10. இலக்கணம் – பெயர்ச்சொல்

பொருட்கள், நபர்கள், இடங்கள் போன்றவற்றை குறிக்கும் பெயர்கள் அல்லது சொற்கள் பெயர்ச்சொற்களாகும்.

தமிழில் பெயர்ச் சொற்களை ஆறு வகைகளாகப் பிரித்துள்ளார்கள். அவை

  1. பொருட் பெயர்
  2. இடப் பெயர்
  3. காலப் பெயர்
  4. சினைப் பெயர்
  5. பண்புப் பெயர்
  6. தொழிற் பெயர்

பொருட்களுக்கு அல்லது நபர்களுக்கு இட்டு வழங்கபெரும் பெயர்ச்சொற்களை பொருட்பெயர் என்றழைப்பர்.

உதாரணமாக:             பை, மரம், காய், கனி

முத்து, பேச்சியப்பன், கருப்பசாமி.

மலர்விழி, தேன்மொழி, அம்மன்.

புல், மீன், நாய், யானை.

இடப்பெயர் ஓர் இடத்திற்கான அல்லது இடத்தைக் காட்டுகின்ற பெயர்கள் ஆகும்.

உதாரணமாக: கோயில், ஊர், இந்தியா, சென்னை, மதுரை.கோப்பல், டல்லாஸ், அமெரிக்கா.

காலத்தைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் காலப் பெயர்கள் எனப்படுகின்றன.

உதாரணமாக        ஆண்டு, வினாடி, கிழமை.

மாசி, பங்குனி, இளவேனில் கோடைக் காலம்.

பொருள்களின் உறுப்புகளைக் குறிக்கும் பெயர் சினைப் பெயர் எனப்படும். சினை என்றால் உறுப்பு என்று பொருள்.

உதாரணமாக: கை, கண், கிளை, இலை

பண்புப் பெயர் என்பது ஒரு பொருளின் பண்பைக் குறித்து நிற்கும் பெயர்ச்சொல்லைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக நீலம் என்பது நிறமாகிய பண்பைக் குறிப்பதால், அது ஒரு பண்புப் பெயர் ஆகும். இவ்வாறே, நீளம், மென்மை, புளிப்பு போன்ற சொற்களும் பண்புப் பெயர்களாகும். சில சமயங்களில், பண்புப் பெயரை, நிறம், வடிவம், அளவு, சுவை என்பன போன்ற அடிப்படைகளில் வகைப்படுத்துவதும் உண்டு. பண்புப்பெயரைக் குணப்பெயர் என்றும் வழங்குவர்.

உதாரணமாக: வடிவம் : வட்டம், சதுரம், முக்கோணம்

சுவை : இனிப்பு, இனிமை, கசப்பு, துவர்ப்பு

அளவு : ஒன்று, ஒருமை, மூன்று

குணம் : நன்மை, தீமை, பெருமை, வன்மை, நல்லன், இனியன்.

ஒரு செயல்பாட்டை உணர்த்தும் பெயர்ச்சொல் தொழிற்பெயர் எனப்படும்.

உதாரணமாக:       செயல், செய்கை, செய்தல்.

                  நடத்தல், ஓடுதல், மகிழ்தல்.

                  பறித்தல், சுவைத்தல், சிரித்தல்.

குறிப்பு: பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது.