17. சென்னை மாநகரம்

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை. பரந்த மணற்பரப்புடன் கூடிய கடற்கரை, பூங்காக்கள் மற்றும் பல்வேறு வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாக சென்னை விளங்குகிறது. சென்னை நகரம் தென் இந்தியாவின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று.

இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி இந்த நகரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த வெங்கடபதி சகோதரர்களின் கோரிக்கையின் படி, இந்த பகுதியைத் அவர்களுடைய தந்தையின் பெயரால் சென்னப்பட்டணம் என்று அழைக்க படுகிறது.

சென்னையில் பல விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரிப்பாகங்கள் உற்பத்தியிலும் நாட்டின் 35 விழுக்காடு பங்கு சென்னைக்கு உண்டு. தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இப்போது சென்னையில் உள்ள சில இடங்களைப் பற்றிப் படிப்போம்.

அண்ணா நகர் கோபுரம்: சென்னையில் உள்ள உயரமான மற்றும் பெரிய பூங்கா கோபுரம். அண்ணாநகர் பூங்காவில் அமைந்துள்ள இந்த கோபுரம் வட்ட வடிவில் சுற்றி சுற்றிச் செல்லும் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளது. இதன் உச்சியில் இருந்து சென்னையை முழுமையாக கண்டு ரசிக்க முடியும்.

பிர்லா கோளரங்கம்: இந்த நவீன கோளரங்கம் அரை வட்ட வடிவிலான உருண்டையான கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கருவிகள் மூலம் வானில் உள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் காண முடியும்.

கன்னிமாரா பொது நூலகம்: தேசிய நூலகங்களில் ஒன்று. இங்கு ஏராளமான நூல்களும் இதழ்களும் உள்ளன. கம்பூயட்டரில் இயங்கும் தொடுதிரை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

அரசு அருங்காட்சியகம்: இந்த அருங்காட்சியகத்தில் தற்கால கலைப் பொருட்கள் முதல் வரலாற்று காலத்துக்கு முற்பட்ட கலைப் பொருட்கள் வரை இடம் பெற்றுள்ளன. இங்கு தென் இந்திய ராஜ பரம்பரைகளின் நினைவுச் சின்னங்கள்  பல உள்ளன. இங்குள்ள பல்வேறு கால வெண்கல மற்றும் இதர உலோக சிற்பங்கள், விலங்கியல் மற்றும் புவியியல் பகுதிகள் பார்வையாளர்களின் கருத்தைக் கவர்வதாக உள்ளன.

எலியட்ஸ் கடற்கரை: தென்சென்னையில் அமைந்துள்ள அழகான சிற்றுலா தலம். இந்த அழகான கடற்கரைக்கு இங்கு அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயில் மேலும் பெருமை சேர்க்கிறது. 8 முகங்களுடன் கூடிய லட்சுமி விக்ரகங்கள் தனித்தனிக் கருவறையில் அமைந்துள்ளன. இந்த கடற்கரைப் பகுதியில் ஆரோக்கிய மாதா மடோனாவின் தேவாலயமும் உள்ளது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை: சென்னையின் முக்கியமான வரலாற்றுச் சின்னமாக கருதப்படும் இந்த கோட்டை இங்கிலாந்தின் மத குருவான செயின்ட் ஜார்ஜ் பெயரில் அமைந்துள்ளது. இந்த கோட்டை பகுதியில் தற்போது தமிழக சட்டசபை, தலைமைச் செயலகம், தொல்பொருள் துறை அலுவலகங்கள், ராணுவ முகாம்கள் உள்ளன. மெரினா கடற்கரை: அழகான மெரினா கடற்கரையில் நடந்து கொண்டே வங்க கடலையும் அதில் மோதும் அலைகளையும் ரசிக்கலாம். இனிமையான கடற்காற்றை சுவாசிக்கலாம். உலகிலேயே 2வது நீண்ட கடற்கரையாக மெரினா கடற்கரை திகழ்கிறது. இந்த கடற்கரைச் சாலையில் சென்னை பல்கலைக்கழகம், செனட் ஹவுஸ், சேப்பாக்கம் மாளிகை, அரசு கலைக் கல்லூரி, ஐஸ் ஹவுஸ் ஆகியவை அமைந்துள்ளன.

திருக்குறள்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.                                    (குறள்:34)

மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

Spotless be thou in mind! This only merits virtue’s name; All else, mere pomp of idle sound, no real worth can claim.

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.                       (குறள்:74)

குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.

From love fond yearning springs for union sweet of minds; and that the bond of rare excelling friendship binds.