01. இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி

டில்லி’ அல்லது ‘டெல்லி’ என்று அழைக்கப்படும் நகரமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் என்.சி.டி (NCT – NATIONAL CAPITAL TERRITORY) எனப்படும் ‘தேசிய தலைநகர பிரதேசம்’ ஆகும். இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லி நகரம் இந்த NCT-யின் அங்கமாக உள்ளது.

டெல்லி நகரமானது புது டெல்லி மற்றும் பழைய டெல்லி என்ற இரண்டு நகர்ப்பகுதிகளைக் கொண்டுள்ளது. வரலாற்று அடையாளங்களையும், அசர வைக்கும் அதி நவீன அம்சங்களையும் தனது தனித்தன்மையாக் கொண்டு காட்சியளிக்கிறது.

கிழக்கில் உத்தரப்பிரதேச மாநிலத்தையும், தெற்கு, மேற்கு, வடக்கு பகுதிகளில் ஹரியாணா மாநிலத்தையும் இது எல்லைகளாகக் கொண்டுள்ளது. டெல்லி மலைத்தொடர்கள் மற்றும் யமுனை நதி படுகைப்பகுதி ஆகிய இரண்டும் டெல்லி நகரத்தின் முக்கிய இயற்கை அம்சங்கள்.

டெல்லியின் செங்கோட்டை (லால் கிலா) டெல்லியின் அடையாளமாகத் திகழும் வரலாற்றுச் சின்னம். பாரம்பரியக் கலைச் சின்னமாக வீற்றிருக்கும் இந்தச் செங்கோட்டையில் இந்தியப்பிரதமர் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று இந்தியத் தேசியக்கொடியை ஏற்றுகிறார்.

குதுப் வளாகத்தில் உள்ளது குதுப் மினார் கோபுரம். இந்த அற்புதமான கோபுர அமைப்பு இந்தியாவிலேயே மிக உயரமான மினாரெட் கோபுரமாகும். இதன் உயரம் 72.5 மீ (ஏறக்குறைய 239 அடி!).

 உயரத்தில் வெகு சிக்கலான கட்டிடக்கலை அமைப்புடன், நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. குத்புதீன் ஐபெக் மன்னரால் தனது வெற்றிச்சின்னமாக இந்த கோபுர அமைப்பு கட்டப் பட்டது.

பாராளுமன்றம் எனப்படும் மக்களவை கூடம், மஹாத்மா காந்தி தகனம் செய்யப்பட்ட ராஜ்காட், லோட்டஸ் டெம்பிள் எனும் தாமரைக் கோவில், மற்றும் இந்தியா கேட் போன்றவை  டெல்லியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாகும்.

இந்தியாவின் கௌரவச்சின்னமாக இந்த ராஷ்டிரபதி பவன் எனப்படும் குடியரசுத்தலைவர் மாளிகை விளங்குகிறது. தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களோடு காட்சியளிக்கிறது.

இந்தப் பெருநகரம், வரலாற்று கால இந்தியாவில் பல ராஜவம்சங்களின் தலைநகரமாக விளங்கியது.  இன்றும் வரலாற்று அடையாளங்கள் அழியாமல் காட்சியளிக்கிறது.

இந்த மாநகரத்தின் கதம்ப கலாச்சாரம் இதன் தனித்தன்மையாகும். தீபாவளி, மஹாவீர் ஜயந்தி, ஹோலி, லோரி, கிருஷ்ண ஜயந்தி, குரு நானக் ஜயந்தி போன்ற திருவிழாக்கள் இந்த மாநகரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இவை தவிர குதுப் திருவிழா, வசந்த் பஞ்சமி மற்றும் சர்வதேச புத்தக சந்தை, சர்வதேச மாம்பழ சந்தை போன்றவையும் குறிப்பிடத்தக்கவை.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.                                (குறள்:2)

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?