06. இலக்கணம் – சார்பெழுத்துக்கள்

முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள் எனப்படும். அவை,

உயிர்மெய் ஆய்தம்
உயிரளபெடை ஒற்றளபெடை
குற்றியலுகரம் குற்றியலிகரம்
ஐகாரக் குறுக்கம் ஒளகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம்

என்னும் பத்து ஆகும்.

உயிர்மெய்

மேற்கண்ட பட்டியலில் உள்ள எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் எனப்படுகின்றன. மெய்யெழுத்துகளுடன் உயிர் எழுத்துகள் சேர்வதால் உண்டாகும் எழுத்துகளே உயிர்மெய் எழுத்துகள் ஆகும். எனவே இவை 18 (மெய் எழுத்துகள்) x 12 (உயிர் எழுத்துகள்)=216 (உயிர்மெய் எழுத்துகள்) ஆகும்.  

உயிர்மெய் எழுத்து எவ்வாறு உருவாகிறது என்று முந்தைய வகுப்பில் விரிவாகப் படித்துள்ளோம். மீள்பார்வையாக ‘க’ என்ற எழுத்தை எடுத்துக் கொள்வோம்.

‘க்’ என்ற எழுத்து வடிவம் ‘க’ என்ற எழுத்தில் உள்ளது. எனவே இது மெய் எழுத்தைச் சார்ந்து வருகிறது என்பது தெரிய வருகிறது.

‘க’ என்ற எழுத்தைச் சொல்லிப் பாருங்கள்.

க் + அ; க்அ = க.

‘க்’ என்ற மெய் எழுத்து முதலிலும் ‘அ’ என்ற உயிர் எழுத்து இரண்டாவதாகவும் இணைந்து ஒலிக்கக் ‘க’ என்ற எழுத்து கிடைக்கிறது. எனவே ‘க’ என்ற எழுத்து உயிர், மெய் என்ற இரண்டையும் சேர்ந்து ஒலிக்கும் எழுத்து என்பது தெரிய வருகிறது.

இதுபோலவே மேற்காட்டிய 216 எழுத்துகளும் முதல் எழுத்துகளைச் சார்ந்தே ஒலிக்கின்றன.

உயிர்மெய் எழுத்துகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை குறில், நெடில் ஆகியன. குறுகிய ஒலிகளுடைய எழுத்துகள் குறில் எழுத்துகள் எனப்படும். நெடிய ஒலிகளுடைய எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்படும் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.

அ, இ, உ, எ, ஒ என்ற குறில் உயிர் எழுத்துச் சார்பாகப் பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் குறில் எழுத்துகள் ஆகும்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற நெடில் உயிர் எழுத்துகளின் சார்பாகப் பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்படும்.

இது தவிர இந்த எழுத்துகளை அவற்றின் மெய் ஒலிகள் அடிப்படையில் இன்னும் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை வல்லினம், மெல்லினம், இடையினம் என்பனவாகும்.

க், ச், ட், த், ப், ற் என்னும் எழுத்துகளைச் சார்ந்து பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் வல்லின உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.

ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் எழுத்துகளைச் சார்ந்து பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் மெல்லின உயிர்மெய் எழுத்துகள் எனப்படும்.

ய், ர், ல், வ், ழ், ள் என்னும் எழுத்துகளைச் சார்ந்து பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் இடையின உயிர்மெய் எழுத்துகள் எனப்படும்.

ஆய்தம்

ஃ என்ற எழுத்து ஆய்தம் எனப்படுகிறது. இதனை அஃகு என்று கூறுவர். ஃ என்ற இந்த எழுத்து ‘அ’ என்ற உயிர் எழுத்தையும் ‘கு’ என்ற உயிர்மெய் எழுத்தையும் சேர்த்தே ஒலிக்கப்படும்.

உயிர் எழுத்தை முதலாகவும், வல்லின உயிர்மெய் எழுத்தை இறுதியாகவும் கொண்டு இது இடையில் வரும். தனித்து வராது. எனவே இது சார்பெழுத்து எனப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, அஃது, எஃது. மற்ற எட்டு வகை சார்பெழுத்துக்களைப் பெரிய வகுப்புகளில் படிக்கலாம்.