07. தீபாவளித் திருநாள்

தீபாவளி அனைத்து இந்தியர்களாலும் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. தீபாவளி பண்டிகை நம் மனத்தையும், நட்பையும், உறவுகளையும் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் எல்லோருக்கும் மனதில்  புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தித் தருகிறது. அப்படிப்பட்ட, தீபாவளிப் பண்டிகை பற்றித் படித்துத் தெரிந்து கொள்வோம்.

ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்தார். அசுரன் அழிந்த நாளை மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து, தீபாவளியாக கொண்டாடுகிறோம். பேராசை, பெருங்கோபம், பொருட்பற்று, பகுத்தறிவின்மை, கர்வம், பொறாமை ஆகிய தீய குணங்கள், அசுரர்களுக்கு இணையானவை. பட்டாசைப்போல் இவை பொசுங்கி, நாம் நற்குணங்களுடன் திகழவேண்டும் என்கிற தத்துவமும் இதில் அடங்கியிருக்கிறது.

தீபாவளித் திருநாள் கண்ணைக் கரிக்கும் எண்ணெய் குளியலுடன் ஆரம்பிக்கிறது. அதுவும் அதிகாலையில்  சூரிய உதயத்திற்கு முன் காய்ச்சின நல்லெண்ணெய்யை உடல் முழுவதும் தேய்த்து சற்று நேரம் ஊற வைத்து இளம் சூடான வெந்நீரில் ஒரு குளியல். இதனை, தீபாவளி நாளில், ”கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று விசாரித்துக் கொள்வது வழக்கம்.

பிறகு எல்லாரும் புத்தாடை அணிந்து கொள்கிறோம்.  புத்தாடை உடுத்தி, இறைவனையும் பெரியோர்களையும் பணிந்து, வணங்குகிறோம். பெரியோரை வணங்கும் பழக்கம், நம் பணிவை வளர்க்கிறது. நமது ஆணவ, அகங்காரத்தை போக்கிச் செம்மைப்படுத்துகிறது.

தீபம் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை. தீபாவளி என்றால், தீபங்களின் வரிசை. முற்காலங்களில், தீபாவளியன்று, வரிசையாக விளக்கேற்றி வழிபடுவார்கள். அந்த வழக்கம் காலப்போக்கில் மாறிவிட்டது. மேலும் இந்த நன்னாளில், ஸ்ரீமகாலட்சுமி மற்றும் ஸ்ரீகுபேர பூஜைகளைச் செய்து வழிபடுகின்றனர்.

அதன் பிறகு பலகாரம் சாப்பிடுகிறோம். வீட்டில் பல இனிப்பு மற்றும் காரவகைகள் செய்திருப்பார்கள். முதலில் இஞ்சி அல்வா, பிறகு நாம் சாப்பிடப் போகும் பலகாரங்கள் ஜீரணிக்க இது உதவும். இனிப்புகளை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, நாமும் சாப்பிட்டு, அனைவருக்கும் வழங்குகிறோம். எல்லோரும் இன்பத்தை நாம் உணர்ந்து, பிறருக்கும் அந்த இன்பத்தை வழங்க வேண்டும். அதனை வலியுறுத்தவே, இனிப்பு வழங்குகிறோம்.

அடுத்து எல்லாக் குழந்தைகளும் விரும்பும் பட்டாசுகள். யார் வீட்டில் முதலில் பட்டாசு வெடிக்கும் என்பதில் குழந்தைகளுக்குள் ஒரு போட்டியும் உண்டு. ஒவ்வொரு வருடமும் புதுவகையான பட்டாசுகள் கடைகளுக்கு வரும். குழந்தைகள் ஒவ்வொரு கடையாக சென்று பட்டாசுகள் வாங்கி வருவார்கள். ஓலை வெடி, அணுகுண்டு, சர வெடி, பொட்டு வெடி, பாம்பு வெடி, ராக்கெட் வெடி, ரயில் வெடி, துப்பாக்கியில் போடும் சுருள் வெடி, மத்தாப்பூ, பூந்தொட்டி, சாட்டை மத்தாப்பூ என்று பல விதமான வெடிகள் உண்டு.

தீபாவளி சில பகுதிகளில் மூன்று நாட்களுக்கு கொண்டாடப் படுகிறது. முதல் நாள், லக்ஷ்மி பூஜை. இரண்டாம் நாள் தீபாவளி, மூன்றாம் நாள் நண்பர்களையும் உறவினர்களையும் சென்று பார்க்கும் நாள். நண்பர்களுடன் சேர்ந்து புது திரைப்படம் காணச் செல்வார்கள். சாயங்காலம் குடும்பத்தினருடன் சேர்ந்து கோயிலுக்குச் செல்வார்கள். 

நமக்கு அதிகப்படியான உறக்கம், சோர்வு, பயம், கோபம், சோம்பல், காலந் தாழ்த்திச் செயல்படுதல் போன்ற தீய குணங்களைத் தள்ளி உற்சாகம், புத்துணர்ச்சி, நட்பு, அன்புடன் பகிர்தல் போன்ற நற்குணங்களைக் தரும் தீபாவளியைக் கொண்டாடுவோம்.

திருக்குறள்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.                            (
குறள்:236)

பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது.

If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.                               
(குறள்:26)

பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

The great will do those things which are difficult to be done; but the mean cannot do them.