூடிக் கொண்டே போகிறது பார். உலகில் என் போன்ற அழகிய மீன் எங்கு இருக்க முடியும்? ஹூம்… இறைவன் உன்னையும்தான் படைத்திருக்கிறானே… அவலட்சணமாய், கறுமை நிறத்தில் சொரசொரப்பாய்… என்ன பிறவியோ நீ… இந்தக் குளத்தில் என்னைப் போல் வேறு யாரும் இல்லாததால் உன்னுடன் பழகவேண்டிய சூழ்நிலை. எல்லாம் என் தலையெழுத்து” என்றது.

“தங்க மீனே! நம்மையெல்லாம் படைத்தது இறைவன். உன்னை இத்தனை அழகாய் படைத்ததற்கும், என்னை இத்தனை அவலட்சணமாய்ப் படைத்ததற்கும் ஏதேனும் வலுவான காரணம் இருக்கும். என் தோற்றம் இப்படி இருக்கிறதே என்று எண்ணி என்றுமே நான் கவலைப்பட்டதில்லை. ஆனால், ஒரு விஷயம், உனக்கு பெருமை அதிகமாகிவிட்டது. இது நல்லதல்ல. பெருமை உள்ளவர்களைக் கடவுள் எதிர்த்து நிற்பார்.

“சரிதான்! இது உன் இயலாமையின் வெளிப்பாடு. நிச்சயம் உன்னை உனக்குப் பிடிக்கவில்லை. அதனால் பிடித்தது போல் எதையோ சொல்லிச் சமாளிக்கிறாய். சரிவிடு. சில சமயங்களில் உன்னை நினைத்தால் எனக்குப் பரிதாபமாகத்தான் இருக்கிறது. சரி…சரி… உன்னுடன் பேசிக் கொண்டிருப்பதால் என் மகிழ்ச்சி கெடுகிறது. நான் வருகிறேன்!” என்று சொல்லிவிட்டு துள்ளிக் குதித்துத் திரும்பி, ஆனந்தமாகப் பாட்டுப் பாடியபடி நீரின் மேற்பரப்புக்குச் சென்றது.

திடீரென்று, தன்னை யாரோ கவ்விப் பிடிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு, நிமிர்ந்து பார்த்தது. ஒரு கொக்கின் அலகில் அது சிக்கிக் கொண்டிருந்தது.

“ஐயோ! கொக்கு!” என்று அலறியது தங்க மீன்.

“ஆமாம்! கொக்குதான். என் வாழ்நாளில் உன்னைப் போன்ற அழகிய மினுமினுப்பான மீனை நான் பார்த்ததே இல்லை. குளத்தின் ஆழத்திலேயே என்னமாய் ஜொலிக்கிறாய்; பிரமாதம். இன்று எனக்கு நீ அற்புதமான விருந்து!” என்று கூறி தங்கமீனைத் தின்றது கொக்கு.

அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கெளுத்தி மீன், “தங்க நிற மினுமினுப்பால் தலைக்கணம் பிடித்துத் திரிந்தாயே. அந்த மினுமினுப்பே இன்று உன் உயிருக்கு உலை வைத்துவிட்டது பார்த்தாயா? என்னுடைய அசிங்கமான கரிய நிறம் கொக்கின் பார்வையில் இருந்து என்னை தப்பிக்க வைத்துவிட்டது என்று சொல்லிவிட்டு“, குளத்தின் ஆழத்திற்குச் சென்றது கெளுத்தி மீன்.

நீதி: தலைக்கணத்தால் பிறர் மனம் வருந்துமாறு பேசுபவர்கள், அதற்கான தண்டனையை  பெறுவார்.

திருக்குறள்

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.                                  (குறள்: 292)

குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.

Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.                                   (குறள்: 498)

பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.

The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.

09. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வசித்து வந்தன. கோபுரத்தில் கும்பாபிஷேக வேலைகள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன. செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன.

தானியத்தை உலர்த்தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்துப் பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து, மறுநாள் அதன்படி தயார் செய்து வலை விரித்தான். அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் ஒன்றாக இறக்கையை விரித்து வலையோடு  பறக்க ஆரம்பித்தன.

உடனே வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின.

உடனே நீல நிறப் புறாக்களும்  “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தது. அதனால் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது. இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக “ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களுக்கு நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

திருக்குறள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.                                  (குறள்:314)

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.                          (குறள்:411)

செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.