19. திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி என்ற திருச்சி, காவிரிக்கரையில் அமைந்த பழமையான நகரம். இங்கு கோயில் கட்டடக்கலையும், எழில் நிறைந்த கோபுரங்களும், சிற்பங்களும், இயற்கை வனப்பும் நிறைந்துள்ளன. திருச்சி மாநகரம் மலை கோட்டையைச் சுற்றி அமைந்துள்ளது. மலை கோட்டையைத் தவிர தேவாலயங்கள், கல்லூரிகள், மற்றும் சமுதாய நல அமைப்புகள் பல உள்ளன. சிறந்த உட்கட்டமைப்பு கொண்ட நகரமான திருச்சி, தமிழகத்தின் முக்கிய நகரமாக விளங்குகிறது.

திருச்சியின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாக மலைக்கோட்டைக் கோயில் விளங்குகிறது.  83 மீட்டர் உயரத்தில் இந்த கோட்டை அமைந்துள்ளது. இதனால் திருச்சி, மலை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. மலை மீது ஏறி செல்லும் வழியில் தாயுமானசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நூற்று கால் மண்டபம் உள்ளது. கோயிலின் விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. இந்த மலையின் மீது உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த கோயில் நாயக்கமன்னர்களின் ராணுவ அரணாகவும் விளங்கியது. பல்லவர்கள் ஆட்சியின் போது இந்த மலையைக் குடைந்து குகைக் கோயில்களை அமைத்தனர். இந்த மலைகோயில் தற்போது சத்திரம் என அழைக்கப்படும் பரபரப்பான வர்த்தக இடமாக மாறிவிட்டது.

புகழ் பெற்ற வைணவ தலமான, ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் திருச்சி நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோயிலின் வடக்குப் பகுதி தென்னை மரங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த கோயில் காவிரி நதியின் நடுவே 2.5 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. உலகின் பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோயிலின் ராஜகோபுரம் இந்தியாவிலேயே மிக பெரியதாகும். ஸ்ரீரங்கம், திருச்சி நகருடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ராணி மங்கம்மாள் அரண்மனையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியின் அருகே உள்ள கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள ரயில்வே தொங்குபாலம், தென்னிந்தியாவின் முதல் தொங்குபாலமாகும். மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டது இதன் சிறப்பு அம்சமாகும். பாலத்துக்கு நடுவில் தண்ணீர் செல்லும் வசதியும், அதற்கு மேல் வாகனங்கள் செல்லும் வசதியும் கொண்ட மூன்றடுக்கு வடிவம் கொண்டது.

காவிரியின் குறுக்கே உள்ள பழங்கால அணை கல்லணை ஆகும். முதலாம் நூற்றாண்டில் கரிகாலசோழனால் கட்டப்பட்டது. நகரின் நீர்பாசனத்திற்கு இந்த அணை மிகவும் உதவிகரமாக உள்ளது. திருச்சி நகரில் இருந்து 24 கி.மீ. தொலைவில் இந்த அணை உள்ளது. கல்லணை நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும்.

திருச்சியில் உள்ள “பாரத மிகுமின் தொழிலகம்” என்றும் சுருக்கமாக “பெல்” (BHEL) என்றும் அழைக்கப்படுகின்றது. மின்னுருவாக்கு நிலையங்களுக்கும் பெருவகை மின்னுருவாக்குத் துணைகருவிகளையும், மற்ற தொழில் துறை நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகளையும் இந்நிறுவனம் உருவாக்கி வழங்குகிறது.

திருக்குறள்

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.                       (குறள்:247)

பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.

As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.                          (குறள்:396)

மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.