தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்குப் புத்துயிர் ஊட்டியவர் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாத ஐயர் என்கிற உ.வே.சா.
1855-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19-ஆம் நாள் நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில் வேங்கடசுப்பையா சரஸ்வதி தம்பதியாருக்கு மகனாகப் பிறந்த இவர் தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியைத் தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு!
அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில், அதாவது பனை ஓலையில் எழுதப்பட்டிருந்தன. இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவில் பதிப்பிக்க விரும்பினார். அதன்பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு பல சுவடிகள் கரையான்களால் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார்.
அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தமிழ் ஓலைகளைப் படிப்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.
இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவர் அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்குக் கொடுத்து உதவினார்.
முதன் முதலில் பதிப்பித்த நூல் சீவகசிந்தாமணி. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான பத்துப்பாட்டு என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.
அடுத்து குறுந்தொகை என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவ்வாறு ஏட்டு சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.
1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி “மகா மகோ பாத்யாயர்” என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு “தமிழ் இலக்கிய அறிஞர்” என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.
1942-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ஆம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழிபோல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். (குறள்:393)
கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.
The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. (குறள்:786)
பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.
The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.