25. மலைகளின் இளவரசி

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல்,  தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  பெரிய பரப்பளவில், அதிக அடர்த்தியாகவும், நிறைய வனவிலங்குகளுக்கு வீடாகவும், பச்சை வர்ண, பட்டு உடுத்திய அழகு தேவதை போல இருப்பதால் இதற்கு மலைகளின் இளவரசி என்று பெயர்.

இந்த அழகிய மழைப் பிரதேசத்தின் உண்மையான பெயர் கொடிக்கானல் ஆகும். இன்னும் சொல்லப்போனால் கொடிகளால் சூழப்பட்ட காட்டுப் பகுதி என்பதுதான் இதன் அர்த்தம்.

மதுரையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த வெள்ளையர்கள், கோடை காலங்களில் வெப்பம் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டார்கள். அதனால் தங்களுக்கு ஏற்ற தட்பவெப்பநிலை உடைய இடம் தேடி அலைந்தனர். அப்போது, பி.எஸ். வார்ட் (B.S.Ward) என்கிற பிரிட்டிஷ் சர்வேயர் (Surveyor) ஒருவர் பெரியகுளம் என்ற ஊரின் வழியாக தன் குதிரையில் பயணம் செய்தார்.  அப்போது ஒரு மலை பகுதியை பார்த்த அவர் தன் குதிரையுடன் மலையின் மேலே போனார். அந்த இடம் மிகவும் குளுமையாகவும், இதமாகவும், பச்சை பசேலென அழகாகவும் இருந்ததனால் அங்கே வெள்ளையர்கள் தங்க சரியான வெப்பநிலையுடைய பகுதி அது என்று அறிந்துகொண்டு அங்கே தனக்கென கூடாரம் அமைத்துத் தங்கினார்.

இங்கே உள்ள கொடைக்கானல் ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். இந்த ஏரி 1863 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.

இந்த ஏரியின் அருகே உள்ள மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.

மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ப்ரயண்ட்பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன. 150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலைத் துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.

தலையர் நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது. இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

இங்கு மொத்தம் மூன்று தூண்பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களில் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும்.

குறிஞ்சி ஆண்டவர் கோவில்  1934 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்த லீலாவதி என்பவரால் கட்டப்பட்டது இந்தக் கோவில். இந்தக் கோவிலின் முக்கிய கடவுள் குறிஞ்சி ஆண்டவர் என்றழைக்கப்படும் முருகன். பன்னிரண்டு  வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவை இங்கு பார்க்கலாம்.

கோக்கர்ஸ் வாக், டால்பின் மூக்கு, தற்கொலைப் பள்ளத்தாக்கு, பிசாசின் சமையலறை (Devil’s kitchen) , ஊசியிலை காடு , பியர் சோழா அருவி (Bear shola Falls) , கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் என கொடைக்கானலுக்கு செல்பவர்கள் தவறாமல் பார்க்கும் இடங்கள் நிறைய உள்ளது.

சென்னையிலிருந்து கொடைக்கானல் செல்பவர்கள் கொடைக்கானல் ரோடு என்ற புகைவண்டி நிலையத்தில் இறங்கி அம்மையநாயக்கானூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு வழியாக இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே கொடைக்கானலைச் சென்றடைவார்கள்.

திருக்குறள்

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.                          
      (குறள்: 436)

படிக்காதவர் முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.                                  
(குறள்: 483)

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.

Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time?