19. திருக்குற்றாலம்

குற்றாலம் என்றவுடன் நினைவுக்கு வருவது குற்றால அருவி. குற்றால அருவி என்றவுடன் நினைவுக்கு வருவது எண்ணெய் குளியல், குளிர்ச்சியான வானிலை, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆக்ரோசத்துடன் கொட்டித்தீர்க்கும் தண்ணீர். குற்றால அருவி, அல்வாவுக்கு பேர் போன திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தென்காசிக்கு மிக அருகில் இருக்கிறது. இங்குள்ள குற்றாலநாதர் கோயில் பெயர் பெற்றது.

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால் குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது. குற்றால அருவியில் குளிக்கும் சுகமே தனி! மற்ற அருவிகளில் குளியல் வெறும் பொழுதுபோக்காகவே இருந்துவரும் நேரத்தில், குற்றாலம் மருத்துவக் குணம் வாய்ந்தது.

இந்த அருவிகள் பல மூலிகைச் செடிகளைத் தழுவி வந்து பாய்வதால் இந்த அருவிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தண்ணீர் ஆர்ப்பரித்து பாயும். இந்த அருவிகளுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து போகிறார்கள். தண்ணீர் கொட்டும் இந்த மாதங்கள் குற்றால சீசன் என்று அழைக்கப்படுகிறது. குற்றாலம் முழுவதும் மொத்தமாக ஒன்பது அருவிகள் பாய்கின்றன.

குற்றாலத்தின் மிக முக்கியமான அருவி பேரருவி. செங்குத்தான பாறையில் இருந்து பாயும் தண்ணீரைப் பார்க்கக் கண் கோடி வேண்டும். சுற்றுலாத் துறை அருவிக்கு மிக அருகில் ஒரு தடுப்புச் சுவரைக் கட்டியுள்ளது. இந்தச் சுவர்தான் அருவியின் வீரியத்தை அளக்க உதவுகிறது. சுவரையும் தாண்டி தண்ணீர் கொட்டினால், அருவி மிகவும் ஆர்ப்பரிக்கிறது என்று அர்த்தம். அப்படி சுவரைத் தாண்டி கொட்டும் நேரத்தில் குளிக்கத் தடை விதிக்கப்படும்.

அடுத்து, பார்க்க வேண்டிய அருவி, சிற்றருவி. இது பேரருவிக்கு மேலே இருக்கிறது. பேரருவிக்கு இந்த அருவியில் இருந்துதான் தண்ணீர் வருகிறது. கிட்டத்தட்ட பேரருவி போன்ற சூழலே இங்கும் இருக்கும்.

அடுத்த முக்கியமான அருவி, செண்பகாதேவி அருவி. பேரருவிக்கு மேல் கிட்டத்தட்ட காடு போன்ற பகுதியில் இயற்கையை ரசித்துக் கொண்டே நடந்து இந்த அருவியை அடைய வேண்டும். இந்த அருவிக்கு அருகில் இருக்கும் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்திரா பவுர்ணமி நாளில் திருவிழா நடைபெறும்.

அடுத்த முக்கியமான அருவி, தேனருவி. பல தேன்கூடுகள் இங்கு இருப்பதால் இந்தருவிக்குத் தேனருவி என்று பெயர் ஏற்பட்டது. தேனீக்களாலும், அருவி அமைந்துள்ள இடத்தாலும் இந்த இடம் மிக அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால், இந்த அருவியில் குளிப்பது நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் சென்று குளிக்க சிறந்த அருவி, ஐந்தருவி. இது பேரருவியில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திரிகூடமலையில் தோன்றிச் சிற்றாற்றின் வழியே பாயும் இந்த அருவி பாறையில் இருந்து பாயும் இடத்தில் ஐந்து கிளைகளாகப் பிரிந்து பாய்கிறது.

இதை தவிர, பழந்தோட்ட அருவி, புலியருவி, பாலருவி என்று வேறு பல அருவிகள் உள்ளன. பேரருவியில் இருந்து எட்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பழந்தோட்ட அருவி. புலியருவி இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவை இரண்டும் பேரருவி போல் பிரமாண்டமாய் இல்லையென்றாலும் கூட மக்கள் கூட்டம் இல்லாததால் பல மணிநேரம் சுதந்திரமாய் குளிக்கலாம். பாலருவி தேனருவிக்கு அருகில் அமைந்துள்ளது. தேனருவியைப் போல் பாலருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் எப்போது அனுபவிப்போம் என்று ஏங்கிக் கொண்டிருப்போர் பலர். நீங்களும், இந்தியாவிற்கு போகும் போது குற்றாலத்தையும், அருவியையும் பார்க்க தவறாதீர்கள்.

திருக்குறள்

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.                                        (குறள்:131)

ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

Propriety of conduct leads to eminence; it should therefore be preserved more carefully than life.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.                                             (குறள்:391)

கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.