15. கப்பலோட்டிய தமிழன்

வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

 ஆறு வயதில் வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். அவரது பாட்டியார் அவருக்கு சிவபுராணக் கதைகளைக் கூறுவார். அவரது பாட்டனாரிடம் இருந்து அவர் இராமாயணக் கதைகளையும், பாட்டனாரோடு சேர்ந்து சென்று அல்லிக் குளத்து சுப்ரமணிய பிள்ளை கூறிய மகாபாரதக் கதைகளையும் கேட்டறிந்தார்.

வ.உ.சி. ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞராக திகழ்ந்தார். அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார். அவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்புக்குரியவராக இருந்தார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். “பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி”, இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது.

ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.அவர் பிரான்ஸில் இருந்து “எஸ்.எஸ். காலியோ” என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

இந்திய செய்தித் தாள்கள் அனைத்தும் இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி. அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது.

பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால் இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர்.

ஆங்கிலேய அரசு அலுவலர்கள் என பலரும் பல விதமான தொல்லைகள் ஏற்படுத்தினர். ஆனால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயலவில்லை. இதனால் இவர் “கப்பலோட்டிய தமிழன்” என்று அழைக்கப் பட்டார்.

சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். அவ்வாறே அவரைக் கைது செய்தார்கள்.

சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒரு மாடு போல உழைத்தார். அவரது எடை மிகவும் குறைந்தது. மருத்துவர் சிறையதிகாரியை எச்சரித்தார். உடனே அரிசி உணவு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அவர் சொந்த உணவை உண்ணலாம் என்று கூறியது. இவ்வாறு வசதியான குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் சுதந்திரத்திற்காக “செக்கிழுத்த செம்மலை” யாராலும் மறக்க முடியாது.

திருக்குறள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.                               (குறள்:972)

எல்லா மக்களும் பிறப்பால் சமமே அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.                              (குறள்:66)

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

“The pipe is sweet, the flute is sweet,” say those who have not heard the prattle of their own children.