தமிழ் மொழியில் பயன்படும் சொற்களின் பயன்பாட்டை எளிதாக விளங்கிக் கொள்வதற்கும், கற்பதற்கும் சொற்களை பல்வேறு கூறுகளாக வகைப்படுத்தியுள்ளார்கள். அவைகள “பேச்சின் கூறுகள்” அல்லது “சொற்களின் வகைகள்” என்றும் கூறுவர்.
இவ்வாறு சொற்களை எட்டு வகைகளாகப் பிரித்துள்ளார்கள். அவைகள்:
- பெயர்சொற்கள்(Nouns)
- சுட்டுப்பெயர்ச்சொற்கள் / பிரதிப் பெயர்ச்சொற்கள் (Pronouns)
- வினைச்சொற்கள் (Verbs)
- பெயரெச்சங்கள் / பெயருரிச்சொற்கள் / பெயரடை (Adjectives)
- வினையெச்சங்கள் / வினையுரிச்சொற்கள்/ வினையடை (Adverbs)
- முன்னிடைச்சொற்கள் (Prepositions)
- இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள் (Conjunctions)
- வியப்பிடைச்சொற்கள் (Interjections)
இதைத் தவிர
- வினாச்சொற்கள்
- நிபந்தனை சொற்கள்
என்பவையும் உண்டு.
பெயர்சொற்கள்: பொருட்கள், நபர்கள், இடங்கள் போன்றவற்றை குறிக்கும் பெயர்கள் அல்லது சொற்கள் பெயர்ச்சொற்களாகும்.
எடுத்துக்காட்டாக: புத்தகம், அதிகாரி, மதுரை, கந்தன், தமிழ்.
சுட்டுப்பெயர்ச்சொற்கள் / பிரதிப் பெயர்ச்சொற்கள்: ஒன்றின் அல்லது ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல்; அதற்கு பதிலாக சுட்டிக்காட்டி பேசுவதற்கு பயன்படும் சொற்கள் சுட்டுப்பெயர்கள் அல்லது சுட்டுப்பெயர்ச்சொற்கள் என அழைக்கப்படும்.
எடுத்துக்காட்டாக: அவன், அவள், அது, அவனை, அவளை.
வினைச்சொற்கள்: வினையை அல்லது செயலை குறிக்கும் சொற்கள் வினைச் சொற்களாகும்.
எடுத்துக்காட்டுகள்: செய், வா, பேசு, கேள், போ.
பெயரெச்சங்கள் / பெயரடைகள் / பெயருரிச்சொற்கள்: ஒரு பொருளின், இடத்தின், நபரின் (பெயரின்) குணத்தினை அல்லது தன்மையை மேலும் விவரித்துக்கூற பயன்படும் சொற்கள் பெயரெச்சங்களாகும். இவை சுட்டுப்பெயர்களை விவரித்துக்கூறவும் பயன்படும்.
எடுத்துக்காட்டாக: சிகப்பு, மஞ்சள், பெரிய, சிறிய, அழகான
வினையெச்சங்கள் / வினையடைகள் / வினையுரிச்சொற்கள்: வினையின் அல்லது செயலின் தன்மையை மேலும் விவரித்து பேசுவதற்கு பயன்படும் சொற்கள் வினையெச்சங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டாக: கோபமாக, உண்மையாக, வேகமாக, மென்மையாக
முன்னிடைச்சொற்கள்: ஒரு வாக்கியத்தின் பெயர்சொற்களுக்கும் சுட்டுப்
பெயர்சொற்களுக்கும் முன்பாக/உடன் பயன்படும் சொற்கள் முன்னிடைச்சொற்களாகும்.
இவைகளைப் பற்றி மேலும் விரிவாக வேற்றுமை உருபுகள் பற்றிய பாடத்தில் படிக்கலாம்.
எடுத்துக்காட்டாக: கீழே, மேலே, ஆக, இருந்து, உடன்.
இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்: இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் மற்றும் வாக்கியங்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தும் சொற்கள் இணைப்புச்சொற்களாகும். இதனை இடையிணைப்புச் சொற்கள் என்றும் கூறலாம்.
எடுத்துக்காட்டாக: உம், ஆனால், அல்லது, ஏனெனில்
வியப்பிடைச்சொற்கள்: பேச்சின் பொழுது வியப்பு, ஆச்சரியம் போன்ற உணர்வை வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் வியப்பிடைச்சொற்களாகும்.
எடுத்துக்காட்டாக: ஐயகோ, ஆகா, ஓகோ
வினாச்சொற்கள்: பேச்சின் பொழுது கேள்வியை வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் வினாச்சொற்களாகும்.
எடுத்துக்காட்டாக: எங்கே, எப்படி, ஏன், யார், எப்போது
நிபந்தனைச்சொற்கள்: பேச்சின் பொழுது நிபந்தனையை வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் நிபந்தனைச்சொற்களாகும்.
எடுத்துக்காட்டாக: வந்திருந்தால், போயிருந்தால், பார்த்திருந்தால் இனி அடுத்த வகுப்புகளில் ஒவ்வொரு பேச்சின் கூறுகளைப் பற்றி விரிவாகப் படிக்கலாம்.