23. இராமேஸ்வரம்

இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது இந்தியாவில் புனித நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது வங்கக் கடலில் உள்ள மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த ஊர் இராமேஸ்வரம் நகரமாகும்.

இராமபிரான் சிவலிங்கம் வைத்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணியத் தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப்பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது இராமேஸ்வரம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் இராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இந்த இராமேஸ்வரம் கோவில் உள்ளது.  இந்த கோவிலின் தற்போதைய வடிவமைப்பு 12-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. கலையும், கட்டிடக்கலையும் இந்த கோவிலின் அற்புதங்களில் ஒன்றாகும்.  சிவபெருமானுக்கான இந்த கோவிலுக்கு வருடம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

தமிழகத்தின் பெரும்பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தப் பாலம். இந்த பாலமானது பெரிய கப்பல்கள் வரும்போது தூக்கப்பட்டு வழிவிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

காந்தமதனா பர்வதம் என்ற மலையின் உச்சியில் ராமர் பாதம் என்று அழைக்கப்படும் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து, தெளிவான நீலநிறத்தில் இருக்கும் கடலையும், அதைச்சுற்றியுள் மரகத பச்சை நிறத்தில் இருக்கும் தீவையும் காண்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். அதேபோல், பாக் நீரிணைப்பின் ஒரு பகுதியில் அமைந்துள்ள அரியமான் கடற்கரை, சுற்றுலாப் பயணிகளுக்காக, நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நாள் முழுவதும் மென்மையான குளிர்காற்று தவழ்ந்து வரும் இந்த கடற்கரை சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும். இராமேஸ்வரம் தீவின் மனம் மயக்கும், கம்பீரமான தோற்றத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள்.

திருக்குறள்

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.                          (குறள்:181)

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him “he does not backbite”.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.                                   (குறள்: 95)

தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.

Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).