15. ரோஜாவின் ராஜா – ஜவஹர்லால் நேரு

ரோஜாவின் ராஜா என்று அழைக்கப்படும் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளைக் கண்டால் நேரு தானும் ஒரு குழந்தையாகவே மாறி அன்பு செலுத்துவார். இதனால்தான் அவருடைய பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தந்தை மோதிலால் நேரு, தாயார் சொரூபராணி, இவர்களின் மகனாக 1889-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந்தேதி நேரு பிறந்தார். அலகாபாத்தில் அவருடைய குடும்பம் புகழ்பெற்ற வசதி படைத்த குடும்பமாகத் திகழ்ந்து வந்தது.

நேரு தனது 15-வது வயதில் இங்கிலாந்தில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு ஹாரோ பள்ளியில் உயர்நிலை படிப்பை படித்த அவர் பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள டிரினிட்டி சட்டக்கல்லூரியில் பாரிஸ்டர் (வக்கீல்) பட்டம் பெற்றார். 1916-ம் ஆண்டு நேருவுக்கு கமலாபாயுடன் திருமணம் நடந்தது.

காந்தியின் தலைமையிலான சுதந்திர போராட்டம் அவரை ஈர்த்தது. 1920-ம் ஆண்டு நடந்த ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் நேரு தீவிரமாகக் கலந்து கொண்டார். 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் நேரு தீவிரமாக ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 1945-ல் விடுதலையாகி வெளியே வந்த அவர் மீண்டும் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார்.

இந்த போராட்டத்தின் விளைவாக 1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவின் முதல் பிரதமராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் பதவிக்கு வந்ததுமே நாட்டை எந்த வகையில் முன்னேற்றலாம் என்று திட்டம் தீட்டினார். இதற்காக, திட்டக் கமிஷன் என்ற அமைப்பை உருவாக்கினார். 

அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்காக தொழில்நுட்பக் குழுவை அமைத்தார்.  ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கினார். விவசாயமும், தொழில் துறையும் ஒரே சீராக வளர்ச்சியடைய அதற்கான பிரத்யேகத் திட்டங்களைக் கொண்டு வந்தார்.  தொழிற்சாலைகள்தான் இந்தியாவின் கோவில் என்று கூறிய அவர் பெரிய தொழிற்சாலைகள் பல உருவாவதற்குக் காரணமாக இருந்தார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு அணுசக்தி மிகவும் அவசியம் என்று கருதிய அவர் அணுசக்திக் கழகத்தை உருவாக்கினார். உயர் தொழில்நுட்பக் கல்விகள் இருந்தால்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என்று நினைத்த அவர் அகில இந்திய மருத்துவக்கழகம், ஐ.ஐ.டி. கல்லூரி, இந்தியா வேளாண்மைக் கல்லூரி, தேசிய தொழில்நுட்பக் கல்லூரி போன்றவற்றை உருவாக்கினார்.

17 வருடம் தொடர்ந்து பிரதமராக இருந்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து சென்ற நேரு 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்தியா இன்று உலக அளவில் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு நேரு அமைத்த அடித்தளம்தான் காரணம். குழந்தை மனம் படைத்த இதே நேருதான் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து நாட்டை விட்டே வெளியேற செய்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர் தினமும் தன் மேலாடையில் ஒரு ரோஜா பூ அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் “ரோஜாவின் ராஜா” என்று அன்புடன் அழைக்கப் படுகிறார்.

திருக்குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.                                     (குறள்:12)

நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

Rain produces good food, and is itself food.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.                          (குறள்:70)

தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

(So to act) that it may be said “by what great penance did his father beget him,” is the benefit which a son should render to his father.