25. தாஜ்மஹால்

உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. இது யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆக்ராவில் அக்பரால் கட்டப்பட்ட கோட்டையும் அதனுள் ஷாஜகானால் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் முத்து மசூதி ஆகியனவும் உள்ளன.

தாஜ்மஹால் உலகிலுள்ள ஏழு அதிசயச் சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது முகாலயப்பேரரசர் ஷாஜஹான் அவர்களால் அவரது அழகிய மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறை மாளிகையாகும். இந்திய, பர்ஷிய மற்றும் இஸ்லாமியக் கட்டிடக்கலை அம்சங்கள் கலந்து இந்த பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

1632ம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை முடிப்பதற்கு 21 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதன் நிர்மாணத்தில் பங்கேற்றிருக்க வேண்டும்.

இந்த மாளிகை வளாகத்தின் பிரதான அம்சம் மும்தாஜின் கல்லறை அமைந்திருக்கும் விசாலமான கட்டமைப்பாகும். ஒரு சதுர வடிவ மேடைப்பீடத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கும் சலவைக்கற்களாலான கல்லறையைச் சுற்றிக் குமிழ் வடிவக் கூரை மற்றும் தோரண வாயில்களுடன் இந்த மாளிகை காட்சியளிக்கிறது.

40 மீட்டர் உயரம் கொண்ட நான்கு மினாரெட்டுகள் (தூண் கோபுரங்கள்) இந்த பிரதான கல்லறை மாளிகையைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தூண் கோபுரமும் மூன்று தளங்கள் மற்றும் இரண்டு உப்பரிகைகளுடன் காட்சியளிக்கின்றன.

இந்த மாளிகை அமைப்பைச் சுற்றிலும் 300 சதுர மீட்டர் பரப்பில் ‘சார்பாக்’ எனும் பூங்கா அமைந்துள்ளது. மேடை போன்ற நடைபாதைகளால் 16 சதுர புல்வெளி பூத்தரைகளாக இந்த பூங்கா பிரிக்கப்பட்டிருக்கிறது.

காதலிற்கும், கட்டடக் கலைக்கும் அதிசயத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் தாஜ்மஹால் அருகே, யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ராவின் செங்கோட்டை.

இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் உறுதியான சுவர்களுடன் திகழும் இக்கோட்டை, ஓராயிரம் ஆண்டுக் கால வரலாற்றுச் சுவடாக விளங்குகிறது. முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் கை வண்ணமே ஆக்ரா கோட்டையை, இந்த நாட்டிலுள்ள மற்ற கோட்டைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

தனது காதல் மனைவி மும்தாஜ் இறந்தபின், அவளின் நினைவாக படைத்த தாஜ்மஹாலை, தனது வாழ்வின் கடைசி காலத்தில் தனது மகனால் இதே கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது, மூசாம்மன் புர்ஜ் கலைக்கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தார் ஷாஜஹான் என்று வரலாறு கூறுகிறது.

ஆக்ரா கோட்டைக்குள் ஷாஜஹான் கட்டிய அழகிய பகுதிகளில் எங்கிருந்து பார்த்தாலும் தாஜ் மஹாலின் உன்னத காட்சியைக் காணலாம். முகலாய பேரரசர்கள் இக்கோட்டையிலிருந்துதான் இந்தியாவை ஆண்டுள்ளார்கள். இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலையும், இக்கோட்டையையும் பார்க்க வருகிறார்கள்.

திருக்குறள்

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.                                    (குறள்: 592)

மன உறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.

The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.                                   (குறள்:601)

ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

By the darkness of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.