24. வாக்கிய வகைகள்-II

தனி வாக்கியங்களைப் பற்றி போன வகுப்பில் படித்தோம். இந்த வகுப்பில் மீதியுள்ள மற்ற மூன்று வகைகளாகிய கூட்டு வாக்கியம், கலப்பு வாக்கியம், கதம்ப வாக்கியங்களைப் பற்றிப் படிக்கலாம்.

கூட்டு வாக்கியம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட தனி வாக்கியங்கள், அதன் அர்த்தத்தின் தொடர்பால் இணைக்கப்படுமானால் அவை கூட்டு வாக்கியம் எனப்படும். இவ்வாறு இணைக்க  இரண்டு தனி வாக்கியங்களுக்கு இடையே “ஆகையால்”, “ஏனெனில்”, “அதனால்”, “எனினும்”, “இருப்பினும்” போன்ற இணைப்புச் சொற்கள் உபயோகப்படும். எடுத்துக்காட்டாக:

  1. காற்று வீசியது; கொடி அசைந்தது.
  2. நீ கிளம்பிச் செல்; நான் பின்னால் வருகிறேன்.
  3. அவன் வீரன் மட்டுமல்ல; சிறந்த அறிவாளியும் ஆவான்.

கலப்பு வாக்கியம் என்பதில் பிரதான வாக்கியம் ஒன்றும் அதனைச் சார்ந்த உப வாக்கியமும் வரும்.

  1. ‘கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்’ என்று ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள்.

“ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள்” என்பது பிரதான வாக்கியம். ‘கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்’ என்பது உப வாக்கியம்.

  1. நான் துணிகளைத் துவைத்து முடித்தபின் குளிக்கச் செல்வேன்.
  2. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.
  3. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதிலை.

கதம்ப வாக்கியம் என்பது தனி வக்கியமும், கூட்டு வாக்கியமும், கலப்பு வாக்கியமும் கலந்து வருவது கதம்ப வாக்கியம் எனப்படும்.

  1. கண்ணதாசன் தன் பாடல்களில் எழுதினார், ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை; ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதிலை’.
  2. குறும்படங்கள் சிறப்பானது, ஆனால் குறும்படங்கள் வந்தபின் முழு நீளத்திரைப்படத்திற்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது.

22. வாக்கிய வகைகள்-I

சொற்கள் பலவும் சேர்ந்திருப்பது மட்டும் வாக்கியமாகாது. சொற்கள் சேர்ந்து ஒரு முழுமையான பொருளை, அர்த்தத்தை தருவதே வாக்கியமாகும். உதாரணமாக

  1. மரத்தை வீழ்த்தினான் வெட்டி கந்தன்.

இந்த வாக்கியம் பல சொற்களைக் கொண்டிருந்தாலும் வாக்கிய அமைப்பு சரியாக அமையாததால் பொருள் தெளிவாக இல்லை. இதையே,

  • கந்தன் மரத்தை வெட்டி வீழ்த்தினான்.

இந்த வாக்கியத்தில் ‘எழுவாய்’ (கந்தன்) வாக்கியத்தின் முதலிலும், ‘பயனிலை’ (வெட்டி வீழ்த்தினான்) கடைசியிலும் வந்துள்ளது. ஒரு வாக்கியத்தில் எழுவாய், பயனிலை இருப்பது அவசியம். சிலசமயங்களில் எழுவாய் மறைந்து வரலாம். ஆனால் பயனிலை இல்லாமல் ஒரு வாக்கியம் முழுமை அடையாது.

நாம் ஏற்கனவே படித்தது போல் எழுவாயும் பயனிலையும் திணை, பால், எண் ஆகியவைகளில் பொருந்தி வர வேண்டும். எடுத்துக்காட்டு:

  1. இராமன் வந்தான்
  2. அவள் பாடினாள்
  3. நாம் விளையாடினோம்.

இப்போது வாக்கியங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. தனி வாக்கியம்
  2. கூட்டு வாக்கியம்
  3. கலப்பு வாக்கியம்
  4. கதம்ப வாக்கியம்

இந்தப் பாடத்தில் நாம் தனிவாக்கியத்தையும், அதன் உட்பிரிவுகளைப் பற்றியும் படிக்கலாம்.

ஒரு வாக்கியத்தில் எழுவாய், பயனிலை உடன் முழு பொருளைத்தருவது தனிவாக்கியம் எனலாம்.

  1. பூனை பாலைக் குடித்தது.
  2. புலி மானைத் துரத்தியது.
  3. கண்ணன் புல்லாங்குழல் ஊதினான்.

மேலே கொடுத்துள்ளவை கூற்று வாக்கியங்கள். இப்போது சில எதிர்மறை வாக்கியங்களைப் பார்க்கலாம்.

  1. இந்தப் பூனை பால் குடிக்காது.
  2. நான் விலங்குகளை அடிக்க மாட்டேன்
  3. அந்தப் பட்டம் பறக்காது.

இது வினா வாக்கியமாகவும் வரும்.

  1. இது எந்த ஊர் ?
  2. நீ எங்கே போகிறாய்?
  3. உனக்கு எந்த நடிகரைப் பிடிக்கும்?

உணர்ச்சி வாக்கியங்களாகவும் வரும்.

  1. எவ்வளவு ருசியான சாப்பாடு !!
  2. எவ்வளவு பெரிய மலை !!
  3. இவ்வளவு கூட்டமா திருவிழாவில்!!

கட்டளை வாக்கியங்களாகவும் வரும்.

  1. நீ நாயுடன் விளையாடாதே.
  2. நீ அந்த உணவைச் சாப்பிடாதே.
  3. நீ அங்கே போகாதே.

இனி அடுத்த பாடத்தில் மற்றவகை வாக்கியங்களைப் பற்றிப் படிக்கலாம்.

20. வினை வகைகள்

ஒரு செயலை விளக்குபவை வினைச்சொற்கள் என்று படித்துள்ளோம். ஒரு வாக்கியத்தில் வினைச்சொல் இல்லாவிடில் அது முழுமையடையாது. ஒரு வாக்கியத்தில் வினையை நான்கு விதமாக அமைக்கலாம்.

  1. தன்வினை
  2. பிறவினை
  3. செய்வினை
  4. செயப்பாட்டு வினை

தன் வினை என்பது ஒரு வாக்கியத்தில் ஒரு செயலை ‘எழுவாய்’ செய்வதாக அமைவது. எடுத்துக்காட்டாக:

  1. நான் பாடினேன்.
  2. குமார் ஓடினான்
  3. இராமன் காட்டுக்குப் போனான்
  4. சூர்யா பள்ளிக்கூடம் சென்றான்.
  5. கமலா பல் துலக்கினாள்.

பிறவினை – ஒருவாக்கியத்தில் ஒரு செயலை ‘எழுவாய்’ தானே செய்யாமால் பிறரைச் செய்ய வைப்பது போல் அமைவது.

  1. தசரதன் இராமனைக் காட்டுக்குப் போகச் செய்தார்.
  2. ஆசிரியர் குமாரைப் படிக்கச் செய்தார்.
  3. வீட்டுக்காரார் வேலைக்காரியைப் பெருக்கச் செய்தார்.

தன்வினை வாக்கியங்களில் ‘எழுவாய்’ வினை செய்வதாக அமைந்துள்ளது. பிறவினை வாக்கியங்களில் ‘எழுவாய்’ பிறரை வினை செய்ய தூண்டுவதாகவோ அல்லது செய்விப்பதாகவோ அமந்துள்ளது.

வினை செய்பவரைக் கர்த்தா என்று குறிப்பிடுவது வழக்கம். அதேபோல் ஒரு வினை செய்ய உதவும் பொருளை அல்லது நபரைக் கருவி என்று குறிப்பிடுவது வழக்கம்.

செய்வினை என்பது கர்த்தாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து கர்த்தாவே “எழுவாயாக” வருமானால் அவ்வாக்கியம் செய்வினை (Active voice) என்று அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக,

  1. கண்ணன் மாம்பழம் சாப்பிட்டான்.
  2. மாலா புத்தகம் படித்தாள்.
  3. கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.

இவ்வாக்கியங்களில் கண்ணன் , மாலா, கண்ணதாசன் ஆகியோர் செயலைச் செய்பவர்கள். அவர்களே இவ்வாக்கியங்களில் எழுவாயாக வந்துள்ளார்கள்.

செயப்பாட்டுவினை என்பது ‘செயப்படு பொருளுக்கு (Object)’, முக்கியத்துவம் கொடுத்து அதுவே ‘எழுவாயாக’ மாறி வருமானால் அவ்வாக்கியம் செயப்பாட்டுவினை என்று அழைக்கப்படும்.

  1. மாம்பழம் கண்ணனால் சாப்பிடப்பட்டது.
  2. புத்தகம் மாலாவால் படிக்கப்பட்டது.
  3. பாடல்கள் கண்ணதாசனால் எழுதப்பட்டன.

செயப்பாட்டு வினைச்சொல் மூன்று காலங்களிலும் வரும். எடுத்துக்காட்டாக,

18. எழுவாய், செயப்படு பொருள், பயனிலை

தமிழில் ஒரு வாக்கியத்தை மூன்று கூறுகளாக பிரிக்கலாம். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை.

எழுவாய் என்பது ஒரு வாக்கியத்தில் செயலை காட்டும் சொல் மீது “யார், எது, எவை” என வினவும் போது கிடைக்கும் பதில் ஆகும்.

  1. நான் படித்தேன்.
  2. நாய் குரைத்தது.
  3. மணிமேகலை தமிழ்ப் பள்ளிக்குச் சென்றாள்.
  4. அவன் மாம்பழம் சாப்பிட்டான்.

முதல் வாக்கியத்தில் ‘யார் படித்தார்?’ என்று கேட்டால் அதற்கு கிடைக்கும் பதில் “நான்”. எனவே அவ்வாக்கியத்தில் “நான்” என்பது எழுவாய்.

அதேபோல் இரண்டாவது வாக்கியத்தில் எது குரைத்தது? என்று கேட்டால் அதற்கு கிடைக்கும் பதில் “நாய்”’. எனவே “நாய்” என்பது எழுவாய்.

சில வாக்கியத்தில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது வரும். உதாரணாமாக

  1. பள்ளியில் பாடம் கற்பித்தார்.

இதில் ஆசிரியர் என்ற “எழுவாய்” மறைந்து வந்துள்ளது.

செயப்படுபொருள் என்பது ஒரு வாக்கியத்தில் “யாரை அல்லது எதை, எவற்றை” என்ற கேள்விக்குப் பதில் ஆகும்.

உதாரணமாக:

  1. முருகன் கபடி விளையாடினான்.
  2. சூர்யா பாட்டுப் பாடினான்.
  3. நாய் பந்தைக் கவ்விக் கொண்டு வந்தது.
  4. கிளிகள் கூட்டை விட்டுப் பறந்தன.

இதில் மூன்றாவது வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். இதில் நாய் எதைக் கவ்விக் கொண்டு வந்தது என்று கேட்டால் அதற்குப் பதில் ‘பந்து’. எனவே பந்து என்பது செயப்படு பொருள் ஆகும். 

செயப்படுபொருள் இல்லாமலோ அல்லது மறைந்தோ ஒரு வாக்கியம் அமையலாம்.

உதாரணமாக:

  1. முருகன் விளையாடினான்.
  2. சூர்யா பாடினான்.

இதில் “செயப்படுபொருள்” மறைந்து வந்துள்ளது.

ஒரு வாக்கியத்தில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல் பயனிலை எனப்படுகிறது.

உதாரணமாக:

  1. முருகன் கபடி விளையாடினான்.
  2. சூர்யா பாட்டுப் பாடினான்.
  3. நாய் பந்தைக் கவ்விக் கொண்டு வந்தது.
  4. கிளிகள் கூட்டை விட்டுப் பறந்தன.
  5. பள்ளியில் பாடம் கற்பித்தார்.

மேற்கண்ட வாக்கியங்களில் வினைச்சொற்கள் “விளையாடினான்”, “பாடினான்”, “கவ்விக் கொண்டு வந்தது”, “பறந்தன”,  “கற்பித்தார்” போன்றவை பயனிலையாகும்.

16. எட்டாம் வேற்றுமை – வேற்றுமைத் தொகை

எட்டாம் வேற்றுமைக்குத் தனியாக உருபு இல்லை. ஒரு பெயர்சொல்லை அழைக்கும் போது சேரும் ஓலியை என்னெவென்று அழைப்பர்? எட்டாம் வேற்றுமைக்கு வேறு பெயர் என்ன?  இது விளிவேற்றுமை என்றும் அழைக்கப் படுகிறது. விளித்தல் என்பதற்கு அழைத்தல் அல்லது கூப்பிடுதல் என்பது பொருள்.

எடுத்துக்காட்டாக, ‘இராமா! வா’ என விளிக்கும்போது (அழைக்கும் போது) இராமன் என்னும் பெயரின் இறுதியில் ‘ஆ’ என்னும் ஒலி சேர்ந்து மாறுதல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பெயர்ச்சொற்கள் விளிக்கப்படும்பொழுது, அவை, ஈறு திரிதலும் (இறுதிஎழுத்து மாறுதல்), ஈறு குன்றலும் (குறைதல்), ஈறு மிகுதலும், இயல்பாக வருதலும், ஈற்றுஅயல் எழுத்துத் திரிதலும் (ஈற்றுஅயல் = இறுதி எழுத்துக்கு முந்தைய எழுத்து) எட்டாம் வேற்றுமை ஆகும்

ஈறுதிரிதலுக்கு எடுத்துக்காட்டாக

இவைகளில் “ஐ” என்னும் இறுதி எழுத்து ஆய் எனத் திரிந்துள்ளது.

ஈறுகுன்றலுக்கு எடுத்துக்காட்டாக

இவைகளில் “ன்” என்ற இறுதி எழுத்துக் குறைந்தது.

ஈறுமிகுதலுக்கு எடுத்துக்காட்டாக

இவைகளில் “ஏ” என்ற இறுதி எழுத்து மிகுந்தது.

இவைகளில் மாற்றம் இன்றி வந்துள்ளது.

இவைகளில் ஈற்றுஅயல் (இறுதி எழுத்துக்கு முந்தையஎழுத்து) நீண்டது. விளிவேற்றுமையில் ஏற்படும் மாறுதல்களை மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் தெளிவுபடுத்துகின்றன.

வேற்றுமைத் தொகை

ஆறு வேற்றுமை உருபுகளும் வெளிப்பட்டு நின்றும் மறைந்து நின்றும் சொற்றொடரில் தம் பொருள் உணர்த்தும். உருபுகள் தோன்றாமல் மறைந்து நின்று சொற்றொடரில் பொருள் உணர்த்தும் தொடர்களே வேற்றுமைத் தொகை எனப்படும்.

“மலைக் கோவில்” இந்த வாக்கியத்தில் மறைந்துள்ள வேற்றுமை எது?

 ஏழாம் வேற்றுமைத் தொகை.

14. ஏழாம் வேற்றுமை உருபுகள்

ஏழாம் வேற்றுமை உருபுக்கு எடுத்துக்காட்டாக கீழே கொடுத்துள்ள சில  வாக்கியங்களைப் பார்ப்போம்.

  1. வீடு ஊரின்கண் உள்ளது.
  2. வீடு ஊரில் உள்ளது.
  3. குழந்தை அம்மாவிடம் சென்றது.

ஏழாம் வேற்றுமை உருபுகள் ‘கண்’ ‘இல்’ ‘இடம்’ ‘.  இதில் ‘கண்’ அதிகமாக தற்காலத்தில் உபயோகத்தில் இல்லை.  அதற்குப் பதிலாக  ‘இல்’ ‘இடம்’ ஆகியவற்றை அதிகமாக உபயோகிக்கிறோம்.

ஏழாம் வேற்றுமை உருபு ஐந்தாம் வேற்றுமை சொல் உருபு ‘இருந்து’, கூடச் சேர்ந்து இலிருந்து, இடமிருந்து என்று வரும்.

  1. அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது.
  2. கிணற்றிலிருந்து நீர் இறைக்கிறார்கள்.

ஏழாம் வேற்றுமை உருபுகள்  வினை நிகழும் இடத்தைக் குறிக்கும் மற்றும் காலத்தையும் குறிக்கும். எனவே ஏழாம் வேற்றுமைக்கு  “இட வேற்றுமை” என்று பெயர் உண்டு.

பெயர்ச் சொல்லுடன் ‘இல்’, ‘இலிருந்து’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

பிரதிப் பெயர்ச் சொல்லுடன் ‘இல்’, ‘இலிருந்து’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

பெயர்ச் சொல்லுடன் ‘இடம்’, ‘இடமிருந்து’ ’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

பிரதிப் பெயர்ச் சொல்லுடன் ‘இடம்’, ‘இடமிருந்து’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

கீழே கொடுத்துள்ள இருபத்தெட்டும் ஏழாம் வேற்றுமை உருபுகளாகும்.  இவைகளின் முக்கியமானவற்றைப் பற்றி நாம் படித்தோம். மற்ற உருபுகளைப் பற்றி நாம் மேல் வகுப்புகளில் படிப்போம்.

  1. கண்-ஊரின்கண்
  2. கால்- ஊர்க்கால்
  3. கடை – வேலின்கடை
  4. இடை- நல்லாரிடை
  5. தலை – வலைத்தலை
  6. வாய் – கடல் வாய்
  7. திசை – தேர்த்திசை
  8. வயின் – அவர் வயின்
  9. முன் – கற்றார் முன்
  10. சார் – பொழில்சார்
  11. வலம் – கைவலம்
  12. இடம் – இல்லிடம்
  13. மேல் – தலைமேல்
  14. கீழ் – நிழற்கீழ்
  15. புடை – எயிற்புடை ( எயில்- மதில்)
  16. முதல் -இந்திரன் முதல்
  17. பின் – காதலி பின்
  18. பாடு — நும்பாடு
  19. அளை – கல்லளை
  20. தேம் – கொடாய்த் தேத்து
  21. உழை – அவணுழை
  22. வழி – நிழல்வழி
  23. உழி – உற்றுழி
  24. உளி – காவுளி ( கா- சோலை)
  25. உள் – குவட்டுள் (குவடு – மலை உச்சி)
  26. அகம் – பல்லாரகத்து
  27. புறம் – உயிர்ப்புறத்து
  28. இல் – ஊரில்

இந்தப் பாடத்தில் ஏழாம் வேற்றுமை உருபுக்களைப் பற்றிப் படித்தோம். இனி அடுத்த வகுப்பில் எட்டாம் வேற்றுமை பற்றிப் படிப்போம்.

12. ஆறாம் வேற்றுமை உருபு

ஆறாம் வேற்றுமை உருபுக்கு எடுத்துக்காட்டாக கீழே கொடுத்துள்ள இரண்டு வாக்கியங்களைப் பார்ப்போம்.

  1. மன்னனது வரவு மக்களுக்கு மகிழ்ச்சி தந்தது.   
  2. எனது கை வலிக்கிறது.
  3. மரத்தினது கிளையில் குருவி அமர்ந்துள்ளது.

இந்த வாக்கியங்களில்

“மன்னன்”, “மரம்”’ ஆகியவை பெயர்ச் சொற்கள். “என்” என்பது பிரதிப் பெயர்ச் சொல். அதனுடன் சேர்ந்து வந்துள்ள ‘அது’ என்பது ஆறாம் வேற்றுமை உருபு. இப்போது மேலும் சில எடுத்துக்காட்டுகள் பார்க்கலாம்.

  1. கண்ணனது பெற்றோர்கள் ஊரில் இருக்கிறார்கள்.
    1. முகிலனுடைய புத்தகம் தொலைந்து விட்டது.

இதில் இரண்டாவது வாக்கியத்தில் ‘முகிலன்’ என்ற பெயர்ச் சொல்லுடன் ‘உடைய’ என்ற ஆறாம் வேற்றுமை சொல் உருபு சேர்ந்துள்ளது.

ஆறாம் வேற்றுமை பெயர் சொல்லின் உடமையை அல்லது உரிமையை விளக்கும்.

ஆறாம் வேற்றுமை உருபுகள் ‘அது’, ‘ஆது’, ‘அ’. மற்றும் ‘உடைய’ என்பது ஆறாம் வேற்றுமையின் சொல் உருபு.

இப்போது சில பெயர்ச் சொல்லுடன் ‘அது’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

இப்போது சில பிரதிப் பெயர்ச் சொல்லுடன் ‘அது’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

இப்போது சில பெயர்ச் சொல்லுடன் ‘உடைய’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

இப்போது சில பிரதிப் பெயர்ச் சொல்லுடன் ‘உடைய’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

இந்தப் பாடத்தில் ஆறாம் வேற்றுமை உருபுக்களைப் பற்றிப் படித்தோம். இனி அடுத்த வகுப்பில் ஏழாம்  வேற்றுமை பற்றிப் படிப்போம்.

10. ஐந்தாம் வேற்றுமை உருபு

ஐந்தாம் வேற்றுமை உருபுக்கு எடுத்துக்காட்டாக கீழே கொடுத்துள்ள இரண்டு வாக்கியங்களைப் பார்ப்போம்.

  1. கிளியின் நிறம் பச்சை  
  2. சிகரத்தில் உயர்ந்தது எவரெஸ்ட்

முதல் வாக்கியத்தில் ‘கிளி, நிறம், பச்சை  ’ என்பது பெயர்ச்சொற்கள்.  ‘இன்’ என்பது ஐந்தாம் வேற்றுமை உருபு.

அதேபோல்  இரண்டாவது வாக்கியத்தில் ‘சிகரத்தில்’ என்ற வார்த்தையில் உள்ள “இல்” என்பது ஐந்தாம் வேற்றுமை உருபு.

ஐந்தாம் வேற்றுமை, ஒரு பெயர்ச் சொல்லின் பண்பை விளக்கும் போது உபயோகிக்கப் படுகிறது. முதல் வாக்கியத்தில் கிளியின் நிறம் ஆகிய பண்பை விளக்க வந்துள்ளது.

ஐந்தாம் வேற்றுமை, ஒரு பெயர்ச் சொல்லின் உயர்வான ஒப்புதலை(Superlative)  விளக்கும் போது உபயோகிக்கப் படுகிறது. இரண்டாவது வாக்கியத்தில் சிகரத்தில் உயரம் எவரெஸ்ட் என்று விளக்க வந்துள்ளது.

ஐந்தாம் வேற்றுமையில்  ‘இன்’, ‘இல்’ என இரண்டு உருபுகள் உள்ளன.  இதைத் தவிர ஐந்தாம் வேற்றுமைக்கு ‘நின்று’, ‘இருந்து’, போன்ற சொல் உருபுகளும் உண்டு.

உதாரணமாக,

  1. ஊரினின்று சென்றான்
  2. ஊரிலிருந்து சென்றான்
  3. வீட்டிலிருந்து பள்ளி வெகுதூரம்

முதல் வாக்கியத்தில் உள்ள ‘நின்று’ ஐந்தாம் வேற்றுமை சொல் உருபு. இரண்டாவது வாக்கியத்தில் ‘இருந்து’ ஐந்தாம் வேற்றுமை சொல் உருபு.

முன்றாவது வாக்கியத்தில் உள்ள ஊருக்காக என்ற வார்த்தையில் ‘இருந்து’ என்ற ஐந்தாம் வேற்றுமை.

இப்போது சில பெயர்ச் சொல்லுடன் ‘இன்’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

இந்தப் பாடத்தில் ஐந்தாம் வேற்றுமை உருபுக்களைப் பற்றிப் படித்தோம். இனி அடுத்த வகுப்பில் ஆறாம் வேற்றுமை பற்றிப் படிப்போம்.

08. நான்காம் வேற்றுமை உருபு

நான்காம் வேற்றுமை உருபுக்கு எடுத்துக்காட்டாக கீழே கொடுத்துள்ள இரண்டு வாக்கியங்களைப் பார்ப்போம்.

  1. கலா மாலாவிற்கு பேனா கொடுத்தாள்.
  2. இந்த உடை குளிருக்கு ஏற்றது.

முதல் வாக்கியத்தில் ‘கலா, மாலா, பேனா’ என்பது பெயர்ச்சொற்கள். ‘கொடுத்தாள்’ என்பது வினைச்சொல். ‘கு’ (விற்கு) என்பது நான்காம் வேற்றுமை உருபு.

அதேபோல்  இரண்டாவது வாக்கியத்தில் ‘குளிருக்கு’ என்ற வார்த்தையில் உள்ள ‘கு’ என்பது நான்காம் வேற்றுமை உருபு.

நான்காம் வேற்றுமையில்  ‘கு’ என்ற ஒரே உருபு உள்ளது.  இதைத் தவிர நான்காம் வேற்றுமைக்கு ‘பொருட்டு’, ‘நிமித்தம்’, ‘ஆக’ போன்ற சொல் உருபுகளும் உண்டு. இதில் ஆக என்ற சொல் உருபு ‘கு’ உடன் சேர்ந்து வரும்.

உதாரணமாக,

  1. அவன் கூலியின் பொருட்டு வேலை செய்தான்.
  2. இவர்கள் உணவின் நிமித்தம் உழைத்தார்கள்.
  3. அவள் ஊருக்காக உழைத்தாள்.

முதல் வாக்கியத்தில் உள்ள ‘பொருட்டு’ நான்காம் வேற்றுமை சொல் உருபு. இரண்டாவது வாக்கியத்தில் ‘நிமித்தம்’ நான்காம் வேற்றுமை சொல் உருபு. முன்றாவது வாக்கியத்தில் உள்ள ஊருக்காக என்ற வார்த்தையில் ‘கு’ என்ற நான்காம் வேற்றுமை உருபுடன் ‘ஆக’ என்ற சொல் உருபு சேர்ந்து வந்துள்ளது. இப்போது சில பெயர்ச் சொல்லுடன் ‘கு’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

இப்போது பிரதிப் பெயர்ச் சொல்லுடன் ‘கு’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

இந்தப் பாடத்தில் நான்காம் வேற்றுமை உருபுக்களைப் பற்றிப் படித்தோம். இனி அடுத்த வகுப்பில் ஐந்தாம் வேற்றுமை பற்றிப் படிப்போம்.

06. மூன்றாம் வேற்றுமை உருபு

மூன்றாம் வேற்றுமை உருபுக்கு எடுத்துக்காட்டாக கீழே கொடுத்துள்ள இரண்டு வாக்கியங்களைப் பார்ப்போம்.

  1. அவன் கையால் தூக்கினான்
  2. இவன் பல்லால் கடித்தான்

முதல் வாக்கியத்தில் ‘அவன்’ என்பது பிரதிப்பெயர்ச்சொல். ‘தூக்கினான்’ என்பது வினைச்சொல். எதால் தூக்கினான் என்று கேட்டால் ‘கையால்’ என்று பதில் வரும். இதில் ‘கை’ என்பது தூக்கினான் என்ற வினையைச் செய்த கருவி. 

இதில் ‘கையால்’ என்பதை ‘கை+ஆல்’ என்று பிரிக்கலாம். ‘கை’ என்பது பெயர்ச்சொல். ‘ஆல்’ என்பது மூன்றாம் வேற்றுமை உருபு.

அதேபோல்  இரண்டாவது வாக்கியத்தில் ‘பல்லால்’ என்ற வார்த்தையில் ‘பல்’ என்பது கடித்தான் என்ற வினையை செய்த கருவி. ‘ஆல்’ என்பது மூன்றாம் வேற்றுமை உருபு.

“ஆல்” என்ற மூன்றாம் வேற்றுமை உருபு ஒரு வாக்கியத்தில் வினையைச் செய்யும் கருவியுடனோ அல்லது வினையைச் செய்யும் நபருடனோ சேர்ந்து வருவதால் இதற்கு கருவி வேற்றுமை என்று மற்றொரு பெயரும் உண்டு.

மூன்றாம் வேற்றுமையில்  மொத்தம் நான்கு உருபுகள் உள்ளன.

  1. ஆல்
  2. ஆன்
  3. ஒடு
  4. ஓடு என்பனவாகும்.

“ஆல்”,”ஆன்” என்ற உருபு கருவிப்பொருளிலும், கருத்தாப் பொருளிலும் வரும்.  “ஒடு”, “ஓடு”  எனும் உருபுகள் உடனிகழ்ச்சி பொருளில் வரும்.

கருவிப் பொருளுடன் வருவதற்கு எடுத்துக்காட்டாக

“இவன் கத்தியால் வெட்டினான்”

‘கருத்தா’ என்பது வினையை தானே செய்பவனையோ அல்லது பிறர் மூலமாக செய்விப்பவரையோ குறிக்கும். உதாரணமாக

“இந்தக் கடை தலைவரால் திறக்கப்பட்டது.”

இதில் தானே வினையைச் செய்தார் தலைவர்.

“இந்தக் கோயில் மன்னனால் கட்டப்பட்டது.”

இதில் மன்னனின் ஆணைப்படி வினை செய்யப்பட்டது.

இப்போது ‘ஓடு’ என்ற வேற்றுமை உருபுக்கு எடுத்துக்காட்டாக

“நான் என் தம்பியோடு சென்றேன்.”

இதில் ‘தம்பி’ வினையை ‘உடன்’ சேர்ந்து செய்பவர்.  இவ்வாறு ‘உடன் நிகழும்’ இடங்களில் ‘ஓடு’ என்ற மூன்றாம் உருபு உபயோகிக்கப் படுகிறது. மற்றும் ஒரு உதாரணமாக

“தாயொடு மகளும் வந்தாள்.”

இத்தொடரில் “மகள்” என்பவர்  “தாயுடன்” சேர்ந்து” வினை செய்பவர். இவ்வாறு ஒரு வினையை “உடன் நிகழ்த்துகிற” பொருளுக்கு உடன் நிகழ்ச்சிப் பொருள் என்று பெயர்.

சில இடங்களில் சொற்கள் மூன்றாம் வேற்றுமையாக வரும். அவ்வாறு மூன்றாம்வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள்: ‘கொண்டு’, ‘உடன்’ ஆகியன. உதாரணமாக

பாண்டியன் வாள்கொண்டு வெட்டினான்.

இதில் ‘கொண்டு’ என்ற சொல்லுருபு கருவிப்பொருளுக்கு வந்தது.

ஆசிரியருடன் மாணவன் வந்தான்.

இதில் ‘உடன்’ என்ற சொல்லுருபு உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது.

இப்போது சில பெயர்ச் சொல்லுடன் ‘”ஆல்”’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

இப்போது பிரதிப் பெயர்ச் சொல்லுடன் ‘ஆல்’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

இப்போது சில பெயர்ச் சொல்லுடன் “ஓடு” சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

இப்போது பிரதிப் பெயர்ச் சொல்லுடன் “ஓடு” சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.

இந்தப் பாடத்தில் மூன்றாம் வேற்றுமை உருபுக்களைப் பற்றிப் படித்தோம். இனி அடுத்த வகுப்பில் நான்காம் வேற்றுமை பற்றிப் படிப்போம்.