கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின், மழை சாரல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு மனதிற்கு இதம் அளிக்கின்ற காலநிலை வருடம் முழுவதும் நிலவுகிறது. இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் நீளமுள்ள பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் குளிர்ந்த காற்று இதன் பருவ நிலைக்கு காரணமாக அமைகிறது.
இங்கு அதிகமாக உள்ள கரிசல் மண் இந்த பகுதியில் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் சிறந்து விளங்க ஒரு காரணமாக இருக்கிறது. மேலும் இங்கு வெற்றிகரமாக விளங்கும் பருத்தி விளைச்சல், நெசவு தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது.
கோவை மாநகர் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம்,நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது.
கோவை நகர மக்களின் முக்கிய குடிநீர் தேவையை சிறுவாணி நீர்தான் தீர்த்து வைக்கிறது. உலகில் இரண்டாவது மிக சுவையான குடிநீர் என சிறுவாணி நீர் புகழப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் நீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிறுவாணி மலை அடிவாரத்தில் அருவியாக கொட்டுகிறது. பச்சை பசேல் என்ற மரங்களின் நடுவே குளிர்ந்த நீராக கொட்டும் இதை கோவை குற்றாலம் என அழைக்கின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி, சந்தைகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. பொள்ளாச்சியின் வெல்லச் சந்தைதான் ஆசியாவிலேயே மிகப் பெரிய வெல்லச் சந்தையாகும். இங்கு உள்ள காய்கறிச் சந்தை, கேரளாவின் மத்தியப் பகுதிகளுக்கு, காய்கறி விநியோகம் செய்யும் பெரிய சந்தைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அதே போல், தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தைகள் இங்கு அமையப்பெற்றுள்ளன.
அதேபோல் இவ்மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பூர் நெசவாலைகளின் நகரம் ஆகும். இங்கு உற்பத்தியாகும் துணி வகைகள் நாட்டின் பல்வேறு நகரங்களின் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு நகரங்களிலிருந்து பல மக்கள் இங்குள்ள பல்வேறு துணி உற்பத்தி ஆலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவதற்காகக் குடியேறியுள்ளனர்.
வால்பாறை தமிழகத்தின் மிக அழகிய மலைப்பிரதேசங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அடர்ந்த காடுகள், காட்டு அருவிகள் மற்றும் மெல்லிய ஓசையெழுப்பும் ஓடைகளுடன் தேனீர் மற்றும் காப்பி தோட்டங்களும் இந்த மலைப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. மழைப்பொழிவு மற்றும் புல்நிறைந்த மலைகளின் காரணமாக ‘தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி’ என்று வால்பாறை அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க பிற இடங்கள் விவசாய பல்கலைக் கழகம், மணிக்கூண்டு, மருதமலை.
திருக்குறள்
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். (குறள்:666)
ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.
If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (குறள்:772)
காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.
It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.