ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை தெனாலி ராமனுக்கு ஏற்பட்டது. அதனால் என்ன செய்வது என்ற கவலை அவனை வாட்டியது.
ஒருநாள் தெனாலிக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிலையைக்கண்டு அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். அந்த மந்திரத்தை பக்தியுடன் சொன்னால் காளி தோன்றுவாள் என்றும் சொல்லிச் சென்றார்.
அதன்படியே இராமனும்
ஊருக்கு வெளியே இருந்த காளி கோயிலுக்குச் சென்று முனிவர் கற்றுக் கொடுத்த மந்திரத்தை
நூற்றியெட்டு முறை சொன்னான்.
காளி தோன்றவில்லை. இராமன் யோசித்தான். சட்டென்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. முனிவர் சொன்னது
ஆயிரத்துஎட்டு முறை என்பது. உடனே மீண்டும் கண்களை மூடிக் கொண்டு
காளி மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினான்.
இரவும் வந்து விட்டது. ஆனாலும் இராமன் காளி கோயிலை
விட்டு அகலவில்லை. திடீரென்று காளி அவன் எதிரே தோன்றினாள்.
“என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும்?”
என்று கோபமாகக் கேட்டாள் காளி. அவளை வணங்கி எழுந்த
இராமன் கைகளைக் கூப்பித் தொழுதவாறே கேட்டான். “தாயே நானோ
வறுமையில் வாடுகிறேன். என் வறுமை அகலும் வழியும் எனக்கு நல்லறிவும்
தரவேண்டுகிறேன்.” காளி பெரிதாகச் சிரித்தாள்.
“உனக்குப் பேராசைதான். கல்வியும் வேண்டும்
செல்வமும் வேண்டுமா?”
“ஆம் தாயே. புகழடையக் கல்வி வேண்டும்.
வறுமை நீங்கப் பொருள் வேண்டும். இரண்டையும் தந்து
அருள் செய்ய வேண்டும்.” என்றான் இராமன்.
காளி புன்னகையுடன் தன் இரண்டு கரங்களை நீட்டினாள். அதில் இரண்டு கிண்ணங்கள் பாலுடன் வந்தன. அந்தக் கிண்ணங்களை
இராமனிடம் தந்தாள் காளி.
“இராமா! இந்த இரண்டு கிண்ணங்களிலும் உள்ள
பால் மிகவும் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை மட்டுமே
குடிக்க வேண்டும். உனக்கு எது மிகவும் தேவையோ அந்தக் கிண்ணத்தின்
பாலை மட்டும் குடி” என்றாள் புன்னகையுடன்.
இராமன் ” என்ன தாயே! நான் இரண்டையும் தானே கேட்டேன். ஒரு கிண்ணத்தை மட்டும்
அருந்தச் சொல்கிறாயே. நான் எதை அருந்துவது தெரியவில்லையே”
என்று சற்று நேரம் சிந்திப்பது போல நின்றான். பிறகு
சட்டென்று இடது கரத்திலிருந்த பாலை வலது கரத்திலிருந்த கிண்ணத்தில் கொட்டிவிட்டு அந்தக்
கிண்ணத்துப் பாலை மடமடவெனக் குடித்து விட்டுச் சிரித்தான். காளி
திகைத்து நின்றாள்.
“நான் உன்னை ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்!”
“ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே
குடித்தேன்.” என்றான்.
“ஏன்
இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?”
“கலக்கக் கூடாது என்று நீ சொல்லவில்லையே தாயே!”
காளி புன்னகை புரிந்தாள். “இராமா!
என்னையே ஏமாற்றி விட்டாய். நீ பெரும் புலவன் என்று
பெயர் பெறாமல் விகடகவி என்றே பெயர் பெறுவாய்.” என்று வரம்
தந்து விட்டு மறைந்தாள். இராமன் விகடகவி என்று சொல்லிப் பார்த்துச்
சிரித்துக் கொண்டான். திருப்பிப் படித்தாலும் விகடகவி என்றே வருகிறதே
என்று மகிழ்ந்தான்.
திருக்குறள்
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். (குறள்:291)
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.
Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். (குறள்:71)
அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் த்ன்பத்தைக் காணும் போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்
Is there any fastening that can shut in love? Tears of the affectionate will publish the love that is within.