05. தேசத் தந்தை மகாத்மா காந்தி

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார்.

அவர் பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். அவர் தன்னுடைய சிறு வயதில் அரிச்சந்திரா நாடகத்தைப் பார்த்து தானும் உண்மை பேசுவதைக் கடைப்பிடித்தார்.

தன்னுடைய 13 ஆம் வயதில் கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார். பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பினார்.

1893 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு பணிபுரியச் சென்றார்.  அப்போது தென் ஆப்பிரிக்காவில் நிறப் பாகுபாடு வெகுவாக நிலவியது. அவர் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்டார்.  மற்றொரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்டது.

தென்னாப்பரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் உதவ இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கினார்.  பிறகு அகிம்சை வழியில் நடைபெற்றப் போராட்டத்தில் கலந்துகொண்டு, அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்டார் மகாத்மா காந்தி.

இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட  இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். பின்னர் அதன் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.

மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தினார். இந்த ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியாச் சுவடுகள் ஆகும்.

திருக்குறள்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.                           (குறள்:595)

நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.

The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men’s greatness proportionate to their minds.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.                                 (குறள்:10)

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

None can swim the great sea of births but those who are united to the feet of God.