13. கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்து மரத்தை அலங்கரிப்பதில் தொடங்குகிறது. ஃபர் மரங்களைக் கிறிஸ்துமஸுடன் இணைத்துக் கொண்டாடிய புகழ் ஜெர்மனியரையே சாரும். கி.பி.எட்டாம் நூற்றாண்டு அளவில் போனியாஸ் என்ற கிறிஸ்தவ பாதிரியார், ஜெர்மனிக்கு இறைச் சேவைக்காக வந்தார். ஒரு கிறிஸ்துமஸ் நாளில் இவர் ஒரு ஃபர் மரத்தை ஆசீர்வதித்து குழந்தை இயேசுவுக்கு அதைக் கொடுத்தார். அன்று முதல் ஃபர் மரம் கிறிஸ்துமஸ் மரம் ஆனது. அதிலிருந்து ஒவ்வொரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போதும் இம்மரம் வீடுகளில் நடப்படுகிறது.

1841 ஆம் ஆண்டில் ஜெர்மானிய இளவரசர் அல்பட், இங்கிலாந்து அரண்மனையில் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை நட்டு, அதில் பல பரிசுப் பொருள்களைப் கட்டித் தொங்க விட்டார். மரத்தைச் சுற்றிலும் மெழுகுவத்திகளை ஏற்றி வைத்தார். பின்பு இப்பரிசுப் பொருள்களைப் பலருக்கும் வழங்கினார். இதன் பின்னரே கிறிஸ்துமஸ் மரம் இங்கிலாந்து முழுவதும் அமைக்கப்பட்டது. இத்தாலியில் இம்மரத்தைச் சுற்றிலும் வண்ண வண்ண மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து பாடல்களைப் பாடி மகிழ்கின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பாகவே எல்லோர் வீடுகளிலும் பெரிய நட்சத்திரம் தொங்க விடுவர். இயேசு கிறிஸ்து பிறந்தபோது அதனை அறிவிக்கும் படியாக விண்ணில் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியது. எனவேதான் இந்த ஸ்டார் அமைக்கும் பழக்கம் வந்தது.

அப்போது ஆயர்கள் ஆடுமேய்த்துவிட்டு இரவில் தூங்கிய போது வானில் இருந்து தேவதை ஒன்று தோன்றி, பயப்படாதீர்கள் உங்களுக்கெல்லாம் மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் செய்தி ஒன்றை சொல்கிறேன். மக்களின் பாவத்தை போக்க கிறிஸ்து என்னும் ரட்சகன் பிறந்துள்ளார் என்று அறிவித்தார்.

அதன் பிறகு அவர்கள் இயேசு குழந்தையைக் கண்டு வணங்கி மகிழ்வுற்றனர். இவற்றை நினைவு கூறும் வகையில்தான் குடில்கள் அமைத்து, நட்சத்திரங்களை தொங்கவிட்டு, பரிசுபொருள்கள் கொடுத்து தங்கள் சந்தோஷத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர்.

இன்றும் எதியோப்பியாவில் ஒவ்வொரு மாதமும் கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றனர். மார்ச் மாதத்தில் மட்டும் விருந்துக்கு பதிலாக உபவாசம் இருக்கின்றனர். பால், வெண்ணெய், இறைச்சி, மீன் முதலியவற்றை உண்ணாமல் இருக்கின்றனர்.

ஸ்கண்டிநேவியாவில் கிறிஸ்துமஸ் விழாவை பறவைகளுக்கு விருந்தளிப்பதன் மூலம் கொண்டாடுகின்றனர். கோதுமைக் கதிர்களைத் தூண் போலக் கட்டி வயல்வெளியில் வைத்து விடுகின்றனர். இதன் கீழேயும் தானியங்களைப் பரப்பி வைத்திருப்பர்.

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விழா பழக்கம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். மற்ற நாடுகளில் எல்லாம் இந்த நேரத்தில் பனி மூடிக் கிடக்கும். ஆகவே, அதை வயிட் (white) கிறிஸ்துமஸ் என்று அழைப்பர். ஆனால், ஆஸ்திரேலியாவிலோ இது அவர்களுக்கு, வேனில் காலத்தின் இடைப்பகுதி. ஆகவே, கிறிஸ்துமஸ் நாளை சுற்றுலா சென்றும் மிகழ்ச்சியாக செலவழிக்கின்றனர்.

அயர்லாந்து நாட்டினர் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தின இரவு ஜன்னல் ஓரங்களில் விளக்குகளை எரியவிடுவர். யோசப்பும், மரியாளும் குழந்தை பிறக்கும் நேரத்தில் இடமில்லாமல் தவித்தது போல் இன்று எவரும் தவிக்காமல் எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைக்கும் விளக்குகளாம் அவை.

கிறிஸ்துமஸ் நாளன்று பசுக்களுக்கு ராஜ மரியாதை செலுத்துகின்றனர் இத்தாலிய மக்கள். அன்று பசுக்களைக் குளிப்பாட்டி, அவைகளுக்கு விசேஷ மரியாதை செலுத்துவர்.

இயேசுநாதர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த போது, அருகிலிருந்த ஒரு பசு, மாட்டுத் தொழுவத்தில் நிலவிய கடுங்குளிரிலிருந்து இயேசு நாதரைக் காப்பாற்றுவதற்காக அவரை அவ்வப்போது நெருங்கி பெருமூச்சு விட்டு அவருக்கும் வெப்பம் கொடுத்ததாம். எனவே இத்தாலியர்கள் கிறிஸ்துமஸ் அன்று பசுக்களுக்கு மரியாதை செய்கின்றனராம்.

ஹோலந்து தேசத்து குழந்தைகளுக்கு டிசம்பர் மாதத்தின் ஆரம்பித்திலேயே கிறிஸ்துமஸ் பரிசுகளைக் கொண்டு வந்து கொடுத்து விடுவார் செண்ட் நிக்கொலஸ். இயேசு பிறந்த விழாவானது ஆரம்பத்தில் ஒளி விருந்து என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. அமெரிக்காவை சேர்ந்த டே என்ற பெண்மணிதான் இயேசு பிறந்த புனித நாளுக்கு கிறிஸ்துமஸ் என்று பெயர் சூட்டினாள். பிரெஞ்சு நாட்டினர் அதே நாளை நோயல் எனவும், ஜெர்மனியர் வெய்நேக்ஷன் எனவும், ஸ்பெயின் நாட்டினர், நேவிடட் எனவும், ஸ்கொட்லாந்து நாட்டினர் யூல் எனவும், இத்தாலியர் நாடோல்லே எனவும் அழைக்கின்றனர்.

திருக்குறள்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
                        (குறள்: 664)

நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
                                (குறள்: 410)

விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.

As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.