13. தமிழர் திருநாள் – பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் “பொங்கல் பண்டிகை’ என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக கிராமங்களில் உழவர்கள் அறுவடை முடித்தவுடன் இந்தப் பண்டிகை வருவதால் இது “உழவர் திருநாளாகவும்” கொண்டாப்படுகிறது.

பொங்கலின் முதல் நாள் போகிப் பண்டிகை. மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை “போகி’யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, “பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.

இரண்டாம் நாள் பொங்கல் பண்டிகை, அறுவடையான புத்தரிசியை மண் பானையில் வைத்து சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு. பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, “பொங்கலோ பொங்கல்’ என்று கூவி மகிழ்வார்கள்.

இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். பொங்கலுக்கு புதிய ஆடைகள் அணிவார்கள்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. உழவர்களுக்கு உதவும் மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம்.  மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.

காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, “வீர நடை” நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு “அங்கவஸ்திரம்” போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே. மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் கொண்டாடப் படுகிறது.

நான்காம் நாள் காணும் பொங்கல். பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது “கனு” பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.

“காணும் பொங்கல்’ அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். பொங்கல் அன்று எல்லாரும் மகிழ்சியாக வாழ “பொங்கல் தின வாழ்த்துக்களை” பகிர்ந்து  கொள்வார்கள். தமிழ் நாட்டில் புது திரைப் படங்கள் பொங்கல் அன்று வெளியிடப்படுவது  மக்களை மேலும் மகிழ்விக்கின்றது.

திருக்குறள்

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
                          (குறள்: 428)

பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்பட வேண்டியதறிந்து  பயப்படுவது அறிவாளிகளின் வேலை.

Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
                                (குறள்: 435)

தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்குமுன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.

The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.