09. மாமல்லபுரம்

மாமல்லபுரம் சென்னையில் இருந்து தெற்கே சுமார் அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இது வங்காள விரிகுடாக் கரையோரமாக உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில்  இருக்கிறது. இது பல்லவ மன்னன் மாமல்லன் நினைவாக இவ்வாறு அழைக்கப் படுகிறது. பல்லவர் காலத்து துறைமுகப் பட்டினமாக இது விளங்கியது. மாமல்லபுரத்தை, மகாபலிபுரம் என்றும் அழைப்பதுண்டு.

கல்லிலே கலை வண்ணம் கண்டதற்கு மாமல்லபுரம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். மாமல்லபுரத்து கட்டடங்களைக் குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். குடைவரைக் கோயில்கள் என்பது பெரிய கற்குன்றுகளைக் குடைந்து கோயில்களாக்குவது. ஒற்றைக்கல் கோயில் என்பது மிகப்பெரிய ஒற்றைக்கல்லைக் குடைந்து இரதம் அல்லது கோயில் போல வடிவமைப்பது. கட்டுமானக் கோயில்கள் என்பது பெரிய கற்துண்டுகளை அழகாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டடங்களைக் கட்டுவது.

மகாபலிபுரத்தில் உள்ள முக்கிய கலைச்சின்னங்களில் ஒன்றான கடற்கரைக் கோயில் உலகப்பாரம்பரிய தலமாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் திராவிட சிற்பக்கலை மரபை பிரதிபலிக்கும் மிக முக்கியமான கோயிலாக பிரசித்தி பெற்றுள்ளது.

சிவலிங்கம் மற்றும் விஷ்ணுவுக்கான சன்னதி ஆகியவை இந்த கோயிலில் இடம் பெற்றுள்ளன. சிம்ம வாகனத்தில் அமர்ந்தபடி துர்க்கை வீற்றிருக்கும் சிலையை இங்கு தரிசிக்கலாம்.

பஞ்ச ரதம் என்றழைக்கப்படும் ஐந்து ரதங்கள், நிஜத்தேர் போன்று காணப்படும் கோவில் வடிவிலானவை. இந்த ரதங்கள் ஒவ்வொன்றும் ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டவை. இவற்றுக்கு தர்மராஜ ரதம், பீம ரதம், திரௌபதி ரதம், நகுல-சகாதேவ ரதம் என பஞ்ச பாண்டவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தர்மராஜ ரதத்தில், அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் உள்ளது.

சுமார் 30 மீட்டர் உயரமும்,  60 மீட்டர் அகலமும் கொண்ட சிற்பங்கள், செதுக்கப்பட்ட பாறையே அர்ச்சுனன் தபசு என்று அழைக்கப்படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் என பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏதோ ஒரு புராணக்கதை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. ஒற்றைக்காலில் நின்று அர்ச்சுனன் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.  இது அர்ச்சுனன் தபசு என்றழைக்கப் படுகிறது.

கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி சிறப்பாக உள்ளது.

இவை தவிர வராகமூர்த்தி சிற்பம், கோவர்த்தன மலை சிற்பம் போன்றவையும் நிறைய ஆச்சரியங்கள் கொண்டவை. இப்படி சிறப்பு வாய்ந்த மகாபலிபுர நினைவுச் சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக 1984ல் யுனெஸ்கோ அறிவித்தது. சோழமண்டல கலைக்கிராமத்தில் ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதியில் நில அகழ்வு செய்தபோது, 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோம, சீன நாணயங்கள் சில மண்ணுக்கடியில் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. இவை பண்டைய வாணிகத்திற்கு சான்றாக உள்ளன.

திருக்குறள்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.                       (குறள்:231)

ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

Give to the poor and live with praise. There is no greater profit to man than that.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.                                 (குறள்:475)

மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து போகும்.

The axle tree of a bandy, loaded only with peacocks’ feathers will break, if it be greatly overloaded.