24. வாக்கிய வகைகள்-II

தனி வாக்கியங்களைப் பற்றி போன வகுப்பில் படித்தோம். இந்த வகுப்பில் மீதியுள்ள மற்ற மூன்று வகைகளாகிய கூட்டு வாக்கியம், கலப்பு வாக்கியம், கதம்ப வாக்கியங்களைப் பற்றிப் படிக்கலாம்.

கூட்டு வாக்கியம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட தனி வாக்கியங்கள், அதன் அர்த்தத்தின் தொடர்பால் இணைக்கப்படுமானால் அவை கூட்டு வாக்கியம் எனப்படும். இவ்வாறு இணைக்க  இரண்டு தனி வாக்கியங்களுக்கு இடையே “ஆகையால்”, “ஏனெனில்”, “அதனால்”, “எனினும்”, “இருப்பினும்” போன்ற இணைப்புச் சொற்கள் உபயோகப்படும். எடுத்துக்காட்டாக:

  1. காற்று வீசியது; கொடி அசைந்தது.
  2. நீ கிளம்பிச் செல்; நான் பின்னால் வருகிறேன்.
  3. அவன் வீரன் மட்டுமல்ல; சிறந்த அறிவாளியும் ஆவான்.

கலப்பு வாக்கியம் என்பதில் பிரதான வாக்கியம் ஒன்றும் அதனைச் சார்ந்த உப வாக்கியமும் வரும்.

  1. ‘கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்’ என்று ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள்.

“ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள்” என்பது பிரதான வாக்கியம். ‘கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்’ என்பது உப வாக்கியம்.

  1. நான் துணிகளைத் துவைத்து முடித்தபின் குளிக்கச் செல்வேன்.
  2. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.
  3. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதிலை.

கதம்ப வாக்கியம் என்பது தனி வக்கியமும், கூட்டு வாக்கியமும், கலப்பு வாக்கியமும் கலந்து வருவது கதம்ப வாக்கியம் எனப்படும்.

  1. கண்ணதாசன் தன் பாடல்களில் எழுதினார், ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை; ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதிலை’.
  2. குறும்படங்கள் சிறப்பானது, ஆனால் குறும்படங்கள் வந்தபின் முழு நீளத்திரைப்படத்திற்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது.