11. வியாபாரியும் கழுதையும்

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

அப்படி ஒரு நாள் வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்து செல்லும் போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கி விட்டான். ஆனால்,  நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை. கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினான்.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போலச் செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது. கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்து வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான்.

அடுத்த நாளும் கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று வியாபாரி கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல, தடுமாறி ஆற்றில் விழுந்தது.

மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டதை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நாமும், நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.

திருக்குறள்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.                            (குறள்:69)

தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

The mother who hears her son called “a wise man” will rejoice more than she did at his birth.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.                             (குறள்:90)

தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.