11. தாவரவியல் பூங்கா – உதகமண்டலம்

ஊட்டி என்று அழைக்கப்படும் உதகமண்டலம் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதியில்  அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் தலைநகராகவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் இடமாகவும் ஊட்டி விளங்குகிறது.  உதகம் என்றால் தண்ணீர், மண்டலம் என்றால் வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர். எனவே உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளைக் குறிக்கிறது. நீலகிரி மலைப்பகுதி எல்லோரும் பார்க்க வேண்டிய இடங்களில் மிக முக்கியமான ஒன்று. அதிலும் தாவரவியல் பூங்கா (Botanical Garden) மிக முக்கியமானதாகும்.

பச்சை பசலேன தோற்றமளிக்கும் இந்த தாவரவியல் பூங்காவில் அரிய  வகையான பேப்பர் மரம், குரங்குகள் ஏற முடியாத மரம்,  மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் போன்றவைகள் உள்ளன. இத்தாலிய வகைப் பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள், ஆர்சிட் பூக்கள், பெர்ன் ஹவுஸ் போன்றவைகள் உள்ளன. இங்கு வருடந்தோறும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் மே மாதம் மலர்க் கண்காட்சி நடத்தப்படும்.

இந்தப்பூங்கா, கீழ் பகுதியில் உள்ள பூங்கா (Lower Garden), புதிய பூங்கா (New Garden), இத்தாலிய பூங்கா (Italian Garden), பாதுகாக்கப்படும் இடம் (Conservatory),  தண்ணீர் மாடி (Fountain Terrace), சிறிய செடிகளுக்கான பூங்கா  (Nurseries) என மொத்தம் ஆறு பகுதிகளை கொண்டது. இதைத் தவிர வேறு பல பூங்காக்களும் ஊட்டியில் உள்ளன.

ரோஸ் பூங்கா  நூறாவது மலர்க் கண்காட்சியின் நினைவாக உருவாக்கப்பட்டது. இது மொத்தம் 4 ஏக்கர் பரப்பளவில் ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்னுமிடத்தில் , எல்க் மலையில் அமைந்துள்ளது. இங்கு முதன் முதலில் 1919 வகையான ரோஸ் மலர்கள் நடப்பட்டன. பின்னர் மேலும் பல மலர்கள் சேர்க்கப்பட்டு தற்போது 2241 வகையான மலர்கள் உள்ளன. இங்கு உள்ள நில மாடம் என்னுமிடத்தில் இருந்து, மொத்த பூங்காவையும் கண்டு களிக்கலாம். ஏரிப் பூங்கா ஊட்டியின் பிரதான ஏரியில் அமைந்துள்ளது. இது ஊட்டி ரயில் நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பைப் பெற்று ஊட்டியின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இந்த ஏரிப் பூங்கா, மாலை நேரங்களில் இயற்கையின் அழகை ரசிக்க உகந்த இடம். மேலும் 1978ஆம் ஆண்டு கண்ணாடியால் ஆன பூங்கா ஒன்றும் இங்கு உருவாக்கப்பட்டது. ஏரியைச் சுற்றி யூகலிப்டஸ் மரங்களும், சிறுவர் பூங்காவும், சிறுவர் ரயிலும் உள்ளது.

மான் பூங்கா, ஏரி பூங்காவின் அருகில் அமைந்துள்ளது. இந்தியாவில் மிக உயரத்தில் அமைந்திருக்கும் பல பூங்காக்களில் இந்த பூங்காவும் ஒன்று. ஊட்டியின் அருமையான வானிலையில் வனவிலங்குகளைக் காண இந்த பூங்கா பெரிதும் உதவியாய் இருக்கிறது. தமிழக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்தப் பூங்கா ஊட்டியில் இருக்கும் சில முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.

ஊட்டியில் மேலும் பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, படகு இல்லம், அருங்காட்சியகம்,   தொட்டபெட்டா சிகரம், பைகாரா நீர்வீழ்ச்சி.  எல்லாவற்றிற்கும் மேலாக நீலகிரி மலை ரயில் பயணம் மிகவும் அழகான ஊட்டியின் இயற்கை வளத்தைக் காண உதவும்.

திருக்குறள்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.                               (குறள்:788)

பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.                                (குறள்:50)

மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.