05. நவராத்திரி விழா

அம்மனுக்குரிய பண்டிகைகளில் தலைசிறந்தது ஒன்பது நாட்கள் கொண்டாப்படும் நவராத்திரி விழா. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளில் நவராத்திரி தொடங்குகின்றது. ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் சேர்த்து தசராவாக,  பத்துநாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி வழிபாடு பெரும்பாலும் பெண்களுக்கே உரியது. நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள், கன்னிப்பெண்கள், சுமங்கலிகள் எல்லாரும் மனமகிழ்ச்சி பெறுகிறார்கள். நவராத்திரி விழாவில் இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும்.

நவராத்திரியின் முதல் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.

துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ‘நவராத்திரி ‘ எனப்படும்.

அவனை வதைத்த பத்தாம் நாள் ‘ விஜயதசமி’. விஜயம் என்றால் வெற்றி. வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள். பத்தாவது நாளான விஜய தசமி அன்று புதிய கல்வி கற்பதைத் தொடங்குவார்கள்.

துர்க்கை, வீரத்தின் தெய்வம். இலட்சுமி செல்வத்தின் தெய்வம். சரஸ்வதி கல்வியின் தெய்வம். குழந்தைகள் கல்வியினை விஜய தசமி அன்று ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்ற நம்பிக்கை உண்டு.

நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் பொம்மைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகர் பொம்மை இடம் பெறுவதும் சிறப்பு. அது மட்டுமின்றி பல்வேறு பொம்மைகளையும் கொலுவில் வைத்து அழகுபடுத்தலாம். கொலுவில் வைக்க பல்வேறு அம்சத்தை விளக்கும் வகையில் பொம்மைகள் வைப்பார்கள்.

வீடுகளில் பெண்கள் கொலுவைத்து உறவினர்களையும், அண்டை வீட்டில் உள்ள பெண்களையும் வரவழைத்து, தேவியர் பெருமைகளை உணர்த்தும் பாடல்களைப் பாடி சிறப்பு பூஜைகள் செய்து, பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் வழங்கி இவ் விரதத்தை கொண்டாடுவது வழக்கமாகும்.

ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு நெய்வேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், தயிர்ச்சாதம், வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய்ச்சாதம், கற்கண்டுச் சாதம், அக்கர வடசல், பல்வேறு சுண்டல் வகைகள் செய்து படைப்பார்கள். பிறகு எல்லாருக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.

வட இந்தியாவில் பத்து நாட்களுக்கு ஒவ்வொரு இரவிலும் திறந்த வெளி மைதானத்தில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்து ‘தாண்டியா’ என்னும் ஒருவகை நடனம் ஆடிக்  கொண்டாடுவார்கள். இது நமது ஊரில் ஆடும் கோலாட்டம் போல இருக்கும்.

நவராத்திரி இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் ஒரு குதூகலம் நிறைந்த ஒரு கொண்டாட்டம் ஆகும். இது எல்லா வயது மனிதர்களுக்கும் புத்துணர்ச்சியையும், சக்தியையும் சந்தோஷத்தையும், சமூக ஈடுபாட்டையும் தருகிறது.  

திருக்குறள்

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.                            (குறள்:15)

பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.

Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.                              (குறள்:997)

மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.

He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.