13. முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

ஆசிரியப் பணி என்பது ஏதோ வாசித்து விட்டுப் போவதில்லை என்பதை செய்து காட்டி இந்திய ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். வாழ்க்கையை, வாழ்க்கைத் தத்துவத்தை, ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, அறிவை மாணவர்களுக்கு ஊட்டுவதே ஒரு நல்லாசிரியரின் அழகு. அதனினும் மேலாக ஒரு தாயாக, ஒரு தந்தையாக இருந்து மாணவர்களை நல்வழிப்படுத்தும் முக்கியப் பங்கு ஆசிரியர்களுக்கு உண்டு.

அவர் குடும்பம் வறுமையில் இருந்ததால் அப்பா இவரை கோயில் குருக்களாக போக சொன்னார். ஆனால், இவரை கல்வி கற்க வேண்டும் என்கிற ஆர்வம் உந்தித்தள்ளியது. புத்தகம் வாங்க காசில்லாமல் இவரின் உறவுக்காரர் தத்துவம் படித்து வைத்து இருந்த பழைய புத்தகங்கள் மட்டுமே இருந்ததால் வேலூர் வூரிஸ் கல்லூரியிலும், பின் சென்னை கிறித்துவ கல்லூரியில் தத்துவம் பயின்றார்.

வறுமை வாட்டி எடுத்ததால் கல்லூரியில் பெற்ற பதக்கங்களை அடமானம் வைத்து செலவுகளை சமாளித்து இருக்கிறார்; தத்துவம் படித்து முடித்த பின் சென்னை மாநில கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்ததும் தட்டு வாங்க காசு இல்லாமல் வாழை இலையில் தான் தினமும் உண்டு இருக்கிறார். வெகு விரைவிலேயே அவரின் இந்தியத் தத்துவங்கள் சார்ந்த கட்டுரைகள் உலகம் முழுக்க கவனம் பெற்றன. ஒன்பதே ஆண்டுகளில் மைசூர் பல்கலைகழகம் பேராசிரியராக இவரை பணியமர்த்தியது. மாணவர்களிடம் தலைசிறந்த ஆசிரியர் என பெயர் பெற்றார்.

சாதாரண ஆசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்தியக் குடியரசுத் தலைவராகி ஆசிரியர் சமுதாயத்திற்கே கெளரவமும், பெருமையும், பேறும் தேடிக் கொடுத்தவர். தன் சம்பளமான பத்தாயிரத்தில் 2,500 மட்டும் பெற்றுக்கொண்டு மீதத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு கொடுத்து விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

மாணவர்களுக்கு மட்டும் ஆசிரியராக இல்லாமல், ஆசிரியர் சமுதாயத்திதற்கே பேராசிரியராக விளங்கிய பெருமகன் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். மாணவர்களை தனது பிள்ளைகள் போல பாவித்து அவர்களுக்கு அறிவூட்டிய தாயுமானவன், முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.

ஆசிரியராக பணியாற்றுவதை ஒரு வேள்வி போல செய்த முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், மாணவர்களின் சந்தேகங்களை மிகப் பொறுமையுடன் விளக்கி அவர்களை தெளிவுபடுத்தியவர். தன் வீட்டுக்கே வந்து மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்கலாம் என்ற உரிமையைக் கொடுத்தவர்.

ரஷ்யாவில் தூதராகப் பணியாற்றியபோதும் கூட அவர் தனது ஆசிரியப் பணியை கைவிட முன்வரவில்லை. மாறாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியாரகப் பணியாற்ற அனுமதி பெற்று பணியாற்றினார். படிக்க வேண்டும், படித்துத் தெளிய வேண்டும், தெளிந்து அதன்படி நடக்க வேண்டும், நாம் பெற்றது நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாடம் நடத்தியவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.

தனது பிறந்த நாளை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை ஏற்ற இந்திய அரசு செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாட உத்தரவிட்டது. அத்தோடு நில்லாமல் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருதுகளும், திறம்பட பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் பாரத ரத்னாவை சி.வி.ராமன், ராஜாஜி ஆகியோருடன் இவரும் பெற்றுக்கொண்டார்

திருக்குறள்

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.                          (குறள்:412)

செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

When there is no food for the ear, give a little also to the stomach.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.                      (குறள்:423)

எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

To discern the truth in everything, by whomsoever spoken, is wisdom.