முந்தைய வகுப்புகளில் எழுத்திலக்கணம் படித்தோம். பிறகு பேச்சின் கூறுகள் (Parts of speech) பற்றி விரிவாகப் படித்தோம். இப்போது நாம் படித்த பேச்சின் கூறுகளை ஒரு முறை ஞாபகப் படுத்திக் கொள்வோம்.
பெயர்சொற்கள்: பொருட்கள், நபர்கள், இடங்கள் போன்றவற்றை குறிக்கும் சொற்கள் பெயர்ச்சொற்களாகும்.
வினைச் சொற்கள்: வினையை அல்லது செயலை குறிக்கும் சொற்கள் வினைச் சொற்களாகும்.
சுட்டுப்பெயர்ச்சொற்கள் / பிரதிப்பெயர்ச்சொற்கள்:
ஒன்றின் அல்லது ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல்; அதற்கு பதிலாக
சுட்டிக்காட்டிப் பேசுவதற்கு பயன்படும் சொற்கள் சுட்டுப்பெயர்ச்சொற்கள் என அழைக்கப்படும்.
பெயரெச்சங்கள் / பெயரடைகள் / பெயருரிச்சொற்கள்: ஒரு பொருளின், இடத்தின், நபரின் (பெயரின்) குணத்தினை அல்லது தன்மையை மேலும் விவரித்துக்கூற பயன்படும் சொற்கள் பெயரெச்சங்களாகும்.
வினெயெச்சங்கள் / வினையடைகள் / வினையுரிச்சொற்கள்: வினையின் அல்லது செயலின் தன்மையை மேலும் விவரித்து பேசுவதற்கு பயன்படும் சொற்கள் வினையெச்சங்கள் எனப்படும்.
முன்னிடைச் சொற்கள்: ஒரு சொற்றொடரில் இருசொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை விளக்கும் சொற்கள் முன்னிடைச்சொற்களாகும்.
இணைப்புச் சொற்கள்: இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் மற்றும் வாக்கியங்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தும் சொற்கள் இணைப்புச்சொற்களாகும்.
வியப்பிடைச் சொற்கள்: பேச்சின் பொழுது வியப்பு, ஆச்சரியம் போன்ற உணர்வை வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் வியப்பிடைச் சொற்களாகும்.
வினாச்சொற்கள்: ஒரு வினா வாக்கியத்தில் வினாவைக் குறிக்கும் சொல் வினாச் சொல்லாகும்.
நிபந்தனைச் சொற்கள்: ஒரு வாக்கியத்தில் நிபந்தனையை விளக்கும் சொல் நிபந்தனைச் சொல்லாகும்.
இனி இந்த வருடம் வேற்றுமை உருபுகள், வாக்கியங்கள், கூட்டு வாக்கியங்கள், கலவை வாக்கியங்கள், வினா வாக்கியங்கள், செய்வினை வாக்கியங்கள், செயப்பாட்டு வினை வாக்கியங்கள் போன்றவைகளைப் படிக்கலாம். மேலும் தன்மை, முன்னிலை, படர்க்கை வாக்கியங்கள், எழுவாய், செயபடு பொருள், பயனிலை வாக்கியங்களைப் பற்றியும் படிக்கலாம்.