17. ஏமாற்றாதே, ஏமாறாதே

கபாலிபுரம் என்ற மாநகரில் கபிலன் என்ற ஓவியன் இருந்தான். ஓவியம் வரைவதில் மிகுந்த திறமை உடையவன். பணக்காரர்களை ஓவியமாக வரைந்து கொடுப்பான். அவர்களும் அந்த ஓவியத்தை நல்ல விலை கொடுத்து வாங்குவர். அதைத் தங்கள் வீட்டில் அழகாக மாட்டி வைப்பர்.

அந்த ஊரில் ராஜன் என்ற செல்வன் இருந்தான். யாருக்கும் எதையும் தராத கருமி அவன். அவனுடைய பிறந்த நாள் விழா வந்தது. நிறைய உறவினர்கள் விழாவிற்கு வந்திருந்தனர். ராஜனின் இயல்பை அறியாத கபிலன் அந்த விழாவிற்குச் சென்றான். ராஜனை வணங்கிய அவன், “ஐயா! நான் சிறந்த ஓவியன். உங்களை அப்படியே ஓவியமாக வரைந்து தருகிறேன். அதை வரவேற்பு அறையில் அழகாக மாட்டி வைக்கலாம். அந்த ஓவியத்திற்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு கருமி ராஜன், “நீ வரையும் ஓவியம் என்னைப் போலவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஆயிரம் பணம் தருகிறேன். இல்லாவிட்டால் பணம் எதுவும் தரமாட்டேன்,” என்றான். “உங்களைப் போலவே ஓவியம் வரைந்து ஒரு வாரத்தில் தருகிறேன்.  குறை ஏதும் இருந்தால் பணம் தர வேண்டாம்,” என்றான் ஓவியன்.

ராஜனைப் போலவே ஓவியம் வரைந்து எடுத்து வந்தான். அந்த ஓவியத்தை மேலும் கீழும் பார்த்தான் ராஜன். “இந்த ஓவியம் என்னைப் போலவா இருக்கிறது? நீயே பார். இவ்வளவு நரையா என் தலையில் உள்ளது? என்னைக் கிழவனாக்கிவிட்டாயே,  நான் இருப்பது போல இளமையாக ஓவியத்தை வரைந்து கொண்டு வா,” என்றான்.

ஓவியத்தில் வேண்டிய மாற்றங்கள் செய்து, மீண்டும் ராஜனிடம் கொண்டு வந்தான். “என்னைத் தானே ஓவியம் வரையச் சொன்னேன். நீ எவனோ ஓர் இளைஞனை வரைந்து உள்ளாயே, இளமையும் முதுமையும் கலந்தது போல உன்னால் வரைய முடியாதா?” என்று கேட்டான். இப்படியே ஒவ்வொரு முறையும் ஏதெனும் குற்றம் கூறி ஓவியனை அலைக்கழித்தான்.

ஓவியன் பீர்பாலிடம் வந்து நடந்ததை சொன்னான், “அந்தச் செல்வன் ஓவியம் வாங்காமல் என்னை ஏமாற்றுகிறான். என் உழைப்பிற்கு நீங்கள்தான் ஊதியம் வாங்கித் தர வேண்டும்,” என்று வேண்டினான்.

ராஜனை வரவழைத்தார் பீர்பால்.“ஏன் இந்த ஓவியனை ஏமாற்ற நினைக்கிறீர். பலமுறை திருத்தம் செய்தும் ஓவியத்தை வாங்க மறுக்கிறீராமே?” என்று கேட்டார்.“அமைச்சரே! நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னைப் போல ஓவியம் வரைந்து தா. ஆயிரம் பணம் தருகிறேன் என்று இவனிடம் சொன்னேன். இவன் வரைந்த ஓவியம் என்னைப் போல இல்லை. அதனால்தான் பணம் தரவில்லை. என்னைப் போலவே ஓவியம் வரைந்து தரச் சொல்லுங்கள். ஆயிரம் பணத்திற்குப் பதில் இரண்டாயிரமே தருகிறேன்,” என்றான் ராஜன்.“

அதற்கு பீர்பால் “அப்படியா? ஒரு வாரம் சென்று வாருங்கள். உங்களைப் போலவே ஓவியம் இங்கு இருக்கும். அதில் குறை இருந்தால் பணம் தரவேண்டாம்,” என்றார் பீர்பால்.

ஒரு வாரம் சென்றது. பீர்பாலின் மாளிகைக்கு ஓவியன் முதலில் வந்தான். பிறகு ராஜன் வந்தான்.“உங்களைப் போலவே வரையப்பட்ட ஓவியம் இது. திரைச் சீலையால் மூடப்பட்டுள்ளது. சீலையை விலக்கிப் பாருங்கள். சிறு குறையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது,” என்றார்.

“எப்படியும் வரைந்து இருக்கட்டும். குறை கண்டுபிடித்து விடலாம்’ என்று திரையை விலக்கினான் அவன்.அங்கே அவனைப் போலவே ஓவியம் இருந்தது. ஆனால், அந்த ஓவியம் அசைந்தது; கண்களை இமைத்தது. “அது ஓவியம் அல்ல. எதிரே உள்ளவர் வடிவத்தை அப்படியே காட்டும் நிலைக்கண்ணாடி. அதில் தன் வடிவம் தெரிகிறது’ என்பது அவனுக்குப் புரிந்தது.

“அமைச்சரே! இது ஓவியம் அல்ல. முகம் பார்க்கும் கண்ணாடி,” என்றான் அவன்.“கண்ணாடியில்தான் நம் வடிவம் அப்படியே தெரியும். குறை எதுவும் காணமுடியாது. ஓவியம் என்றால் குறைகள் இருக்கத்தான் செய்யும். இந்தக் கண்ணாடியை எடுத்துச் செல்லுங்கள். ஓவியனுக்கு இரண்டாயிரம் பணம் தாருங்கள்,” என்றார் பீர்பால்.“அமைச்சரே! இது நியாயம் அல்ல!” என்றான் அவன்.   “நியாயத்தைப் பற்றி நீங்கள் பேசாதீர்கள்” என்றார் பீர்பால். இரண்டாயிரம் பணம் தந்து இதை வாங்கிச் செல்லுங்கள். இல்லையேல் ஏமாற்ற முயன்றதற்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்,” என்றார் பீர்பால். வேறு வழியில்லாமல் ஓவியனிடம் இரண்டாயிரம் பணம் கொடுத்து அந்தக் கண்ணாடியை எடுத்துக் கொண்டு வருத்தத்துடன் சென்றான் பணக்காரன்.

திருக்குறள்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.                       (குறள்:293)

பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.

Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.                       (குறள்:596)

நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.

In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.