பேரரசன் அலெக்ஸாண்டர் அல்லது மகா அலெக்ஸாண்டர் என்பவன் கிரேக்கத்தின் ஒரு பகுதியான மெஸடோனின் மன்னன் மெஸடோனின் மூன்றாம் அலெக்ஸாண்டர் எனவும் இவன் அழைக்கப்படுகிறான். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவனாக இவன் போற்றப்படுகிறான். இவன் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவனது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டான்.
அலெக்ஸாண்டர் அவனது தந்தை இரண்டாம் பிலிப் இறந்த பின்னர் மெஸடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டான். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மெஸடோனியாவின் கீழ் ஒன்றிணைத்தான். அலெக்ஸாண்டர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மெஸடோனியாவின் கீழ் இணைத்தான். பின்னர் கிழக்குப் பகுதியில் அக்கீமனிட் (Achaemenid) பாரசிகப் பேரரசைக் கைப்பற்றினான். இவன் அனத்தோலியா (Anatolia), சிரியா (Syria), பினீசியா (Phoenicia), காசா(Gaza), எகிப்து(Egypt), பாக்ட்ரியா (Bactria), மெஸோப்பொத்தேமியா (Mesopotamia) ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தான்.
மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும் படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள். அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பும் முன்னர் மனைவி விரும்பிய பரிசு அவன் நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும் படி ஆணையிட்டான்.
முனிவர் மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அலெக்ஸாண்டரை இது வரை யாரும் இப்படி அலட்சியப் படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.
முனிவரோ அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து “கொல்ல வரும் ஆளைப் பார்த்து சிரிக்கிறீரே! உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டான்.
அதற்கு முனிவர் “மன்னா, நீ இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உன்னால் என் உடம்பை வேண்டுமானால் வெட்டிப் போட முடியுமே தவிர, என்னை அழிக்க உன்னால் இயலாது. இரண்டாவது, என்னுடைய இரண்டு அடிமைகளுக்கு நீ அடிமையாக இருக்கிறாய் என்று பார்க்கும் போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது!” என்றார்.
அலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. “நான் உலகத்திற்கே அரசன். மாவீரன். நான் எப்படி அடிமையாக முடியும்?” என்று முனிவரிடம் கேட்டான். அவர் “அப்பா! கோபமும் ஆசையும் எனக்கு அடிமைகள். நீ அவை இரண்டிற்கும் அடிமையாகக் கிடக்கிறாய். அதைத்தான் நான் சொன்னேன்” என்றார்.
மன்னருக்கு இப்போது விளங்கி விட்டது! முனிவரை வணங்கி விட்டுத் தன் வழியே போய் விட்டான்.
திருக்குறள்
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. (குறள்:78)
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. (குறள்:100)
மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.