18. எழுவாய், செயப்படு பொருள், பயனிலை

தமிழில் ஒரு வாக்கியத்தை மூன்று கூறுகளாக பிரிக்கலாம். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை.

எழுவாய் என்பது ஒரு வாக்கியத்தில் செயலை காட்டும் சொல் மீது “யார், எது, எவை” என வினவும் போது கிடைக்கும் பதில் ஆகும்.

  1. நான் படித்தேன்.
  2. நாய் குரைத்தது.
  3. மணிமேகலை தமிழ்ப் பள்ளிக்குச் சென்றாள்.
  4. அவன் மாம்பழம் சாப்பிட்டான்.

முதல் வாக்கியத்தில் ‘யார் படித்தார்?’ என்று கேட்டால் அதற்கு கிடைக்கும் பதில் “நான்”. எனவே அவ்வாக்கியத்தில் “நான்” என்பது எழுவாய்.

அதேபோல் இரண்டாவது வாக்கியத்தில் எது குரைத்தது? என்று கேட்டால் அதற்கு கிடைக்கும் பதில் “நாய்”’. எனவே “நாய்” என்பது எழுவாய்.

சில வாக்கியத்தில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது வரும். உதாரணாமாக

  1. பள்ளியில் பாடம் கற்பித்தார்.

இதில் ஆசிரியர் என்ற “எழுவாய்” மறைந்து வந்துள்ளது.

செயப்படுபொருள் என்பது ஒரு வாக்கியத்தில் “யாரை அல்லது எதை, எவற்றை” என்ற கேள்விக்குப் பதில் ஆகும்.

உதாரணமாக:

  1. முருகன் கபடி விளையாடினான்.
  2. சூர்யா பாட்டுப் பாடினான்.
  3. நாய் பந்தைக் கவ்விக் கொண்டு வந்தது.
  4. கிளிகள் கூட்டை விட்டுப் பறந்தன.

இதில் மூன்றாவது வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். இதில் நாய் எதைக் கவ்விக் கொண்டு வந்தது என்று கேட்டால் அதற்குப் பதில் ‘பந்து’. எனவே பந்து என்பது செயப்படு பொருள் ஆகும். 

செயப்படுபொருள் இல்லாமலோ அல்லது மறைந்தோ ஒரு வாக்கியம் அமையலாம்.

உதாரணமாக:

  1. முருகன் விளையாடினான்.
  2. சூர்யா பாடினான்.

இதில் “செயப்படுபொருள்” மறைந்து வந்துள்ளது.

ஒரு வாக்கியத்தில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல் பயனிலை எனப்படுகிறது.

உதாரணமாக:

  1. முருகன் கபடி விளையாடினான்.
  2. சூர்யா பாட்டுப் பாடினான்.
  3. நாய் பந்தைக் கவ்விக் கொண்டு வந்தது.
  4. கிளிகள் கூட்டை விட்டுப் பறந்தன.
  5. பள்ளியில் பாடம் கற்பித்தார்.

மேற்கண்ட வாக்கியங்களில் வினைச்சொற்கள் “விளையாடினான்”, “பாடினான்”, “கவ்விக் கொண்டு வந்தது”, “பறந்தன”,  “கற்பித்தார்” போன்றவை பயனிலையாகும்.