09. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வசித்து வந்தன. கோபுரத்தில் கும்பாபிஷேக வேலைகள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன. செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன.

தானியத்தை உலர்த்தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்துப் பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து, மறுநாள் அதன்படி தயார் செய்து வலை விரித்தான். அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் ஒன்றாக இறக்கையை விரித்து வலையோடு  பறக்க ஆரம்பித்தன.

உடனே வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின.

உடனே நீல நிறப் புறாக்களும்  “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தது. அதனால் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது. இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக “ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களுக்கு நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

திருக்குறள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.                                  (குறள்:314)

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.                          (குறள்:411)

செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.