25. தமிழ்ப் புத்தாண்டு

உங்கள் எல்லோருக்கும் தமிழ் மாதங்களை வரிசையாகச் சொல்லத் தெரியுமா?  அவைகள்: சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி. இதில் தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை. சித்திரையின் முதல் நாள் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

வருடத்தின் முதலாக வசந்தகாலம் வந்தால் வருடம் முழுவதும் மக்கள் வாழ்வில் வசந்தகாலம் தங்கும் என்று உணர்ச்சி பூர்வமாக முடிவெடுத்து சித்திரையைத் தமிழ் ஆண்டின் தொடக்க மாதமாக வைத்தனரோ? தமிழ் நாட்டில் கோலாகலமான கோயில் விழாக்கள் பெரும்பாலும் சித்திரை, வைகாசி மாதங்களில் அதாவது, வசந்தகாலத்திலேயே கொண்டாடப்படும். அது இயற்கை செழிக்கத் துவங்கும் காலம். அப்போதுதான் மக்களுக்கு மனதில் மகிழ்ச்சியோடு பக்தியும் பெருகும்.

தமிழ்ப் புத்தாண்டு அன்று அறுசுவை உணவு மிகவும் முக்கிய இடம் வகிக்கிறது. இனிப்பு, கரிப்பு, எரிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு இந்த எல்லாச் சுவைகளும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பதைக் காட்டும் வகையில் அன்று வீடுகளில் விருந்து தயாரிக்கப்படுகிறது. பருப்புப் பாயசம், தயிர்ப் பச்சடி, இனிப்பும், கசப்பும், காரமும் சேர்ந்த மாங்காய்ப் பச்சடி, வாழைக்காய்ப் பொரியல், எல்லாக் காய்களும் போட்ட கூட்டு அல்லது அவியல், கிழங்குகள் போட்டு சாம்பார் அல்லது சேப்பங்கிழங்கும் பூசணிக்காயும் போட்ட மோர்க்குழம்பு, வேப்பம் பூ ரசம், பருப்பு வடை இவை பெரும்பாலும் சமையலில் இடம் பெற்றிருக்கும்.

தலைவாழை இலையில் மேற்கூறிய உணவுப் பொருட்களை வைத்து கடவுளுக்கு நிவேதனம் செய்வார்கள். அன்று சிவ-விஷ்ணு வழிபாடு செய்வதும், விஷ்ணு சகஸ்ரநாமம், திருப்பதிகம் படிப்பதும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. புதிய பஞ்சாங்கத்தினை சுவாமி அறையில் வைத்து வணங்குவதும் சிலரது வழக்கம்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் அன்று கனி காணல் என்றொரு பழக்கம் இருக்கிறது. புத்தாண்டு துவங்குவதற்கு முன் தினம் இரவு, பூஜை அறையை சுத்தம் செய்து எல்லா தெய்வப் படங்களுக்கும், பூ வைப்பார்கள். ஒரு கண்ணாடியை வைத்து அதன் முன்னால், கனிவகைகள் ஒரு தட்டில், காய் வகைகள் ஒரு தட்டில், அரிசி மற்றும் பருப்பு ஒரு தட்டில், பணம் ஒரு தட்டில், தங்க நகைகள் ஒரு தட்டில், கொன்றை பூக்கள் ஒரு தட்டில் என கடவுள் படத்தின்  முன்னால் வைப்பார்கள்.

மறுநாள் விடியலிலேயே குடும்பத்தின் பெரியவர் விழித்துக் கொண்டு தன் கைகளால் கண்களை மூடிக் கொண்டு அந்த பூஜையறையில் வைத்திருக்கும் தட்டுகளிலும், கடவுள் படங்களிலும் கண் விழிப்பார். பின்னர் குளித்து சுத்தமான பட்டுத் துணி உடுத்தி, மற்ற குடும்ப அங்கத்தினர்களை எழுப்பிக் கண்களைப் பொத்தியவாறு அழைத்து வந்து தெய்வங்களையும் அந்தத் தட்டுகளையும் முதலில் காண வைப்பார்கள்.

இதற்கு கனி காணல் என்று பெயர். அவ்வாறு செய்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல செழிப்புடனும், செல்வ வளத்துடனும் திகழும் என்று நம்பிக்கை. வீட்டில் பழங்கள் தானியங்களுக்குக் குறைவிருக்காது என்பது ஐதீகம். நெல்லை, கன்யாகுமரி மாவட்டத்தில் கேரளாவை ஒட்டிய பகுதிகளில் வாழும் தமிழர்களும் இப்பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். தமிழர்களாகிய நாமும், இந்தத் தமிழ்ப்புத்தாண்டு நன்னாளை மிகக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்வோம். ஆறு சுவையுடைய பொருட்களை இறைவனுக்குப் படைத்து எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும், வாழ்க்கையில் இனிமையே மிகுந்து இருக்க வேண்டும் என்று வேண்டிடுவோம். ஆண்டின் துவக்கத்தில் ஆண்டவனை வேண்டினால், வருடம் முழுதும் வாழ்க்கை வசந்தம் போலவே இருக்க அருள் புரிவான் இறைவன்.

திருக்குறள்

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.                                (குறள்:67)

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.                       (குறள்:1040)

நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life.