01. பொருளாதாரத் தலைநகரம் – மும்பை

இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பை, நாட்டின் நிதித்துறையின் தலைமையிடமாக கருதப்படுகிறது. மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக உள்ளது. இனி மும்பையில் பார்க்க வேண்டிய இடங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

மும்பையின் கொலாபா பகுதியில் அமைந்திருக்கும் கட்டடக் கலை அதிசயம் கேட்வே ஆஃப் இந்தியா.  இந்தக் கட்டடம் இந்து மற்றும் முஸ்லிம் கட்டடக்கலைகள் இரண்டையும் பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.  இது 1911-ஆம் ஆண்டு மும்பை வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி மேரி இருவரையும் வரவேற்கும் பொருட்டு எழுப்பப்பட்டது.

மும்பை என்றாலே நினைவுக்கு வருவது போக்குவரத்து நெரிசலும்,  ஜனக் கூட்டமும், எண்ணற்ற உணவு வகைகளும் வேறுபட்ட கலாச்சாரங்களும் தான். மும்பையின் சமீபத்திய பெருமைக்கு காரணமாக விளங்குவது பாந்த்ரா-வோர்லி ஸீ லிங்க் என்று சொல்லலாம்.

இந்தப் பாலத்தின் மூலம் வோர்லி என்ற இடத்திலிருந்து வாகனத்தில் செல்லும் ஒரு பயணி, பாந்த்ரா என்ற இடத்தை பத்தே நிமிடத்தில் அடைந்துவிட முடியும். இது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன் பயணிகள் பார்த்து மகிழ வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.

மும்பையின் மரீன் டிரைவ் பகுதிக்கு நீங்கள் சென்றால் உலகின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான சௌபாத்தி பீச்சின் அழகைக் காணலாம். இங்கு பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச்கள், ஃபல்லூடா போன்ற மும்பையின் சுவைமிகு தெருவோர உணவுகளை ருசிக்கலாம். அதுமட்டுமில்லாமல் இரவு வேலைகளில் மரீன் டிரைவ் பகுதியிலிருந்து பார்த்தால் மும்பையின் வானவிளிம்பு மின்விளக்குகளால் ஜொலிக்கும்.

மும்பையின் புகழ்பெற்ற வோர்லி பகுதியில் கடலை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது ஹாஜி அலி மசூதி.

இங்கு சாதி மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதன் அருகில் உள்ள மகாலஷ்மி கோவிலும் பார்க்க வேண்டிய இடங்களில் மிக முக்கியமானதாகும்.

இதைத் தவிர, மும்பையில் காண வேண்டிய இடங்கள் எலிபெண்டா குகைகள், ஜஹாங்கீர் கலைக் கூடம், சித்தி விநாயகர் கோவில், எஸெல் வொல்ட், ஜுஹு கடற்கரை போன்றவைகளாகும்.

மும்பை என்றும் பரபரப்பாக இயங்கி வரும் இந்தியாவின் முதன்மையான வர்த்தக நகரம். சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழில் அதிபர்கள் என்று இந்தியாவின் முக்கிய புள்ளிகள் அனைவரும் இங்குதான் வசித்து வருகிறார்கள். இந்தியாவின் நுழைவு வாயில் என்ற சிறப்பை பெற்றுள்ள இந்நகரம் இந்தியாவின் பொருளாதாரத் தலை நகராக விளங்குகிறது.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.                                (குறள்:3)

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).