15. தமிழகத்தின் நெற்களஞ்சியம் – தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் விவசாயத்திற்கு பெயர் பெற்றதாகும். காவிரி நதியால் நெற்பயிர்களும், தென்னை மரங்களும், மாந்தோப்புகளும் செழித்து வளர்கின்றன.  தஞ்சை என்பதற்கு “குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி” என்று பொருள். நெல் விளைச்சலில் தஞ்சாவூர் முதன்மையாக விளங்குவதால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழகத்தின் பதிமூன்று கடற்கரை மாவட்டங்களில் தஞ்சாவூரும் ஒன்றாகும். தஞ்சாவூர் நெல் உற்பத்தியில் மட்டுமல்லாது தமிழகத்தின் மீன் பிடி தொழிலில் 5 சதவீதம் தஞ்சாவூரில் நடைபெறுகிறது.

தஞ்சாவூர், கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்திலும் சிறந்து விளங்குகிறது. இது, 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

சோழப்பேரரசின் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக பிரகதீசுவரர் கோவிலைக் கட்டினான். அதனை தஞ்சை பெரிய கோவில் என்றும் அழைப்பார்கள் . இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. கட்டுமான கற்கோவில் அமைப்புகளில், இந்தியாவிலேயே மிகப்பெரியது தஞ்சை பெரிய கோவில்.

கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.  தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தஞ்சை சரசுவதி மகால் நூலகம் உலகில் உள்ள பழமையான நூலகங்களில் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகின்றது. சோழர்கள் காலத்தில் தோன்றி, அவர்கள் பணியால் வளர்ச்சி யடைந்து, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட நூலகமாகத் திகழ்கின்றது.

அடுத்து தஞ்சாவூர் என்றதும் அனைவரது ஞாபகத்திற்கும் வருவது தலையாட்டி பொம்மை. காற்றில் பொம்மை ஆடுவது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். தஞ்சாவூர் வரும் அனைவரும் இந்த பொம்மையை வாங்காமல் செல்வதில்லை.

 தஞ்சாவூர் ஓவியங்கள் மிகப் பிரபலமானவை. இந்து கடவுள்கள், ராமாயண, மகாபாரதம் போன்ற இதிகாச காட்சிகள் ஆகியவையே ஓவியத்தின் முக்கிய கரு பொருளாக இருக்கும். இந்த ஓவியக் கலை விலை மதிப்பற்ற கலையாக கருதப்படுகிறது. ஓவியங்கள் பெரும்பாலும் தங்க நிறத்தில் ஜொலிக்கும்.

தஞ்சாவூர் பழங்கால ஓவியங்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட கைவினை பொருட்களுக்கு புகழ் பெற்றதாகும். இங்கு பலாமரத்தில் செய்யப்படும் வீணை, தம்புரா போன்ற இசைக்கருவிகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உபயோகிக்கப் படுகிறது.

தமிழர்களுக்கு காபி என்றாலே தஞ்சாவூரின் அருகில் உள்ள கும்பகோணம் டிகிரி காபி நினைவில் வந்து நாவில் நீர் ஊற செய்யும். காபி கொட்டைகளை அரைத்து தாமிரத்தால் ஆன பில்டர்களில் வடிகட்டி டிகாஷன் தயாரித்து சுத்தமான பசும்பால் கலந்து காபி தயாரிக்கப்படுகிறது. தாமிரத்தால் ஆன பில்டர்களை பயன்படுத்துவதால் சுவை கூடுகிறது என்கிறார்கள்.

திருக்குறள்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.                           (குறள்:121)

அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.                          (குறள்:215)

உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம்,  நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.