24. எழுதும் முறை – குறியீடுகள்

தமிழ் எழுதும் முறைகளுள் மிகவும் கவனிக்க வேண்டியது, இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் ஆகும். இந்தப் பாடத்தில் சொற்களுக்கு இடையே இடம்விட்டு எழுதுதலையும் சேர்த்து எழுதுதலையும் பற்றி இப்பகுதியில் அறிந்து கொள்க.

எடுத்துக்காட்டாக, ‘பாரதியார்’ என்று சேர்த்து எழுத வேண்டியதைப் ‘பாரதி யார்’ என இடம்விட்டு எழுதினால் அதன் அர்த்தம் மாறி விடுகிறது.

அதேபோல்  “அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றாள்” என்ற வாக்கியத்திற்கும் “அவள், அக்காள் வீட்டிற்குச் சென்றாள்” என்ற வாக்கியத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்க.

“என் தலைவி திவசத்திற்காக விடுப்பு வேண்டும்” என்ற வாக்கியத்தை “என் தலை விதி வசதிற்காக விடுப்பு வேண்டும்” என்று பிரித்து எழுதினால் அதன் பொருள் மாறி விடுகிறது.

மேலும் சில வார்த்தைகளைப் பார்ப்போம்.

எனவே, இடம்விட்டு எழுத வேண்டியதை இடம்விட்டு எழுதவும், சேர்த்து எழுத வேண்டியதைச் சேர்த்து எழுதிடவும் வேண்டும் என்பதையும் அறிந்து நினைவில் கொள்க.

அடுத்து தமிழில் எழுதும் போது குறியீடுகளை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று படிக்கலாம்.

முற்றுப்புள்ளி: இது வாக்கியத்தின் முடிவிலும் சொற்களைச் சுருக்கி எழுதிய எழுத்துக்களின் பின்னும் வரும். எடுத்துக்காட்டாக:

  • கண்ணன் பள்ளிக்குச் சென்றான்.
  • ஐ.எல்.டி.என் இணையதளத் தமிழ்ப் பள்ளி.

காற்புள்ளி: தொடர்பு உடைய பல பொருட்களை அல்லது வாக்கியங்களை பிரித்துக் காட்ட உதவும். எடுத்துக்காட்டாக:

  • தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் சுவையானது.

அரைப்புள்ளி: தொடர்ந்து நிற்கும் சிறு வாக்கியங்களைப் பிரித்துக் காட்டுவது. எடுத்துக்காட்டாக:

  • இராமன் எழுந்தான்; வில்லை சென்று எடுத்தான்; ஒடித்தான்; சீதையை மணந்தான்.

வியப்புக்குறி: வியப்பு, விளி, பரிதாபம் போன்ற உணர்ச்சிகளைக் காட்ட வரும். எடுத்துக்காட்டாக:

  • இது எவ்வளவு பெரிய லட்டு !

வினாக்குறி: இது வினா வாக்கியத்தின் பின்னால் வரும். எடுத்துக்காட்டாக:

  • உனக்கு எந்தப் பழம் பிடிக்கும்?

மேற்கோட் குறி: பிறர் கூறிய சொற்றோடர்களை அவர் கூறியவாறே குறிக்குமிடத்தில் உபயோகிப்பது. எடுத்துக்காட்டாக:

  • “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்பது  ஔவையாரின் கூற்று.

அடைப்புக்குறி: பொருள் விளக்கத்திற்காக வரும் வார்த்தைகளைக் அடைப்புக்குறிக்குள் எழுதுவது வழக்கம்.

  • ஆலும்(ஆலமரமும்) வேலும் (வேப்பமரமும்) பல்லுக்குறுதி.

இதைத்தவிர கீழ்கண்ட கணிதக்குறியீடுகளும் உபயோகத்தில் உண்டு.