அரசர் கிருஷ்ணதேவராயரின் அவைக்கு ஒரு நபர் வந்தார்.அவர் அரசரிடம், “அரசே! என்னுடைய வயலும் பக்கத்து வீட்டுக்காரர் வயலும் அருகருகில் உள்ளன. இரண்டுக்கும் இடையில் உள்ள வரப்பில், ஒரு தென்னை மரம் உள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் அதை எனக்கு விற்று விட்டார். நான்தான் அதை நன்றாகப் பராமரித்து வருகிறேன். இன்று அவர் என்னைத் தேங்காய் பறிக்கக் கூடாது என்றார். இப்போது அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு விட்டாராம். மரம் திரும்ப அவருக்கு வேண்டுமாம்.” என்று முறையிட்டார்.
அதைக் கேட்டு அவையினர் அனைவரும் திடுக்கிட்டனர். அமைச்சர் சொன்னார். “அந்த மனிதாபிமானம் அற்ற மனிதரைக் கைது செய்து வந்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றார். அதற்குள் சேனாதிபதி, அந்த நபரைக் கைது செய்து வரத் தயாராகி விட்டார்.
அப்போது அரசர் “என்ன செய்யலாம்?” என்று கேட்பதைப் போல் தெனாலிராமனைப் பார்த்தார். தெனாலிராமன் புரிந்து கொண்டு, “தாங்கள் அனுமதி தந்தால், இதற்கான தீர்வை நாளைக்குத் தள்ளி வைத்துக் கொள்ளலாம்.” என்றார்.
அரசர், “சரி” எனவே, தெனாலி அந்த நபரிடம், “நாளைக்கு உன் பக்கத்து வீட்டுக்-காரனையும் அழைத்து வா ” என்று அவனை அனுப்பி விட்டார். மறுநாள் அந்த நபரும், பக்கத்து வீட்டுக்காரனும் சபைக்கு வந்தனர். இருவரிடமும் நன்கு விசாரித்த பிறகு தெனாலிராமன் சொன்னார்.
“அப்படியானால் நீ உன் மரத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள விரும்புகிறாய் இல்லையா?” என்றார். அதற்கு அவன், “ஆம் ஐயா!” என்றான்.
“சரி, நீ அவனுடைய பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடு.” என்றார் தெனாலிராமன். அவனும் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டான். சபையினருக்கு ஒன்றும் புரியவில்லை. “தெனாலி ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்?” என்று திகைத்தார். பிறகு தெனாலி, மரத்தை வாங்கியவரிடம், “சரி. இன்றிலிருந்து அந்த மரம் உன்னுடையது இல்லை.” என்றார். அந்த மனிதரிடம் ஏமாற்றம்.
அப்போது தெனாலிராமன் தொடர்ந்து, “இன்னொரு விஷயம், அந்த மரம் நீ வாங்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே அதை நீ திரும்பக் கொடுத்து விட வேண்டும்.” என்று கூறி விளக்கினார். அதாவது நீ மரத்தை அவரிடம் வாங்கும்போது அம்மரம் காய்க்கத் தொடங்கவில்லை. ஆகவே, அதைத் திரும்ப ஒப்படைப்பதற்கு முன்பு எல்லாக் காய்களையும் பறித்துக் கொண்டுவிடு.” என்றார் வாங்கியவரிடம்.
திரும்பப் பெற்றவரிடம், “காய் இல்லாத மரத்தைத்தானே நீ விற்றாய்.? ஆகவே, என்றைக்கும் காயில்லாத மரம்தான் உன்னுடையது. அதில் இனிமேல் காய்க்கும் காய்கள் எல்லாம் மரத்தைத் திரும்பக் கொடுத்தவரையே சேரும். அதை அவர் பறித்துக்கொள்ள அவ்வப் போது நீ அனுமதிக்க வேண்டும் தடுக்கக் கூடாது; நீயும் பறித்துக் கொள்ளக் கூடாது.” என்றார்.
தெனாலியின் இத்தீர்ப்பை அரசர் ஆமோதித்தார். திரும்பப் பெற்றவன் முகத்தில் ஏமாற்றம். புகார் கொடுத்த நபர் மகிழ்ச்சியுடன் எல்லாரையும் குறிப்பாக, தெனாலிராமனை வணங்கி விட்டு விடைபெற்று சென்றார்.
திருக்குறள்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (குறள்:517)
இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.
After having considered, “this man can accomplish this, by these means”, let (the king) leave with him the discharge of that duty.
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. (குறள்:478)
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை. Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.