கன்யாகுமரி, இந்து மகா சமுத்திரம், வங்காள விரிகுடா, அரபிக்கடல் ஆகிய மூன்று கடல்கள் சேருமிடத்தில் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரை பகுதியுடன் கூடிய மண்பரப்பு, பல நிறமுடைய மண்வெளிகளைக் கொண்டது. சூரிய உதயம், அஸ்தமனம் ஆகிய இரண்டையும் கன்யாகுமரியின் கடற்கரையிலிருந்து பார்க்கலாம் இச்சூரியக் காட்சிகள் இவ்வூரின் நினைவு கூறத்தக்க அனுபவங்களாகும்.
இவ்வூருக்கு, கன்யாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ்பெற்ற கன்யாகுமாரி அம்மன் கோவில் அமைந்திருப்பதால் கிடைத்துள்ளது. கன்யாகுமாரி, சிவனுக்காக தவம் செய்து, கன்னியாக கோவில் கொண்டுள்ள இடம். இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் ‘குமரிப் பகவதி’ என்னும் பெயருடன் சிவனை சேர விரும்பினாள். அதன் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்தாள் என்று கூறப்படுகிறது.
இந்தக் கோவிலின் குமரி அம்மன் அணிந்துள்ள வைர மூக்குத்தியின் ஒளி கடலில் பிரதிபலிக்குமாம். இந்த ஒளியைக் கொண்டுதான் ஆங்கிலேயர் கன்யாகுமரியைக் கண்டு பிடித்தார்கள் என்று ஒரு கதையும் உண்டு.
சுவாமி விவேகானந்தர் கன்யாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கிறார். அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாறைக்கு விவேகனந்தர் பாறை என்ற பெயரும் உண்டு.
இங்கு திருவள்ளுவர் சிலை விவேகனந்தர்
பாறைக்கு அடுத்து நிறுவப்பட்டுள்ளது. இது கன்யாகுமரியின் முக்கிய அடையாளங்களின்
ஒன்று. கன்யாகுமரியில், திருவள்ளுவரின்
புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான இச்சிலை தமிழக அரசால்
நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது. மேலும், சிலையின் உட்புறச்
சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள்
தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.
காந்தி மண்டபம் கன்யாகுமரியில் மகாத்மா காந்தியின் சாம்பல் (அஸ்தி) வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபமாகும். இம்மண்டபத்தில் உள்ள மையக்கூண்டு 79 மீட்டர் உயரம் கொண்டது. இது காந்தியின் வயதைக் குறிப்பிடுவதாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் காந்தியடிகள் பிறந்த தினமாகிய அக்டோபர் 2ம் தேதி சூரிய கதிர்கள் காந்தியின் சாம்பல் வைத்திருக்கும் இடத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஈர்க்கும் ஒரு இடமாகத் திகழ்கிறது. குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. சங்கு, பனை ஓலையினாலான கைவினைப்பொருட்கள் சிறப்பு வாய்ந்தவை.
விவேகானந்தா கேந்திரா, குகநாத சாமி கோவில், சிவன் வல்லக்கோட்டை, சுசீந்திரம், நாகர்கோவில், உதயகிரி துறைமுகம், பத்மநாபபுரம், பேச்சிப்பாறை அணை, அரசு பழதோட்டம், திருவரூர், திருநந்திக்கரை, முட்டம், ஆகியவை இம்மாவட்டத்தின் காணந்தகுந்த இடங்கள்.
திருக்குறள்
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (குறள்:504)
ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
Let (a king) consider (a man’s) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (குறள்:1031)
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.
Agriculture, though laborious, is the most excellent (form of labor); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.