மூன்றாம் வேற்றுமை உருபுக்கு எடுத்துக்காட்டாக கீழே கொடுத்துள்ள இரண்டு வாக்கியங்களைப் பார்ப்போம்.
- அவன் கையால் தூக்கினான்
- இவன் பல்லால் கடித்தான்
முதல் வாக்கியத்தில் ‘அவன்’ என்பது பிரதிப்பெயர்ச்சொல். ‘தூக்கினான்’ என்பது வினைச்சொல். எதால் தூக்கினான் என்று கேட்டால் ‘கையால்’ என்று பதில் வரும். இதில் ‘கை’ என்பது தூக்கினான் என்ற வினையைச் செய்த கருவி.
இதில் ‘கையால்’ என்பதை ‘கை+ஆல்’ என்று பிரிக்கலாம். ‘கை’ என்பது பெயர்ச்சொல். ‘ஆல்’ என்பது மூன்றாம் வேற்றுமை உருபு.
அதேபோல் இரண்டாவது வாக்கியத்தில் ‘பல்லால்’ என்ற வார்த்தையில் ‘பல்’ என்பது கடித்தான் என்ற வினையை செய்த கருவி. ‘ஆல்’ என்பது மூன்றாம் வேற்றுமை உருபு.
“ஆல்” என்ற மூன்றாம் வேற்றுமை உருபு ஒரு வாக்கியத்தில் வினையைச் செய்யும் கருவியுடனோ அல்லது வினையைச் செய்யும் நபருடனோ சேர்ந்து வருவதால் இதற்கு கருவி வேற்றுமை என்று மற்றொரு பெயரும் உண்டு.
மூன்றாம் வேற்றுமையில் மொத்தம் நான்கு உருபுகள் உள்ளன.
- ஆல்
- ஆன்
- ஒடு
- ஓடு என்பனவாகும்.
“ஆல்”,”ஆன்” என்ற உருபு கருவிப்பொருளிலும், கருத்தாப் பொருளிலும் வரும். “ஒடு”, “ஓடு” எனும் உருபுகள் உடனிகழ்ச்சி பொருளில் வரும்.
கருவிப் பொருளுடன் வருவதற்கு எடுத்துக்காட்டாக
“இவன் கத்தியால் வெட்டினான்”
‘கருத்தா’ என்பது வினையை தானே செய்பவனையோ அல்லது பிறர் மூலமாக செய்விப்பவரையோ குறிக்கும். உதாரணமாக
“இந்தக் கடை தலைவரால் திறக்கப்பட்டது.”
இதில் தானே வினையைச் செய்தார் தலைவர்.
“இந்தக் கோயில் மன்னனால் கட்டப்பட்டது.”
இதில் மன்னனின் ஆணைப்படி வினை செய்யப்பட்டது.
இப்போது ‘ஓடு’ என்ற வேற்றுமை உருபுக்கு எடுத்துக்காட்டாக
“நான் என் தம்பியோடு சென்றேன்.”
இதில் ‘தம்பி’ வினையை ‘உடன்’ சேர்ந்து செய்பவர். இவ்வாறு ‘உடன் நிகழும்’ இடங்களில் ‘ஓடு’ என்ற மூன்றாம் உருபு உபயோகிக்கப் படுகிறது. மற்றும் ஒரு உதாரணமாக
“தாயொடு மகளும் வந்தாள்.”
இத்தொடரில் “மகள்” என்பவர் “தாயுடன்” சேர்ந்து” வினை செய்பவர். இவ்வாறு ஒரு வினையை “உடன் நிகழ்த்துகிற” பொருளுக்கு உடன் நிகழ்ச்சிப் பொருள் என்று பெயர்.
சில இடங்களில் சொற்கள் மூன்றாம் வேற்றுமையாக வரும். அவ்வாறு மூன்றாம்வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள்: ‘கொண்டு’, ‘உடன்’ ஆகியன. உதாரணமாக
பாண்டியன் வாள்கொண்டு வெட்டினான்.
இதில் ‘கொண்டு’ என்ற சொல்லுருபு கருவிப்பொருளுக்கு வந்தது.
ஆசிரியருடன் மாணவன் வந்தான்.
இதில் ‘உடன்’ என்ற சொல்லுருபு உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது.
இப்போது சில பெயர்ச் சொல்லுடன் ‘”ஆல்”’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.
இப்போது பிரதிப் பெயர்ச் சொல்லுடன் ‘ஆல்’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.
இப்போது சில பெயர்ச் சொல்லுடன் “ஓடு” சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.
இப்போது பிரதிப் பெயர்ச் சொல்லுடன் “ஓடு” சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.
இந்தப் பாடத்தில் மூன்றாம் வேற்றுமை உருபுக்களைப் பற்றிப் படித்தோம். இனி அடுத்த வகுப்பில் நான்காம் வேற்றுமை பற்றிப் படிப்போம்.