09. தென்னாட்டின் தூங்கா நகரம்

மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம் தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது. பாண்டியர் காலத்தில் மதுரையில்  சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை அவர்களுக்கு உண்டு.

மதுரை என்றாலே மல்லிகைப்பூவும், மீனாட்சி அம்மனும் தான் நினைவுக்கு வரும். மதுரைக்காரர்கள் விருந்தோம்பலில் பெருமை கொள்பவர்கள்.  அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் கேட்காமலேயே உதவிக்கு வருபவர்கள்.

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் எது தெரியுமா?  மதுரை மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில். இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். இருந்தாலும்  அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுத்து மீனாட்சி  கோவில் என்று அழைப்பது இவ்வூரின் சிறப்பு.  இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. 

மதுரை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்தக்கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்து அதனைச் சுற்றி வீதிகள் அமைந்துள்ளன.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள்,  அதனைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.

திருமலை நாயக்கர் மஹால் பதினேழாம்  நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. மஹால் உள்ளே செல்லும்போது, 3700 சதுர கி.மீ பரப்பளவுடன் கூடிய மஹாலின் மத்தியில் அமைந்துள்ள மைதானம் போன்ற அமைப்பைக் காண முடியும்.  அதை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலைத் தூக்கி நிறுத்துகின்றன.  இந்த மஹால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் மற்றொன்று ரங்க விலாசம். இதில் சொர்க்க விலாசம் அரசவையாக பயன்படுத்தப்பட்டது.

வைகை நதி, மதுரை மாவட்டத்தின் விவசாயத்துக்குத் தேவையான நீரையும் மதுரைக்கு தேவையான குடிநீரையும் வழங்கி வருகிறது. மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவம் மிகவும் கோலாகலமாக நடக்கும்.

மதுரையின் சிறப்பு, மணக்கும் மல்லிகையும், அதனைத் தொடுக்கின்ற அழகும் தான். மதுரை மல்லிகை பல்வேறு வகையில் பயன்படுத்தப் படுகிறது. மாலைகள்,  பூச்செண்டுகள், பெண்களின் கூந்தலை அழகு பெறச் செய்வது இப்படி பலப் பல. இது மதுரை மக்களால் பயிரிடப் படுகின்றது. கிட்டத் தட்ட எண்பது வகை மல்லிகைகள் இருந்த போதும், மூன்று வகைகளே அதிகமாகப் பயிரிடப் படுகின்றன.

ஒரு காலத்தில் ஆசியாவிலேயே பெரிய திரையரங்கு  என்று புகழப் பட்ட தங்கம் திரையரங்கு  இங்கு தான் இருந்தது. மதுரை, தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் பயணிகளின் போக்குவரத்தும் வியாபரமும் 24 மணி நேரமும் மதுரையில் நடப்பதால் இந்த நகரம் தமிழகத்தின் தூங்கா நகரம் (City that never sleeps)  என்று அழைக்கப் படுகிறது.

திருக்குறள்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.                        (குறள்:102)

நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.                  (குறள்:127)

எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.