பெயரெச்சங்கள் / பெயரடைகள் / பெயருரிச்சொற்கள்: ஒரு பொருளின், இடத்தின், நபரின் (பெயரின்) குணத்தினை அல்லது தன்மையை மேலும் விவரித்துக்கூற பயன்படும் சொற்கள் பெயரெச்சங்களாகும். இவை சுட்டுப்பெயர்களை விவரித்துக் கூறவும் பயன்படும்.
பெயரெச்சம்: ஒரு வினைச்சொல்லானது பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியுமாயின் அது பெயரெச்சம் ஆகும். எடுத்துக்காட்டாக:
- படித்த மாணவன்
- வந்த வாகனம்
- தந்த பணம்
- கண்ட கனவு
- சென்ற நாட்கள்
மேற்கண்டவற்றுள் படித்த, வந்த, தந்த, கண்ட, சென்ற போன்றவை பெயரெச்சங்கள் ஆகும். பெயரெச்சம் நான்கு வகைப்படும்.
தெரிநிலைப் பெயரெச்சம் காலத்தை வெளிப்படையாகக் காட்டி, அச்சொல் முடியாமல் நின்று, பெயர்ச்சொற்களைக் கொண்டு முடிந்தால் அது தெரிநிலைப் பெயரெச்சமாகும். இது மூன்று காலங்களிலும் வரும்.
எடுத்துக்காட்டு:
- படித்த மாணவன்
- படிக்கின்ற மாணவன்
- படிக்கும் மாணவன்
குறிப்புப்
பெயரெச்சம் காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், ஒரு செயலை உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி பெயர்ச்சொல்லாக முடிந்தால் அதுவே குறிப்பு
பெயரெச்சம் அல்லது பெயரடை எனப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
- நல்ல பையன்
- கரிய உருவம்
- அழகிய பெண்
- உயர்ந்த மனிதன்
எதிர்மறைப் பெயரெச்சம் எதிர்மறை அர்த்தத்துடன் வரும். எடுத்துக்காட்டாக:
- பாடாத பைங்கிளி
- கேட்காத செவி
- பேசாத பெண்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது ஈற்றெழுத்து கெட்டுவரும் எதிர்மறைப் பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாகும். “ஆ” எனும் விகுதியில் முடியும். எடுத்துக்காட்டாக:
- பாடா பைங்கிளி
- பொய்யா மொழி
- வாடா மலர்
- பேசா வாய்
- செல்லா காசு
இதில் கடைசி எழுத்தான ‘த’ என்னும் எழுத்து கெட்டு (மறைந்து) வந்துள்ளது.