‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்தியச் சுதந்திரப் போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாகச் சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர்.
1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக பிறந்தார்.
இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது. லண்டனில் ‘தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது’ என்று தன்னுடைய பணியை துறந்து இந்தியாவிற்குத் திரும்பி வரவும் செய்தது.
இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜியை ஆங்கில அரசு கைது செய்தது.
சி.ஆர் தாஸ், அவர் “சுயாட்சிக் கட்சியை” தொடங்கியது மட்டுமல்லாமல், “சுயராஜ்ஜியா” என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார்.
நேதாஜி, 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். நேதாஜி அவர்கள், தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், ‘நேதாஜி’ (மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார்.
1941 ஆம் ஆண்டு “சுதந்திர இந்திய மையம்” என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார்.
பிறகு, இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனைத் தலைமையேற்றும் நடத்தினார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தளத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.
“எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்” என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய மாவீரன். இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர்.
மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவைச் சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றும் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.
திருக்குறள்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (குறள்:110)
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (குறள்:616)
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்த்து விடும்.
Labor will produce wealth; idleness will bring poverty.