07. கார்த்திகைத் திருநாள்

கார்த்திகைத் தீபம் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இந்தத் தீபத் திருநாளில் வீடுகளில், ஆலயங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுவது தமிழர்களின் மரபு. குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் இலட்சுமிகரமாக இருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு ஆகியவற்றிற்கு ஒப்பிடுவார்கள்.

கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தன்று இப்பண்டிகைக் கொண்டாடப்படுகின்றது. ஆதிகாலம் தொட்டே மக்கள் அக்னியைத் தெய்வமாகக் கொண்டாடி வந்தனர். அந்த அடிப்படைக் காரணத்தால் தான் பெரும்பாலும் நம் பண்டிகைகளில் தீபங்களை ஏற்றிவைத்துக் கொண்டாடுகின்றோம். பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியைத் மகிழ வைப்பதுதான் இப்பண்டிகையின் நோக்கமாகும்.

கார்த்திகை மாதம் முதல் தேதி தொட்டு கடைசி நாள் வரை தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவர். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில்தான் திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்.

நம் தென்னிந்தியாவில் ஒவ்வொரு பண்டிகைக்கும் பண்டிகை சமையல்கள் உள்ளன. காலையில் பண்டிகைச் சமையலாக, பருப்புருண்டை மோர்குழம்பு, பொரித்த அப்பளம், வடகம், தக்காளி ரசம், காரட் கோசுமரி, மோர் செய்வார்கள். மாலையில் நிவேதனம் செய்ய, வடை,  அப்பம், நெல் அவல் பொரி உருண்டை, தேன்குழல், வெல்ல அடை, கார அடை, அவியல் செய்வது வழக்கம்.

தீபத் திருவிழா என்றதுமே நம் நினைவில் வந்து நிற்பது திருவண்ணாமலை திருத்தலம்தான். திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப்  பெரிய உற்சவங்களில் ஒன்று. இவ்விழா பதினேழு நாட்களுக்கு மகா உற்சவமாக் கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் என்று நம்பப்படுகிறது.

திருவண்ணாமலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். கற்பூரத்தூள் சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள்.

இந்த ஜோதியின் காரணமாகத்தான் மற்ற இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு முன்னால் பனை மரத்தைத் தரையில் ஊன்றி அதனுள் பனை ஓலையயும் வெடிகளையும், வண்ண மத்தாப்புக்களையும் கட்டி வைத்துக் கொளுத்துவர்.

இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம், பழனி, திருச்செந்தூர் முதலிய கோயில்களில் திருவண்ணாமலைக் கோயிலைப்போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

திருக்குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.                    (குறள்:151)

தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.

To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.                      (குறள்:427)

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.