03. மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

மகாகவி என்று பெயர் பெற்ற சுப்பிரமணிய பாரதியார் ஒரு தமிழ்க் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். தன்னுடைய பாட்டுகளின் மூலமாகச் சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர்.

இளமையிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்த சுப்பிரமணியன், எட்டையபுர சமஸ்தானப் புலவர்கள் அவையில் பாரதி என்ற பட்டம் பெற்றார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்”என அழைக்கப்பெற்றார்.

இவர் செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.  காசி இந்துக் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார். பின்னர் அலகாபாத் சர்வகலாசாலையில் புதுமுகத் தேர்வில் முதன்மையாகத் தேர்வு பெற்றார். வடமொழியோடு இந்தியிலும் தேர்ச்சி பெற்றார்.

1903 ஆம் வருடம் எட்டையபுரம் மன்னர் அழைப்பிற்கிணங்க எட்டையபுரம் வந்தார். அரசவைக் கவிஞராகப் பணி புரிந்தார். பிறகு மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின் அதனை விடுத்துச் சென்னையில் சுதேசமித்திரன் நாளிதழில் துணையாசிரியராகப் பணி புரிந்தார். மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது.

பிறகு இந்தியா என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். உடன் Young India என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றார். அங்கு திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் போன்றோரைச் சந்தித்தார்.

சுதேச கீதங்கள் என்ற முதல் நூலை வெளியிட்டார். தனது உணர்ச்சிமிக்க பாடல்களால் இந்தியா பத்திரிகையின் மூலமாக விடுதலைப் போராட்டத்தை நடத்தினார். அதனால் ஆங்கிலேயே அரசு பாரதியைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தது. நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாரதி புதுவைக்குச் சென்றார்.

பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுதியான ஜன்மபூமி வெளியானது. பாரதி,  கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற கவிதை நூல்களை வெளியிட்டார். பகவத்கீதையைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதன் பிறகு சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

அவர் தன்னுடைய 39-ம் வயதில் திருவல்லிக்கேணியில், கோயில் யானை, தாக்கியதால் நோய்வாய்ப்பட்டு இறந்தார். எனினும் அவரின் வீர உரைகளும், பாடல்களும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

அவர் நினைவாக எட்டயபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபமும், மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

அவர் குழந்தைகளுக்காக எழுதிய ஒரு பாடலைப் பார்ப்போம்:

ஓடி விளையாடு பாப்பா -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா -ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

காலை எழுந்த உடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா -ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

திருக்குறள்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.                                    (குறள்:45)

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

If the married life possesses love and virtue, these will be both its duty and reward.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
                      (குறள்:392)

வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

Letters and numbers are the two eyes of man.