11. ஒரு குடம் அதிசயம்

பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும்,  தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின்அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது.

அதனால் ஒரு கடிதத்தில், “மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு,  ஆண்டவன் தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக.  தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன்மூலமா அக்பருக்கு அனுப்பினார் காபூல் அரசர்.

கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைத்து, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையேன்னு குழம்பி, அரண்மனையை சுற்றி வலம் வந்தார். அக்பர் முகம் குழப்பத்தில் இருப்பதை பீர்பால் கண்டார். பீர்பால் அக்பரிடம் சென்று இதுபற்றிக் கேட்டார்.

அக்பர் கடிதத்தை பீர்பாலிடம் கொடுத்தார். அந்த கடிதத்தைப் படித்தார் பீர்பால்.  பீர்பால் நீண்ட சிந்தனைக்குப் பிறகு, அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாகப் பதில் எழுதுமாறு சொன்னார்.

அப்புறம் அக்பர், பீர்பாலிடம், “ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்?” என்று விசாரித்தார். அதற்கு பீர்பால், “மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்” என்று சொல்லி விட்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.

பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காய்ச்சிருந்த பூசணிப்பிஞ்சு ஒன்றை கொடியோட மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினார்.

நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால்.

இப்போ அந்தக்குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரியபூசணிக்காயை எப்படி நுழைத்தாய்?

பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அனுப்பச் சொன்னார். அக்பர் தூதன் மூலமாக ஒரு கடிதத்தையும் அந்த குடத்தையும் அனுப்பினார்.

கடிதத்தை காபூல் அரசன் பிரித்து படித்தார். அதில் “நீங்கள் கேட்டது போலவே ஒரு குடம் அதிசயத்தை அனுப்பியிருக்கேன்.” என எழுதியிருந்தார்.

குடத்தின் மேல் இருந்த உறையை பிரித்தார் காபூல் அரசன்! அவரால் அதை நம்ப முடியவில்லை. காரணம் குடத்தின் வாயோ சிறியது. அதற்குள் எப்படி பெரிய பூசணிக்காய் வைத்தார் என்று அவருக்கு புரியவில்லை. அன்று இரவு முழுவதும் இதையே நினைத்துக்கொண்டு இருந்தார். அடுத்த நாள் காபூல் அரசன் அக்பரைக் காணப் புறப்பட்டார். அக்பரின் தலைநகரத்தை அடைந்தார். அவர் அக்பரிடம் சென்று விசாரித்தார். அதற்கு அக்பர் “இதை நான் சொல்வதை விட பீர்பால் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று சொன்னார். பிறகு இருவரும் பயிற்சி கூடத்திற்குச் சென்று பீர்பாலை சந்தித்தனர். பீர்பாலும் அதை எவ்வாறு செய்தார் என்று விளக்கினார். அதைக் கேட்ட காபூல் அரசன் பீர்பாலோட புத்திக்கூர்மையை எண்ணிப் பாராட்டினார்.

திருக்குறள்

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.                       (குறள்:397)

கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?

How anyone can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town)?

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.                           (குறள்:108)

ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.

It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).