04. முதலாம் இரண்டாம் வேற்றுமை உருபு

ஒரு பெயர்ச் சொல்லின் பொருளை வேறு படுத்திக் காட்ட உதவும் உறுப்புக்கு வேற்றுமை உருபு என்று பெயர்.

எடுத்துக்காட்டாக கீழே கொடுத்துள்ள இரண்டு வாக்கியங்களைப் பார்ப்போம்.

  1. கந்தன் அடித்தான்.
  2. கந்தனை அடித்தான்.

இதில் இரண்டாவது வாக்கியத்தில் ‘கந்தன்’ என்பது பெயர்ச்சொல். ‘அடித்தான்’ என்பது வினைச்சொல். ‘ஐ’ என்பது வேற்றுமை உருபு.

இதில் சேர்ந்துள்ள ‘ஐ’ என்ற வேற்றுமை உருபு அந்த வாக்கியத்தின் பொருளை மாற்றிக் காட்டுகிறது. முதல் வாக்கியத்தில் கந்தன் அடிக்கிறான். இரண்டாவது வாக்கியத்தில் கந்தன் அடி வாங்குகிறான்.

தமிழில் உள்ள வேற்றுமை உருபுகளை எட்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை

  1. முதல் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை
  2. இரண்டாம் வேற்றுமை – ‘ஐ’
  3. மூன்றாம் வேற்றுமை – ‘ஆல்’
  4. நான்காம் வேற்றுமை – ‘கு’
  5. ஐந்தாம் வேற்றுமை – ‘இன்’’
  6. ஆறாம் வேற்றுமை – ‘அது’
  7. ஏழாம் வேற்றுமை – ‘கண்’
  8. எட்டாம் வேற்றுமை அல்லது விளி வேற்றுமை

முதல் (எழுவாய்) வேற்றுமை:

பெயர்ச் சொல் எந்த மாற்றமும் அடையாமல் நிற்கும்பொழுது எழுவாய் (Subject) எனப்படும். எந்த உருபும் சேராமல் இவ்வாறு எழுவாயாய் அமையும் பெயர்ச் சொல் எழுவாய் வேற்றுமை எனப்படும்.

எழுவாய் வேற்றுமைக்கு தனி உருபு இல்லை. ஆனவன், ஆனவள், ஆனவர், ஆனது, ஆனவை, என்பனவும், என்பவன், என்பவள், என்பவர், என்பது, என்பவை ஆகியவை சொல் உருபுகளாக வரும்.

எடுத்துக்காட்டாக ‘கந்தன் அடித்தான்’ என்ற வாக்கியத்தில் ‘என்பவன்’ என்ற முதலாம் வேற்றுமைச் சொல் உருபு மறைந்து வந்துள்ளது. ‘கந்தன் என்பவன் அடித்தான்’ என்று நாம் புரிந்து கொள்கிறோம்.

இரண்டாம் வேற்றுமை:

இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ மட்டுமே. இது எப்போதும் ஒரு வாக்கியத்தில் செயப்படு பொருளுடன் (Object) இணைந்து வரும். எனவே இதற்கு மற்றோரு பெயர் செயப்படுபொருள் வேற்றுமை என்பதாகும்.

எடுத்துக்காட்டாக, கீழ் வரும் வாக்கியங்களைப் பார்க்கலாம்.

  • நான் பாலைச் சிந்தினேன்
  • நீ மோரைக் குடித்தாய்

மேலும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். இதில் முதல் வாக்கியத்தில் வேற்றுமை உருபு இல்லை. இரண்டாவது வாக்கியத்தில் ‘ஐ’ என்ற வேற்றுமை உருபு உபயோகிக்கப் பட்டுள்ளது.

  1. அவன் ஒரு கடிதம் எழுதினான்
  2. அவன் ஒரு கடிதத்தை  எழுதினான்
  1. அவள் பால் குடித்தாள் 
  2. அவள் பாலைக் குடித்தாள்
  1. நான் அந்த நாய் பார்த்தேன்
  2. நான் அந்த நாயைப் பார்த்தேன்
  1. நீ என் தம்பி கண்டு பிடிப்பாய்
  2. நீ என் தம்பியைக் கண்டு பிடிப்பாய்

இரண்டாவது வாக்கியம் மிகச் சரியானது. இப்போது சில பெயர்ச் சொல்லுடன் இரண்டாம் வேற்றுமை உருபு எவ்வாறு சேருகிறது என்று பார்ப்போம்.

இப்போது சில பிரதிப்பெயர்ச் சொல்லுடன் இரண்டாம் வேற்றுமை உருபு எவ்வாறு சேருகிறது என்று பார்ப்போம்.

இங்கு பிரதிப்பெயர்ச் சொல்லுடன் இரண்டாம் வேற்றுமை உருபு சேரும் போது வார்த்தை முழுவதுமாக மாறுவதைப் பார்க்கவும்.

02. இலக்கணம் – மீள்பார்வை

முந்தைய வகுப்புகளில் எழுத்திலக்கணம் படித்தோம். பிறகு பேச்சின் கூறுகள் (Parts of speech) பற்றி விரிவாகப் படித்தோம். இப்போது நாம் படித்த பேச்சின் கூறுகளை ஒரு முறை ஞாபகப் படுத்திக் கொள்வோம்.

பெயர்சொற்கள்: பொருட்கள், நபர்கள், இடங்கள் போன்றவற்றை குறிக்கும் சொற்கள் பெயர்ச்சொற்களாகும்.

வினைச் சொற்கள்: வினையை அல்லது செயலை குறிக்கும் சொற்கள் வினைச் சொற்களாகும்.

சுட்டுப்பெயர்ச்சொற்கள் / பிரதிப்பெயர்ச்சொற்கள்: ஒன்றின் அல்லது ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல்; அதற்கு பதிலாக சுட்டிக்காட்டிப் பேசுவதற்கு பயன்படும் சொற்கள் சுட்டுப்பெயர்ச்சொற்கள் என அழைக்கப்படும்.

பெயரெச்சங்கள் / பெயரடைகள் / பெயருரிச்சொற்கள்: ஒரு பொருளின், இடத்தின், நபரின் (பெயரின்) குணத்தினை அல்லது தன்மையை மேலும் விவரித்துக்கூற பயன்படும் சொற்கள் பெயரெச்சங்களாகும்.

வினெயெச்சங்கள் / வினையடைகள்  / வினையுரிச்சொற்கள்: வினையின் அல்லது செயலின் தன்மையை மேலும் விவரித்து பேசுவதற்கு பயன்படும் சொற்கள் வினையெச்சங்கள் எனப்படும்.

முன்னிடைச் சொற்கள்: ஒரு சொற்றொடரில் இருசொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை விளக்கும் சொற்கள் முன்னிடைச்சொற்களாகும்.

இணைப்புச் சொற்கள்: இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் மற்றும் வாக்கியங்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தும் சொற்கள் இணைப்புச்சொற்களாகும்.

வியப்பிடைச் சொற்கள்: பேச்சின் பொழுது வியப்பு, ஆச்சரியம் போன்ற உணர்வை வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் வியப்பிடைச் சொற்களாகும்.

வினாச்சொற்கள்:  ஒரு வினா வாக்கியத்தில் வினாவைக் குறிக்கும் சொல் வினாச் சொல்லாகும்.

நிபந்தனைச் சொற்கள்:  ஒரு வாக்கியத்தில் நிபந்தனையை விளக்கும் சொல் நிபந்தனைச் சொல்லாகும்.

இனி இந்த வருடம் வேற்றுமை உருபுகள், வாக்கியங்கள், கூட்டு வாக்கியங்கள், கலவை வாக்கியங்கள், வினா வாக்கியங்கள், செய்வினை வாக்கியங்கள், செயப்பாட்டு வினை வாக்கியங்கள் போன்றவைகளைப் படிக்கலாம். மேலும் தன்மை, முன்னிலை, படர்க்கை வாக்கியங்கள், எழுவாய், செயபடு பொருள், பயனிலை வாக்கியங்களைப் பற்றியும் படிக்கலாம்.

24. எழுதும் முறை – குறியீடுகள்

தமிழ் எழுதும் முறைகளுள் மிகவும் கவனிக்க வேண்டியது, இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் ஆகும். இந்தப் பாடத்தில் சொற்களுக்கு இடையே இடம்விட்டு எழுதுதலையும் சேர்த்து எழுதுதலையும் பற்றி இப்பகுதியில் அறிந்து கொள்க.

எடுத்துக்காட்டாக, ‘பாரதியார்’ என்று சேர்த்து எழுத வேண்டியதைப் ‘பாரதி யார்’ என இடம்விட்டு எழுதினால் அதன் அர்த்தம் மாறி விடுகிறது.

அதேபோல்  “அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றாள்” என்ற வாக்கியத்திற்கும் “அவள், அக்காள் வீட்டிற்குச் சென்றாள்” என்ற வாக்கியத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்க.

“என் தலைவி திவசத்திற்காக விடுப்பு வேண்டும்” என்ற வாக்கியத்தை “என் தலை விதி வசதிற்காக விடுப்பு வேண்டும்” என்று பிரித்து எழுதினால் அதன் பொருள் மாறி விடுகிறது.

மேலும் சில வார்த்தைகளைப் பார்ப்போம்.

எனவே, இடம்விட்டு எழுத வேண்டியதை இடம்விட்டு எழுதவும், சேர்த்து எழுத வேண்டியதைச் சேர்த்து எழுதிடவும் வேண்டும் என்பதையும் அறிந்து நினைவில் கொள்க.

அடுத்து தமிழில் எழுதும் போது குறியீடுகளை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று படிக்கலாம்.

முற்றுப்புள்ளி: இது வாக்கியத்தின் முடிவிலும் சொற்களைச் சுருக்கி எழுதிய எழுத்துக்களின் பின்னும் வரும். எடுத்துக்காட்டாக:

  • கண்ணன் பள்ளிக்குச் சென்றான்.
  • ஐ.எல்.டி.என் இணையதளத் தமிழ்ப் பள்ளி.

காற்புள்ளி: தொடர்பு உடைய பல பொருட்களை அல்லது வாக்கியங்களை பிரித்துக் காட்ட உதவும். எடுத்துக்காட்டாக:

  • தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் சுவையானது.

அரைப்புள்ளி: தொடர்ந்து நிற்கும் சிறு வாக்கியங்களைப் பிரித்துக் காட்டுவது. எடுத்துக்காட்டாக:

  • இராமன் எழுந்தான்; வில்லை சென்று எடுத்தான்; ஒடித்தான்; சீதையை மணந்தான்.

வியப்புக்குறி: வியப்பு, விளி, பரிதாபம் போன்ற உணர்ச்சிகளைக் காட்ட வரும். எடுத்துக்காட்டாக:

  • இது எவ்வளவு பெரிய லட்டு !

வினாக்குறி: இது வினா வாக்கியத்தின் பின்னால் வரும். எடுத்துக்காட்டாக:

  • உனக்கு எந்தப் பழம் பிடிக்கும்?

மேற்கோட் குறி: பிறர் கூறிய சொற்றோடர்களை அவர் கூறியவாறே குறிக்குமிடத்தில் உபயோகிப்பது. எடுத்துக்காட்டாக:

  • “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்பது  ஔவையாரின் கூற்று.

அடைப்புக்குறி: பொருள் விளக்கத்திற்காக வரும் வார்த்தைகளைக் அடைப்புக்குறிக்குள் எழுதுவது வழக்கம்.

  • ஆலும்(ஆலமரமும்) வேலும் (வேப்பமரமும்) பல்லுக்குறுதி.

இதைத்தவிர கீழ்கண்ட கணிதக்குறியீடுகளும் உபயோகத்தில் உண்டு.

22. பெயரும், வினையும், கூட்டு வார்த்தைகள்

தமிழில் ஒரு சொல், பெயர்ச் சொல்லாகவும் அதே சொல் வேறு ஒர் இடத்தில் வினைச் சொல்லாகவும் வரும். இப்போது அவ்வாறு வரும் சில சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.

அடுத்ததாக, தமிழில் கூட்டு வார்த்தைகளைப் பற்றிப் படிப்போம். தமிழில் பல இடங்களில் அடுத்து அடுத்து வரும் இரண்டு வார்த்தைகள் இணைந்து ஒரு வார்த்தையாக வரும். இரண்டு சொற்கள் சேர்ந்து கூட்டுச் சொல்லாக வருவதை ‘புணர்ச்சி’ என்பர். அவ்வாறு சேரும் போது மாறுதல் இல்லாமல் சேர்ந்தால் அது ‘இயல்புப் புணர்ச்சி’. இப்போது அதற்கான சில எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்.

அவ்வாறு சேரும் போது மாறுதல் அடைந்து சேர்ந்தால் அது ‘விகாரப் புணர்ச்சி’. விகாரப் புணர்ச்சியில் புதிதாக ஒரு எழுத்துத் தோன்றலாம்.

விகாரப் புணர்ச்சியில் முதற்சொல்லின் கடைசி எழுத்து திரியலாம். (மாறலாம்).

விகாரப் புணர்ச்சியில் முதற்சொல்லின் கடைசி எழுத்து மறையலாம்.

விகாரப் புணர்ச்சியில் புதிதாக ஒரு சொல் தோன்றலாம் அல்லது பல மாற்றங்கள் பல சேர்ந்து வரலாம்.

20. வினா, வியப்பு, நிபந்தனை சொற்கள்

வினாச்சொற்கள்:

ஒரு வாக்கியத்தை கேள்வி வாக்கியமாக மாற்றுவது வினாச்சொற்கள். எடுத்துக்காட்டாக,

  1. பாலன் பள்ளிக்குச் சென்றான்.

என்பது சாதாரணமான எளிய வாக்கியம். இதனைக் கேள்வி வாக்கியமாக மாற்றும் போது,

  • யார் பள்ளிக்குச் சென்றான்?
  • பாலன் எங்கே சென்றான்?

என்று மாற்றலாம். இவ்வாறு ஒரு வாக்கியத்தைக் கேள்வி வாக்கியமாக மாற்ற உதவும் சொற்களை வினாச்சொற்கள் என்று அழைக்கிறோம். இங்கே சில வினாச்சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

வியப்புச்சொற்கள்:

ஒரு வாக்கியத்தில் ஆச்சரியத்தை, வியப்பை வெளிக்காட்ட உதவும் சொற்கள் வியப்புச் சொற்கள்.  எடுத்துக்காட்டாக,

  1. ஆகா ! பிரமதமான சாப்பாடு.
  2. அடேயப்பா! நீ மகா கெட்டிகாரன்.

இங்கே சில வியப்புச்சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

நிபந்தனைச்சொற்கள்:

ஒரு வாக்கியத்தில் நிபந்தனையைக் குறிக்க வரும் சொற்கள் நிபந்தனைச் சொற்கள். கீழ்கண்ட விகுதிகள் நிபந்தனையைக் காட்டவரும்.

இப்போது, இந்த நிபந்தனைச் சொற்கள் வாக்கியத்தில் எவ்வாறு நிபந்தனையைக் காட்ட வருகிறது என்று காண்போம்.

  1. நாம் வீட்டிற்குப் போனால் சாப்பிடலாம்.
  2. அவன் தேர்வுக்குப் போகாவிட்டால் தேர்வு அடைய முடியாது.
  3. நீ சென்னைக்குப் போனாலும் மந்திரியைப் பார்க்க முடியாது.
  4. நீ போட்டிக்குப் போகாத்தால் அவன் வெற்றி பெற்று விட்டான்.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

இந்த வார்த்தைகளை உபயோகித்து வாக்கியங்கள் எழுத முயற்சிக்கவும்.

18. முன்னிடைச் சொல், இணைப்புச் சொல்

முன்னிடைச் சொற்கள் (Preposition) எனப்படுவது ஒரு சொற்றொடரில் இருசொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை விளக்கும் வார்த்தைகள்.

  1. புத்தகம் மேசையின் மேல் இருந்தது.
  2. பூனை கட்டிலினின் கீழே தூங்கியது.

இதில் புத்தகம், மேசை ஆகியவை பெயர்ச்சொற்கள். ‘மேல்’ என்ற முன்னிடைச்சொல் இவைகளுக்கிடையே ஆன தொடர்பைக் காட்டுகிறது.

அதேபோல், இரண்டாவது வாக்கியத்தில் ‘கீழே’ என்ற முன்னிடைச்சொல் பூனையையும், கட்டிலையும் தொடர்புப்படுத்திக் காட்டுகிறது. 

முன்னிடைச்சொற்களுக்கு மேலும் சில உதாரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் மற்றும் வாக்கியங்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தும் சொற்கள் இணைப்புச் சொற்களாகும் (Conjunction).இதனை இணைப்பிடைசொற்கள் என்றும் அழைப்பர்.

  1. கோவிந்தனும், கோபாலனும் பள்ளிக்குச் சென்றனர்.
  2. அவன் நன்றாகப் படித்தான், ஆனாலும் தேர்வில் தோல்வியுற்றான்.

இங்கு கோவிந்தன் பள்ளிக்குச் சென்றான், கோபாலன் பள்ளிக்குச் சென்றான் என்ற இரு வாக்கியங்களும் இணையும் போது ‘உம்’ என்ற இணைப்புச்சொல் வந்துள்ளது.

இரண்டாவது வாக்கியத்தில் ‘ஆனால்’ என்ற இணைப்புச்சொல் ‘அவன் நன்றாகப் படித்தான்’, ‘அவன் தேர்வில் தோல்வியுற்றான்’ என்ற இரு வாக்கியங்களை இணைக்க உபயோகப்பட்டுள்ளது.

இணைப்புச்சொற்களுக்கு மேலும் சில உதாரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

16. வினையடை/ வினையெச்சம்/வினை உரிச்சொல்

வினையெச்சங்கள் / வினையடைகள் / வினையுரிச்சொற்கள்: வினையின் அல்லது செயலின் தன்மையை மேலும் விவரித்து பேசுவதற்கு பயன்படும் சொற்கள் வினையெச்சங்கள் எனப்படும். எது

எடுத்துக்காட்டாக:

  1. படித்து முடித்தான்
  2. வந்து சென்றான்
  3. ஓடி மறைந்தான்
  4. பாடி முடித்தான்
  5. சென்று வந்தான்

மேற்கண்டவற்றுள் படித்து, வந்து, ஓடி, பாடி, சென்று போன்றவை வினையெச்சங்கள் ஆகும்.  வினையெச்சங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

அவை தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம், எதிர்மறை வினையெச்சம், ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

தெரிநிலை வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டி
வினைச்சொல்லைக் கொண்டு முடிபவை எது.

எடுத்துக்காட்டாக:

  1. வந்து போனான்.
  2. சென்று வந்தான்.

குறிப்பு வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டாமல்
பண்பின் அடிப்படையில் வினைச்சொல்லைக் கொண்டு முடியும். இதனை வினையடை என்றும் அழைப்பர்.

எடுத்துக்காட்டாக:

  1. மெல்ல நடந்தான்
  2. கோபமாக பேசினான்

எதிர்மறை வினையெச்சம் எதிர்மறை அர்த்தத்துடன் வரும்.

எடுத்துக்காட்டாக:

  1. உண்ணாது சென்றான்.
  2. சொல்லாமல் செய்தான்.

ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் என்பது ஈற்றெழுத்து கெட்டுவரும் எதிர்மறைப் வினையெச்சம் ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சமாகும். “ஆ” எனும் விகுதியில் முடியும். எடுத்துக்காட்டாக:

  1. உண்ணா சென்றான்.
  2. பாடா நின்றான்.

இதில் ‘து’ என்ற இறுதி எழுத்து கெட்டு (மறைந்து) வந்துள்ளது. மேலும் ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.

  1. வந்து குளித்து உண்டு உறங்கிப் பேசிச் சென்றான்.

இதில் வினையெச்சச் சொற்கள் அடுத்தடுத்து அடுக்கி வந்து, ஒரே வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது.

14. பெயரடை/ பெயரெச்சம்/பெயர் உரிச்சொல்

பெயரெச்சங்கள் / பெயரடைகள் / பெயருரிச்சொற்கள்: ஒரு பொருளின், இடத்தின், நபரின் (பெயரின்) குணத்தினை அல்லது தன்மையை மேலும் விவரித்துக்கூற பயன்படும் சொற்கள் பெயரெச்சங்களாகும். இவை சுட்டுப்பெயர்களை விவரித்துக் கூறவும் பயன்படும்.

பெயரெச்சம்:  ஒரு வினைச்சொல்லானது பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியுமாயின் அது பெயரெச்சம் ஆகும். எடுத்துக்காட்டாக:

  1. படித்த மாணவன்
  2. வந்த வாகனம்
  3. தந்த பணம்
  4. கண்ட கனவு
  5. சென்ற நாட்கள்

மேற்கண்டவற்றுள் படித்த, வந்த, தந்த, கண்ட, சென்ற போன்றவை பெயரெச்சங்கள் ஆகும். பெயரெச்சம் நான்கு வகைப்படும்.

தெரிநிலைப் பெயரெச்சம் காலத்தை வெளிப்படையாகக் காட்டி,  அச்சொல் முடியாமல் நின்று, பெயர்ச்சொற்களைக் கொண்டு முடிந்தால் அது தெரிநிலைப் பெயரெச்சமாகும். இது மூன்று காலங்களிலும் வரும்.

எடுத்துக்காட்டு:

  1. படித்த மாணவன்
  2. படிக்கின்ற மாணவன்
  3. படிக்கும் மாணவன்

குறிப்புப் பெயரெச்சம் காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், ஒரு செயலை உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி பெயர்ச்சொல்லாக முடிந்தால் அதுவே குறிப்பு பெயரெச்சம் அல்லது பெயரடை எனப்படுகிறது.

எடுத்துக்காட்டு:

  1. நல்ல பையன்
  2. கரிய உருவம்
  3. அழகிய பெண்
  4. உயர்ந்த மனிதன்

எதிர்மறைப் பெயரெச்சம் எதிர்மறை அர்த்தத்துடன் வரும். எடுத்துக்காட்டாக:

  1. பாடாத பைங்கிளி
  2. கேட்காத செவி
  3. பேசாத பெண்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது ஈற்றெழுத்து கெட்டுவரும் எதிர்மறைப் பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாகும். “ஆ” எனும் விகுதியில் முடியும். எடுத்துக்காட்டாக:

  1. பாடா பைங்கிளி
  2. பொய்யா மொழி
  3. வாடா மலர்
  4. பேசா வாய்
  5. செல்லா காசு

இதில் கடைசி எழுத்தான ‘த’ என்னும் எழுத்து கெட்டு (மறைந்து) வந்துள்ளது.

12. வினைச்சொல்-தொகுப்பு

ஒரு சொற்றொடரில் வினையை அல்லது செயலைக் குறிக்கும் சொற்கள் வினைச் சொற்களாகும். ஒரு வினை அல்லது செயல் கடந்தகாலத்தில், நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் நடை பெறலாம். இப்போது ஒரு வினைச் சொல் எவ்வாறு காலம் காட்டுகிறது என்பதைப் படித்தோம்.

வினைச்சொற்கள் எவ்வாறு திணையைக் காட்டுகின்றன என்பதைப் பற்றி மேலும் விரிவாகப் படித்தோம்.

தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். தமிழில் சொற்களை உயர்திணைச் சொல் என்றும், அஃறிணைச் சொல் என்றும் இருவகைகளாகப் பிரிக்கலாம்.

ஆறு அறிவு உள்ள மக்கள் உயர்திணை. அறிவில் குறைந்த ஏனைய உயிரினங்களும், உயிர் இல்லாதனவுமாகிய பொருள்களும், அஃறிணை. அஃறிணை என்பது அல்+திணை, அதாவது உயர்வு அல்லாத திணை என்னும் பொருளைத் தரும்.

வினைச்சொற்கள் எவ்வாறு ‘பால்’, ‘எண்’ காட்டுகின்றன என்பதைப் பற்றி விரிவாகப் படித்தோம்.

தமிழில் ‘பால்’ என்பது ‘Gender’ என்ற பொருளைத் தரும். உயர்திணைக்குரிய பால்: ஆண்பால், பெண்பால், பலர்பால்.அஃறிணைக்குரிய பால்: ஒன்றன் பால், பலவின் பால்.

வினைச்சொல்  ‘எண்களில்’ ஒருமை, பன்மையைக் எவ்வாறு காட்டுகிறது என்று படித்தோம்.

நாம் பேசும்போது பேசுகின்ற நாமும், கேட்கின்றவர்களும், பேசப்படும் பொருளும்  மூன்று நிலைகளில் உள்ளன. இதையே தமிழ் இலக்கணத்தில் இடம் என்று குறிப்பிடப்படுகிறது.

இடம் மூன்று வகைப்படும். எனவே இதை மூவிடம் என்றும் கூறுவார்கள்.  தன்மை – 1st person, முன்னிலை – 2nd person, படர்க்கை – 3rd person.இந்த மூன்று இடங்களையும் வினைச்சொல் எவ்வாறு காட்டுகிறது என்று படித்தோம்.

கீழே ‘வா’ என்னும் வினைச்சொல் எப்படி யெல்லாம் மாறி வருகிறது என்று தொகுத்துள்ளோம்.

10. வினைச்சொல்-இடம்

நாம் பேசும்போது பேசுகின்ற நாமும், கேட்கின்றவர்களும், பேசப்படும் பொருளும்  மூன்று நிலைகளில் உள்ளன. இதையே தமிழ் இலக்கணத்தில் இடம் என்று குறிப்பிடப்படுகிறது. இடம் மூன்று வகைப்படும். எனவே இதை மூவிடம் என்றும் கூறுவார்கள்.

1) தன்மை – 1st person
2) முன்னிலை – 2nd person
3) படர்க்கை – 3rd person

தன்மை: பேசுபவர் தன்னைக் குறிப்பது தன்மைஎனப்படும். இது இரண்டு வகைப்படும்.

  1. தன்மை ஒருமை – 1st person singular
  2. தன்மைப் பன்மை – 1st person plural

தன்மை இடத்தில் ஒருவரைக் குறிப்பது தன்மை ஒருமை எனப்படும். வினைச்சொல்லில் ‘ஏன்’ விகுதி வரும். உதாரணமாக: நான் பேசினேன்
யான் பேசினேன்

உதாரணமாக:  நாம் படித்தோம், யாம் படித்தோம்

     

முன்னிலை: முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை எனப்படும். இது இரண்டு வகைப்படும்.

1) முன்னிலை ஒருமை –  2nd person singular
2) முன்னிலைப் பன்மை – 2nd person plural

முன்னிலை இடத்தில் ஒருவரைக் குறிப்பது முன்னிலை ஒருமை எனப்படும். வினைச்சொல்லில் ‘ஆய்’ விகுதி வரும்.

உதாரணமாக: நீ வந்தாய்

முன்னிலை இடத்தில் பலரைக் குறிப்பது முன்னிலைப் பன்மை எனப்படும். வினைச்சொல்லில் ‘ஈர் / ஈர்கள்’ விகுதி வரும்.

உதாரணமாக: நீர் வந்தீர், நீங்கள் வந்தீர்கள்

படர்க்கை: தன்மையும் முன்னிலையும் அல்லாத பிறர் அல்லது பிற பொருளைக் குறிப்பது படர்க்கை எனப்படும். இது இரு வகைப்படும்.

1) படர்க்கை ஒருமை – 3rd person Singular
2) படர்க்கைப் பன்மை – 3rd person plural

படர்க்கையில் ஒருவர் அல்லது ஒரு பொருளைக் குறிப்பது படர்க்கை ஒருமை எனப்படும். வினைச்சொல்லில் ‘ஆன்/ஆள்/அது’ விகுதி வரும்.

உதாரணமாக:  அவன் வந்தான், அவள் வந்தாள், அது வந்தது

படர்க்கையில் பலர் அல்லது பல பொருளைக் குறிப்பது படர்க்கைப் பன்மை எனப்படும். வினைச்சொல்லில் ‘ஆர்/ஆர்கள்/அன’ விகுதி வரும்.

உதாரணமாக:       அவர் வந்தார், அவை வந்தன.

தன்மை, முன்னிலை ஆகியவற்றைக் குறிக்கும் இடப்பெயர்களில் ஆண்பால், பெண்பால் என்னும் பிரிவுகள் தெரிவதில்லை. ஆனால் படர்க்கைச் சொல்லில் மட்டும் ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால் என்னும் பிரிவுகள் தெரியும்.