14. இலக்கணம் – வினைச்சொல்

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் செயலை (வினையை) உணர்த்துவதாகும்.

எடுத்துக்காட்டு:

  • கண்ணன் ஓடினான்.

இந்த வாக்கியத்தில் ஓடினான் அல்லது ஓடு வினைச்சொல்லாகும்.

  • சூர்யா பாடுகிறான்.

என்ற வாக்கியத்தில் பாடுகிறான் அல்லது ‘பாடு’ வினைச்சொல்லாகும்.

ஒரு பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல்லுக்கு வினைச்சொல் என்று படித்தோம்.

  1. அம்மா அழைக்கிறாள்
  2. பாப்பா வருகிறாள்

என்னும் தொடர்களில் அம்மா, பாப்பா என்னும் பெயர்கள் உயிர் உள்ளவர்களைக் குறிக்கும்.

  1. நிலம் அதிர்ந்தது.
  2. நீர் ஓடுகிறது.

என்னும் தொடர்களில் உள்ள நிலம், நீர் என்னும் பெயர்கள் உயிரற்ற பொருள்களைக் குறிக்கும். ஆகவே, பெயர்ச்சொல்லின் (உயிர்ப்பொருள், உயிரற்ற பொருள்) தொழிலையே வினை என்கிறோம்.

வினைச் சொற்களை முற்றுவினை, எச்சவினை என இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு செயல் முடிவு பெற்றால் அந்த வாக்கியத்தில் வரும் வினைச்சொல் ‘முற்று’ எனப்படும். ஒரு செயல் முடியாவிட்டால் அந்த வாக்கியத்தில் வரும் முடிவு பெறாத வினைச்சொல் ‘எச்சம்’ எனப்படும்.

  • கோபால் எங்கள் வீட்டிற்கு வந்தான்.

இதில் ‘வந்தான்’ என்பது முடிந்து விட்ட செயலைக் காட்டுகிறது.  எனவே அது வினைமுற்று. வினைமுற்றுவை ஒரு தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைகளாகப் பிரிக்கலாம். தெரிநிலை வினைமுற்று காலத்தை வெளிப்படையாகக் காட்டும். குறிப்புவினைமுற்று பொருளின் காலத்தைக் குறிப்பாக  உணர்த்தும்.

  • குழந்தை அழுகிறது. – இதில் அழுகிறது என்ற வினைமுற்று நிகழ்காலத்தைக் காட்டுகிறது.
  • அவன் தச்சன். – இதில் ‘தச்சன்’ என்னும் சொல் தச்சு வேலை செய்பவன் என்று வினையைக் காட்டினாலும் காலத்தை தெளிவாகக் காட்டவில்லை.

எச்சவினையைப் பெயரெச்சம், வினையெச்சம் எனப் பிரிக்கலாம்.

  • அவன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டான்.

இதில் ‘வந்து’ என்பது வினையெச்சம் (வந்து என்பதற்குப் பிறகு ஒரு வினைச்சொல் வந்ததால் அது வினையெச்சம்.

  • அவனுடன் வந்த பையனும் சாப்பிட்டான்.

இதில் ‘வந்த’ என்பது பெயரெச்சம் (வந்த என்பதற்குப் பிறகு ஒரு பெயர்ச்சொல் வந்ததால் அது பெயரெச்சம். வினைச்சொற்கள் எவ்வாறு, காலம், திணை, பால், எண், இடம் ஆகியவற்றை காட்டும் என்பதை நாம் மேல் வகுப்புக்களில் படிக்கலாம். நாம் மேல் வகுப்பில் பெயரெச்சம், வினையெச்சம் பற்றி விரிவாகப் படிக்கலாம்.