22. வாக்கிய வகைகள்-I

சொற்கள் பலவும் சேர்ந்திருப்பது மட்டும் வாக்கியமாகாது. சொற்கள் சேர்ந்து ஒரு முழுமையான பொருளை, அர்த்தத்தை தருவதே வாக்கியமாகும். உதாரணமாக

 1. மரத்தை வீழ்த்தினான் வெட்டி கந்தன்.

இந்த வாக்கியம் பல சொற்களைக் கொண்டிருந்தாலும் வாக்கிய அமைப்பு சரியாக அமையாததால் பொருள் தெளிவாக இல்லை. இதையே,

 • கந்தன் மரத்தை வெட்டி வீழ்த்தினான்.

இந்த வாக்கியத்தில் ‘எழுவாய்’ (கந்தன்) வாக்கியத்தின் முதலிலும், ‘பயனிலை’ (வெட்டி வீழ்த்தினான்) கடைசியிலும் வந்துள்ளது. ஒரு வாக்கியத்தில் எழுவாய், பயனிலை இருப்பது அவசியம். சிலசமயங்களில் எழுவாய் மறைந்து வரலாம். ஆனால் பயனிலை இல்லாமல் ஒரு வாக்கியம் முழுமை அடையாது.

நாம் ஏற்கனவே படித்தது போல் எழுவாயும் பயனிலையும் திணை, பால், எண் ஆகியவைகளில் பொருந்தி வர வேண்டும். எடுத்துக்காட்டு:

 1. இராமன் வந்தான்
 2. அவள் பாடினாள்
 3. நாம் விளையாடினோம்.

இப்போது வாக்கியங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

 1. தனி வாக்கியம்
 2. கூட்டு வாக்கியம்
 3. கலப்பு வாக்கியம்
 4. கதம்ப வாக்கியம்

இந்தப் பாடத்தில் நாம் தனிவாக்கியத்தையும், அதன் உட்பிரிவுகளைப் பற்றியும் படிக்கலாம்.

ஒரு வாக்கியத்தில் எழுவாய், பயனிலை உடன் முழு பொருளைத்தருவது தனிவாக்கியம் எனலாம்.

 1. பூனை பாலைக் குடித்தது.
 2. புலி மானைத் துரத்தியது.
 3. கண்ணன் புல்லாங்குழல் ஊதினான்.

மேலே கொடுத்துள்ளவை கூற்று வாக்கியங்கள். இப்போது சில எதிர்மறை வாக்கியங்களைப் பார்க்கலாம்.

 1. இந்தப் பூனை பால் குடிக்காது.
 2. நான் விலங்குகளை அடிக்க மாட்டேன்
 3. அந்தப் பட்டம் பறக்காது.

இது வினா வாக்கியமாகவும் வரும்.

 1. இது எந்த ஊர் ?
 2. நீ எங்கே போகிறாய்?
 3. உனக்கு எந்த நடிகரைப் பிடிக்கும்?

உணர்ச்சி வாக்கியங்களாகவும் வரும்.

 1. எவ்வளவு ருசியான சாப்பாடு !!
 2. எவ்வளவு பெரிய மலை !!
 3. இவ்வளவு கூட்டமா திருவிழாவில்!!

கட்டளை வாக்கியங்களாகவும் வரும்.

 1. நீ நாயுடன் விளையாடாதே.
 2. நீ அந்த உணவைச் சாப்பிடாதே.
 3. நீ அங்கே போகாதே.

இனி அடுத்த பாடத்தில் மற்றவகை வாக்கியங்களைப் பற்றிப் படிக்கலாம்.